tamilnadu

img

இந்த வளர்ச்சி இங்கு வேண்டாம் பிரதமரே! - அ.அன்வர் உசேன்

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாடு/ கேரளாவில் சில தொகுதிகளிலா வது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு உருவாகி யுள்ளது. இந்தியா அணி மேலும் மேலும் தொகுதி பங்கீடுகளில் முன்னேற்றம் காணவே பா.ஜ.க. பீதியடைய தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி 27, 28 தேதிகளில் தமிழ்நாடு வந்தார். தனது வழக்க மான பொய்களையும் வாய்ப் பந்தல்களையும்  அவிழ்த்துவிட்டார். இந்த கலை யில் அவருக்கு நிகர் அவரே! பிரதமர்  கூறினார்: “இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ற வேகத்தில் தமிழ்நாடும் வளர வேண்டும் என்பது எனது தீர்மானகரமான உறுதி”  அதற்கு அவர் இரு உதாரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் ஒன்று எய்ம்ஸ் மருத்துவமனை. இதனை சாதனையாக சொன்னார். பாவம்! பிரதமர்! எய்ம்ஸ் ஒற்றைச் செங்கலுடன் இருப்பதையும் தமிழ்நாடு மக்கள் கோபத்துடன் இருப்பதையும் எவரும் அவரிடம் சொல்லவில்லை போலும்!  மேலும் பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 50 லட்சம் பேர் தமிழ்நாட்டு மக்கள் பயன் பெற்றனர் எனவும் அவர் கூறினார். இந்த பிரச்சனையிலும் பிரதமரின் உரை தயாரிப்பாளர்கள் சரியாக கவனம் செலுத்தவில்லை போல தெரிகிறது. இந்த திட்டம் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் மருத்துவக் காப்பீடு பரவலாக செயல்பட்ட தையும் மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் சிறந்து விளங்குவதையும் பிரதமர் உரை தயாரிப்பாளர்கள் மறைத்துவிட்டார்கள். அல்லது தமிழ்நாட்டு மக்கள் இந்த பொய்களை உண்மை என நம்பிவிடுவார்கள் என நினைத்தனர் போலும்!

வளர்ச்சி எத்தகையது? யாருக்கானது?

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தமிழ்நாடு வளரவில்லை எனும் பிரதம ரின் கூற்று உண்மையா? பல தரவுகள் பிரதமரின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதையே வெளிப்படுத்துகின்றன. “கேர் எட்ஜ்” எனும் ஒரு தனியார் நிறுவனம் 2023ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் மாநிலங்கள் வளர்ச்சி பற்றிய தர வரிசையை வெளியிட்டது. இது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்பதை மனதில் நிறுத்த வேண்டியது அவசியம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சமூக வளர்ச்சி பற்றிய ஆழமான முனைப்பு கிடையாது. அவர்கள் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுக்கு 50 சதவீத வெயிட்டேஜ் தரும் பொழுது சுகாதாரத்துக்கும் கல்விக்கும் தலா 5சதவீத வெயிட்டேஜ் மட்டுமே தருகின்றனர். அப்படியிருந்தும் தமிழ்நாடும் கேரளாவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளன என்பதை 17 பெரிய மாநிலங்கள் பற்றிய தர ஒப்பீடுகளை கீழ்க்கண்ட தரவுகள் தெரி விக்கின்றன: சமூக வளர்ச்சியில்  17 மாநிலங்களில் கேரளா முதல் இடத்தையும் தமிழ்நாடு 2ஆவது இடத்தையும் பெறுகிறது. பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தை யும் உள்கட்டமைப்பு வசதிகளில் 3ஆவது இடத்தையும் பெறும் குஜராத் சமூக வளர்ச்சியில் 11ஆவது இடத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன? தொழில் வளர்ச்சி யின் பலன்கள் குஜராத்தில் சாதாரண மக்களுக்கு செல்வது இல்லை. மாறாக வசதி படைத்தவர்களின் பைகளை நிரப்புகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் கணிசமானவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதில் என்ன ஆச்சர்யம் உள்ளது?  இந்த ஒப்பீடில் கூட பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் ஆட்சி உள்ள மத்தியப் பிரதேச மும் உத்தரப் பிரதேசமும் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன. இதே போல சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் குஜராத், ம.பி, உ.பி. ஆகிய மாநிலங்கள் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பின்னால்தான் உள்ளன.  அதே சமயத்தில் நிர்வாகம் எனும் பிரிவில் உ.பி.யும் ம.பி.யும் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு முன்னால் உள்ளன. இது முரண்பாடாகத் தோன்றும். ஆனால் இந்த மதிப்பீடு எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். தொழில் தொடங்க வரைமுறையற்ற அனுமதி/ காவல்துறையின் செயல்பாடு/நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தரும் வேகம் (அதாவது தொழிலாளர்களையும் மக்களையும் அடக்குவது என கொள்க) ஆகியவற்றின் அடிப்படையில் உ.பி.யும் ம.பி.யும் முன்னால் உள்ளன.இதில் என்ன ஆச்சர்யம் உள்ளது? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அடக்குமுறைகளுக்கு ஏது பற்றாக் குறை? நிர்வாகம் எனில் சமூக அமைதி/ குற்றங்கள் தடுக்கப்படுதல்/ பாலின சமத்துவம் ஆகியவை இந்த மதிப்பீடில் கணக்கில் கொள்ளப்படவில்லை. சமூகக் குறியீடுகளில் முன்னேற்றமில்லாத சுற்றுச் சூழலுக்கு மாசு உருவாக் கும் கட்டற்ற தொழில் வளர்ச்சிகள்தான் பிரதமர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரு வேன் என கூறுகிறாரா? அத்தகைய ஒரு வளர்ச்சி தேவைதானா?

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஒப்பீடு:

கோவிட் காலத்திலும் அதற்கு பின்னரும் கிராமப்புற மக்களுக்கு உயிர்நா டியாக இருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டம்தான்! இந்த திட்டம் இல்லையென்றால் கிராமப்புற மக்கள் எத்தகைய வாழ்வாதார துன்பங்களில் சிக்கியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு எட்டாதது. ஆனால் பிரதமர் மோடியும் ஏனைய பா.ஜ.க. தலைவர்களும் இந்த திட்டத்தை பற்றி அதிக மாக கவலைப்படுவது இல்லை. இந்த திட்டம் ஒழிந்தால் நல்லது என்பதே அவர்க ளது எண்ணம். இந்த முக்கியமான திட்டத்தில் தமிழ்நாடு/ கேரளா மாநிலங்களும் பா.ஜ.க. மாநிலங்களும் எப்படி செயல்பட்டன என்பதை “ஏஸ் குளோபல் இண்ட கிரிட்டி” எனும் சர்வதேச அமைப்பு மதிப்பீடு செய்த தரவுகள்: ஒரு தனி நபருக்கு சராசரியாக கேரளா 20,065 ரூபாயும், தமிழ்நாடு 14,039 ரூபாயும் தந்துள்ளன. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மிக சொற்பமாகவே தந்துள்ளன. அதிலும் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தை பெற்றுள்ள குஜராத் தந்த ஊதியம் வெறும் 1,336 ரூபாய்தான். அதாவது ஒரு மாதத்துக்கு தனி நபருக்கு சராசரியாக வெறும் ரூ.110 தான் குஜராத் அரசு இந்த திட்டத்துக்கு செலவு செய்துள்ளது. குஜராத்தைவிட 10 மடங்கு அதிகமாக தமிழ்நாடும் 15 மடங்கு அதிகமாக கேரளாவும் ஊதியத்துக்காக செலவு செய்துள்ளன.  சமூக வளர்ச்சியில் அக்கறையற்ற கிராமப்புற உழைப்பாளிகளை உதாசீனம் செய்கின்ற அடக்குமுறையை ஊக்குவிக்கின்ற ஒரு வளர்ச்சியைதான் தமிழ்நாட்டு க்கு தர பிரதமர் முனைகிறார் போலும். இதுதான் பா.ஜ.க.வின் வளர்ச்சித் திட்டம் எனில் தமிழ்நாட்டு மக்களின் பதில்: “ஐயன்மீர்! இத்தகைய வளர்ச்சிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு வேண்டாம்” இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும் கேரளா மக்களும் 2024 தேர்தல்களி லும் வெளிப்படுத்துவர் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!