tamilnadu

img

மகனுக்கு மறுவாழ்வு அளித்த தந்தை

சென்னை,டிச.5 சென்னையில் 4 வயது சிறுவனுக்கு சிறு குடல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆசிய அளவில் ரேலா பன்னோக்கு மருத்துவமனை  புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சிறுவனுக்கு தேவைப்பட்ட சிறு குடலை அவரது தந்தை தானமாக கொடுத்துள்ளார். இருவரும் தற்போது நலமாக உள்ளனர். சுமார் 7 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிரபல அறுவைசிகிச்சை நிபுணர் முகமதுரேலா தலைமையில் 8 மருத்துவர்கள் மற்றும் 24 செவிலியர்கள் கூட்டாக சேர்ந்து இந்த அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொண்டுள்ளனர். 150 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சிறுவனின் தந்தையின் சிறு குடலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய மருத்துவர்கள், அதனை சிறுவனுக்கு மாற்றி உள்ளனர். பெங்களூருவில் வசிக்கும் தம்பதியினரின் 4 வயது மகனுக்கு சிறு குடல் முறுக்கம் என்ற அரிதான ஆரோக்கிய சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு குடல் மாற்றம் செய்வதே இதற்கு தீர்வு என சொல்லி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் உடல் செயல்பாட்டை கவனித்து வந்த மருத்துவர்கள் அவர் வழக்கமான குழந்தைகளை போல உணவு எடுத்துக் கொண்டு வருவதை உறுதி செய்தனர்.  இதன் மூலம் சிறுவனுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.