ஹாய்... எப்படிம்மா இருக்க..
நல்லா இருக்கேன், அங்கிள்
எப்புடிப் போகுது தயாரிப்பு?
தேர்வுதான் வர மாட்டேங்குது.. முன்னாடிலாம் நினைப்பேன், இந்த டி.என்.பி.எஸ்.சிக்கு எல்லாம் ஏன் நாலு, அஞ்சு வருஷம் படிக்குறாங்கன்னு... இப்பதான் புரியுது, அப்ப ஒரு முறைதான் எழுதிருப்பாங்கனு..
உண்மைதான்.. ஆனா ஒரு தேர்வுக்குனு மட்டும் தயாராகாம பல தேர்வுகளுக்கு தயாராகுறதுதான் இப்ப நல்லது..
ஆமா.. ஆனா எப்போ பாத்தாலும் படிச்சுட்டே இருக்குற மாதிரி இருக்கு.. ஏதாவது ஒண்ணு நமக்குனு இருக்கணும்.. நமக்குப் பிடிச்சதா.. கவனமும் சிதறாமலும் பாத்துக்கணும்... கிளி வாங்கலாமா அங்கிள்..
வாங்கி என்ன பண்ணலாம்..
கூண்டுக்குள்ள வெச்சு வளர்க்கலாம்.. என்னோட ஃப்ரண்ட்ஸ் வீட்டுல பாத்துருக்கேன். அதுக்குனு சாப்பாடுலாம் தனியா இருக்கே..
அது வெளிநாட்டு வகைக் கிளிகளா..?
என்னவா இருந்தா என்ன அங்கிள்..
சட்டப்படி, பறவைகளைக் கூண்டுல அடைச்சு வெக்கக்கூடாது. விலங்கு வதைத் தடைச்சட்டம், 1960ன்படி போதிய உயரம், நீளம் மற்றும் அகலம் இல்லாதததையும் கூண்டுல அடைக்கக்கூடாது. பறவைகள்ல கிளிய மட்டும்தான் கூண்டுல வெக்கலாம். ஆனா, எல்லாக் கிளிகளையும் வெச்சுக்க முடியாது.. கடைல வாங்குறப்ப அதைக் கேட்டுக்கணும்..
ஓ.. அதான் வெளிநாட்டு வகைக்கிளிகளான்னு கேட்டீங்களா?
ஆமா... ஆஸ்திரேலிய வகையான காதல் கிளிகள், சில ஆப்பிரிக்க வகைக் கிளிகள்லாம் வளர்க்கலாம்..
மீறி மத்த கிளிகளை வளர்த்தா..?
கூண்டுக்குள்ள நாம போவோம்.. 3 வருஷம் ஜெயில்ல போடலாம்... அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபா வரைக்கும் இருக்கும்.. இப்புடி இந்திய வனச்சட்டம், 1972 சொல்லுது..
அய்யய்யோ... பெரும்பாலும் பெண்கள்தான் கிளி வளர்க்க ஆசைப்படுறாங்க.
ஆமா.. ஒடிசாவுல ஒரு அம்மா தன்னோட கிளியக் காணும்னு விளம்பரம் குடுத்தாங்க..கண்டுபிடிச்சுக் குடுத்தா 5 ஆயிரம் ரூபா சன்மானம் அறிவிச்சாங்க. கிளி கிடைச்சுது. ஆனா அவங்க அப்புடி ஒரு கிளி வளர்க்குறாங்கன்னு வனத்துறைக்கும் தெரிஞ்சு போச்சு.. வந்து வாங்கிட்டுப் போயிட்டாங்க..
ஆனா, கிளி செல்லப்பறவைதானே..
ஆமா, உலகம் முழுக்க செல்லமா வளர்க்குறதுல நாய், பூனைக்கு அடுத்து அதிகமா வளர்க்கப்படுறதுல கிளிக்குதான் மூணாவது இடம்..
உண்மைதான்... என்ன இருந்தாலும் நாய் மாதிரி வராது.. ஆனா கொஞ்சம் கஷ்டப்படணும்..
பாதுகாப்பு தரும்ல..
ஆமா நா படிச்சுருக்கேன். நாய்தான் நமக்கு முத முதல்ல செல்லப்பிராணியானதுனு. குகை ஓவியங்கள் மனித குல வரலாற்றை நமக்குச் சொல்லுது. அதுல மனுஷனோட நாய் நிக்குற ஓவியங்கள் பிரபலம்..
ஆமா.. மனுஷன் குகைல வாழ ஆரம்பிச்ச பிறகு, வெளில நாய்தான் நிக்கும்... ஏதாவது ஆபத்தான விலங்குகள் வந்தா குலைக்கும்... எச்சரிக்கும்..
இப்பகூட தெருவுல யாராவது புதுசா வந்தா குலைக்கும்..
குகைல வாழ ஆரம்பிச்சு, பின்னாடி தன்னோட இடம், வீடு, குடும்பம்.. அப்புறமா சொத்துனு வந்தபிறகுதான் மனுஷன் மாற ஆரம்பிச்சான்..
அதனால என்ன பிரச்சனை அங்கிள்..
ஆனா அதீத சொத்துதான் அடிமை முறையயும் கொண்டு வந்துச்சு.. குடும்பத்துல பெண் அடிமை... சமூகத்துல சாதி ரீதியான அடிமை.. இதுக்கு மத ரீதியான சப்பைக்கட்டுகள்.. இன்னும் நாம அதுல இருந்து முழுசா மீளலயே..
ஆமா அங்கிள்... பாத்திரம் கழுவுற விளம்பரத்துல கூட, முதல்ல கணவர் கழுவுவாரு.. அதுலயே சுத்தமாயிடும். உடனே, இணையரைப் பார்த்து ஏமாற்றுக்காரி என்பார்.. பெண்ணோட வேலைய ஆண் மேல சுமத்திட்டார்னுதானே அதுக்கு பொருள்.
சரியாச் சொன்ன.. அதே மாதிரி முறையான செல்வப்பகிர்வுதான் சமத்துவத்துக்கு கூட்டிட்டுப் போகும்..
சொத்து சேக்கக் கூடாதா..
அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சுனு சொல்லிக்குறோம். அப்படினா அளவுக்கு மிஞ்சுன சொத்தும் நஞ்சுதானே..
கிளி வாங்கல அங்கிள்.. உங்களோட பேச நாளைக்கும் வர்றேன்..