நீட் தேர்வு எழுதிய மாணவியின் மரணம் இயற்கைக்கு புறம்பானது என பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடுமுழுவதும்மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தைச்சேர்ந்த முனியசாமி மகள் சந்தியா (வயது17) மதுரையில் உள்ள தேர்வு மையத்தில் எழுதினார். தேர்வு முடிந்த பின் தந்தையுடன் அவர் வீட்டிற்கு புறப்பட்டார். மதுரையில் இருந்து அரசு பஸ்சில் சென்ற சந்தியா சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சென்ற போது திடீரென மயங்கினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை முனியசாமி பயணிகள் உதவியுடன் மகளை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சந்தியா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவி சந்தியாவின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையில் இது “இயற்கைக்கு மாறான மரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.