tamilnadu

img

மின்வாரியத்தை மீண்டும் பிரிக்க எதிர்ப்பு

சென்னை, செப். 21 - மின்வாரியத்தை மீண்டும் மூன்றாக  பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாழ னன்று (செப்.21) மாநிலம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் 5 துணை மின் நிலையங்களை தனியாருக்கு விட  முற்பட்டனர். இதனை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்திய போராட்டத்தால், உத்தரவை அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்தது. அப்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு  வந்ததும், மின்வாரியத்தை இ-டெண்டர் முறையில் தனியார் மயமாக்கி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரழிக்கும் வகையில்  2010ம் ஆண்டு  தமிழ்நாடு மின்சார வாரியம், டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ என  மூன்றாக பிரிக்கப்பட்டது. தனியார் மயத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் டான்ஜெட்கோவை உற்பத்தி, விநியோகம், பசுமை மின்சா ரம் என மூன்று நிறுவனங்களாக பிரிக்க  உள்ளனர்.

இவற்றை கண்டித்தும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும், கேங்மேன் பணியாளர்க ளுக்கான சலுகைகள், ஒப்பந்த ஊழியர், பகுதிநேர ஊழியர் நிரந்தரம், பணியாளர்களுக்கு பணப்பயன் நிலுவைகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மின்வாரிய மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்  நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர்  மத்திய அமைப்பு இந்த போராட்டத்தை  நடத்தியது. இதன்ஒருபகுதியாக சென்னை மண்டலம் சார்பில், மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: மின்சாரத்துறையின் ஒவ்வொரு பிரிவையும் படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதிமுக அரசு கைவிட்டதாக அறிவித்ததை திமுக அரசு அமல்படுத்த முயற்சிக்கிறது. 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த  தனியார்மய நடவடிக்கை தொடர்ந்தால்  காலிப்பணியிடங்கள் மேலும் அதிகமாகும். நிரந்தரப்பணியே இல்லாத நிலை ஏற்படும்.

லாப நட்டம் பார்க்கக்கூடாது

தற்போது, வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள 2ஆயிரம்  பேரும் நிரந்தரமற்ற தொழிலாளர்க ளாக உள்ளனர். அரசு, பகுதிநேர, கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்த ரம் செய்ய வேண்டும்.கேங்மேன்க ளுக்கு உரிய சலுகைகளை தர வேண் டும். ஊதியத்தை தாமதப்படுத்தக் கூடாது. சமூக பொறுப்பை நிறை வேற்றும் மின்சார வாரியத்தில் லாபம் நட்டம் பார்க்கக் கூடாது. இலவச மின்சாரம் அளிப்பது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு போடப்படும் மூலதனம். இதனை கணக்கில் கொள்ளாமல், மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது ஏற்புடையதல்ல; பொறுப்பற்றது. மின்உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றாமல் கூடுதல் செலவை ஏற்படுத்துகின்றனர். வெளியிடங்களில் இருந்து அநியாய விலைக்கு மின்சாரம் வாங்குவது போன்ற முறைகேடு, தவறுகளை தடுத் தால் நட்டத்தை குறைக்க முடியும். ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை விரைந்து வழங்க வேண்டும். அரசு  எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இவற்றை அரசு செய்ய  தவறினால், போராட்டத்தை தீவிரப் படுத்துவது தவிர வேறுவழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு சென்னை  மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் தலைமை தாங்கினார். அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், பொருளாளர் வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் இ.விஜயலட்சுமி,  எஸ்.கண்ணன், சாலட், ஹெலன் தேவ கிருபை, கிளை நிர்வாகிகள் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் (மேற்கு), சந்திரசேகர் (வடக்கு), வி.விஜயபாஸ்கர், டி.பண்டாரம்பிள்ளை (தெற்கு-1),  எம்.தண்டபாணி (தெற்கு-2), வி.சீனி வாசன் (மத்தியசென்னை), முத்து (ஜிசிசி), ரவி (அனல்) மற்றும் பொறியா ளர் அமைப்பின் பொருளாளர் ஆதன் இளங்கீரன் உள்ளிட்டோர் பேசினர்.