“டோக்கியோ டாய்லெட்” என்பது டோக்கியோவின் ஷிபுயாவில் உள்ள நகர்ப்புற மறு வளர்ச்சித் திட்டத்தால் அழகுணர்வோடு வடிவமைக்கப்பட்டது.இதன் பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பு உலக அளவில் பெயர்பெற்றது. இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆவணப்படமாக்க, ஸ்டீவன் ஸ்பீல்பர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் பட்டியல் தயாராகிறது. முடிவாக ஜெர்மானிய இயக்குனர் விம் வென்டர்ஸிடம் இப்பணி ஒப்படைக்கப்படுகிறது. ஆவணப்படத்திற்கு பதிலாக ஒரு கதைப்படமாக எடுக்கலாமே என்ற இயக்குநரின் யோசனை ஏற்கப்படுகிறது. பெர்ஃபெக்ட் டேய்ஸ் “Perfect days “ என்ற இப்படம் 2023 டிசம்பரில் வெளியாகி பார்த்தோரை வியந்து கொண்டாடச் செய்தது. 76-ஆவது கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இக்குமென்சியல் ஜூரி (Ecumenical Jury) விருதை வென்றதோடு,இப்பட நாயகன் ஹோஜி யாக்குஷோ-வுக்கு சிறந்த நடி கருக்கான விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருதுக்கு ஜப்பானிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
அதிகாலையில் எழுந்தவுடன், வீட்டிற்குள் வளர்க்கும் சிறு செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பது, வாசல் கதவைத் திறந்து விடியலின் தென்றல் தழுவ முகம் கொடுப்பது, நீலவானம் பார்த்துப் புன்னகைத்து மெளனமாய் “ஹாய்”சொல்வது, குளிர் பானத்தை பருகிக்கொண்டே, விரும்பிய பாடலை ரசித்தபடி வேனை ஓட்டிக் கொண்டு வேலைக்குச் செல்வது, பூங்காக்களில் உள்ள கழிப்பறைகளை உரிய கருவி களைக் கொண்டு முழு ஈடுபாட்டோடு சுத்தம் செய்வது, சற்றே ஓய்வின்போது மரங்களோடு மன தால் உறவாடுவது, மரங்களையும் இலைகளையும் பல கோணங்களில் ‘க்ளிக்’ செய்தவாறு உண வெடுப்பது, அவ்வப்போது மரங்களின் அடியில் துளிர்த்து வரும் செடிகளை பாதுகாப்பாக எடுத்து வீட்டில் வளர்ப்பது, வேலைமுடித்து, வீட்டிலிருந்து மிதிவண்டியில் பயணித்து நகரின் பொது சுடுநீர்த் தொட்டியில் குளிப்பது, இரவானதும் வழக்கமான கடையில் உணவருந்தி, புத்தகம் வாசிப்பது அதன்பின் அயர்ந்து உறங்குவது, வார விடு முறை நாளில் அழுக்கடைந்த துணிகளை சலவை நிலையத்தில் கொடுப்பது, நூலகம் சென்று புத்தகம் பெறுவது, தான் எடுத்த புகைப்படங்களை பிரிண்ட்டுக்கு ஸ்டுடியோவில் கொடுப்பது, மதுக்கூடத்தில் தோழியின் மெல்லிசை கானத்தை கேட்டுக் கொண்டே மது அருந்துவது, இரவில் வாசிப்புக்கு பின் உறங்கச் செல்வது,தேவை ஏற்பட்டால் மட்டுமே பேசுவது என்ற அன்றாட எளிய வாழ்க்கையில் மனநிறைவு கொண்ட கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியாளரான ஹிராயமா ஒரு தனிமையை நேசிப்பவர். இவரது உதவியாளரின் காதலி அயோ,தங்கை மகள் நிகோ மற்றும் மதுக்கூட உரிமையாளரான தோழியின் முன்னாள் கணவனின் எதிர்பாரா வருகை ஆகியவை இனிய தனிமை வாழ்வை நேசித்த ஹிராயமாவின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கதையின் திருப்பம். ஹிராயமா, தனது தங்கையை விட்டு பிரிந்த மைக்கான காரணத்தை தங்கை மகள் நிகோ கேட்கின்றாள். அதற்கவர், “இந்த உலகம், பல உலகங்களால் ஆனது; சில இணைக்கப்பட்டுள்ளன; சில அப்படி இல்லை.என் உலகம்,உன் அம்மாவின் உலகிலிருந்து மிகவும் வேறுபட்டது” எனக் கூறுகிறார். இது வாழ்க்கை பற்றிய மனிதர்களின் இருவேறு பார்வையை, அர்த்த அடர்த்தியோடு ஒருசேர உணர்த்துகிறது.
மகளை அழைத்துச்செல்ல தங்கை வர, மாமாவை விட்டுப் பிரிய மனமில்லாத நிகோவோ, புத்தகம் ஒன்று பாதி படித்த நிலையிலே உள்ளது, முழுவதும் படித்த பின் ஊருக்கு செல்வதாகக் கூறுகிறாள். ஹிராயமா, அந்த நூலகப்புத்தகத்தை அவளிடம் தந்து பிரியாவிடை கொடுக்கிறார்.உறவுகளைக் காட்டிலும் வாசிப்பு மேன்மையானது என்பதை உணர்த்துகிறது. ஹிராயமாவாக நடிக்கும் ஹோஜி யாக்குஷோ, சக்தியான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறார்.இவர் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கதைக்களத்தின் சப்தங்கள், தனியிசைப் பாடல்கள் ஆகியவை கலையம் சத்தோடு ஒத்தி சைக்கப்பட்டுள்ளன. இரவில் ஹிராயமா கனவில் வரும் மரம், இலைகள், முதிய தந்தையின் உருவம் ஆகியவை கருப்பு வெள்ளையிலும் (Impressionistic Sequences), மற்றவை வண்ணத்திலும், குறிப்பாக, விடியல் சூரியன், மதுவிடுதித் தோழியின் முதல் கணவனோடு நிழலைத் துரத்துதல் (Shadow Chase) விளையாட்டை ஆடுகின்ற காட்சிகள், நகர சாலைகளில் செல்லும் ஹிராயமா காரின் தொலை தூரக்காட்சிகள் ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்றுகளாகும். திரும்பத்திரும்ப வரும் ஹிராயமாவின் தினசரி நடைமுறைகள் துளியும் சலிப்புத்தட்டாத வகை யிலான திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு.
79 வயதாகும் இப்பட இயக்குநர் விம் வாண்டர்ஸ், 1970 முதல் ஜெர்மானிய சினிமாவில் பல தளங்களில் இயங்கி, பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றவர். உலகின் தலைசிறந்த நான்குஇயக்குநர்களில் விம் விண்டர்ஸை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்தது சரியானதே என்பதை இப்படத்தின் வெற்றி சொல்கிறது. மதுவிடுதி உரிமையாளரான பெண்ணின் முன்னாள் கணவன், கேன்சர் நோயாளி.விவாகரத்தான மனைவியை கடைசியாகப் பார்க்க வந்ததாகவும், அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஹிராயமாவிடம் விடை பெறுகிறான். இதன்பின்னர் அமெரிக்க கறுப்பின மனித உரிமைப் போராளியும், பாடகியுமான, நினா சிமோன் (Nina Simone)-ன்,
“உயரே பறக்கும் புள்ளினங்காள்
என் உணர்வினை நீங்கள் அறிவீரே
நீலவானச் சூரியனே
நீயும் அறிவாய் என் உணர்வை
உலவும் தென்றல் காற்றே என்
உணர்வினை நீயும் அறிவாயே;
புதியது விடியல்; புதியது இந்தநாள்;
புதியது எந்தன் வாழ்க்கை.
எனக்கிது இனிய அனுபவமே
அலைகடல் மீனே
எந்தன் உணர்வை
நீயும் அறிவாய்தானே;
சுதந்திர நதியே
பூத்துக் குலுங்கும்
பூமர மலர்களே
நீங்கள் அறிவீர் என் உணர்வை
பகற்பொழுதொன்றின் தட்டான்களே
களிக்கும் பட்டாம் பூச்சிகளே
நான் சொல்வதன் கருத்துப் புரிகிறதா?
நாளொன்று போக நிம்மதியாகப்
படுத்து நித்திரை கொள்ளுங்கள்
எனது கருத்து இதுவேதான்;
நேற்றைய உலகம் இன்று புதியது
ஊக்கம் தருகிற உலகமிது.
ஒளிரும் வானத் தாரகைகாள் என்
உணர்வை நீங்கள் அறிவீர்கள்
பைன்மர வாசக் காற்றே எந்தன்
உணர்வை நீயும் அறிவாயே
நான் சுதந்திரமானவன் என்பதிலே
அடையும் உணர்வே தனியன்றோ
புதியது விடியல்
புதியது இந்நாள்;
புதியது எந்தன் வாழ்க்கை.
எனக்கிது இனியஅனுபவமே”
“Feeling Good”என்ற பாடலைக் கேட்டபடி முகத்தில் துயரம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மாறி மாறி வெளிப்பட, ஹிராயமா வேனை ஓட்டிச் செல்கின்ற படத்தின் இறுதிக் காட்சி,புதிய வாழ்வு குறித்த அவரது மனக் கிளர்ச்சியையும் நம்பிக்கையையும் காட்டும் அற்புத தருணம்.