tamilnadu

img

தமிழுக்கு தமுஎகச என்றும் பெயர் சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

தமிழுக்கு தமுஎகச என்றும் பெயர்  சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

சென்னை,  ஜூலை 13- தமிழுக்கு தமுஎகச என்றும் பெயர் என சு.வெங்கடேசன் எம்.பி., பெருமிதத்தோடு கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டம் சனிக்கிழமை (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதி அமர்விற்கு தலைமை வகித்துப் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., “தமிழுக்கு அமுதென்று பெயர்” என்ற போது, “தமிழுக்கு ஜீவா” என்றும் பெயர் என்றார் பாரதிதாசன். அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தமுஎகச உள்ளது. எனவே, தமிழுக்கு தமுஎகச என்றும் பெயர்” என்றார். கீழடி அகழாய்வின் தொன்மையும், அதனை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்திய அவர், “தமிழின் ஆழமும், வேரும் தமிழ்ப் பண்பாட்டின் கேடயமாக உள்ளன. அவற்றைத் தகர்க்க சங்பரிவாரக் கூட்டம் முயற்சிக்கிறது.  மொழி உணர்வுக்கு எதிரான அரசியல் தாக்குதலை, அரசியல் கட்சிகள் கையாளும். பண்பாட்டு ரீதியான தாக்குதலை எதிர்த்து தமுஎகச தொடர்ந்து செயல்படும்” என்றார். கனிமொழி எம்.பி., திராவிட மேடைகளுக்கு முன்பாக தமுஎகச மேடைகளில் ஏறியதை நினைவு கூர்ந்து தமது வாழ்த்துரையை தொடங்கிய கவிஞர் கனிமொழி எம்.பி., “ஆணுக்கு இணையான பெண் படைப்பாளிகளை உருவாக்கி, பல விருதாளர்களை தமிழ் மண்ணுக்கு கொடுத்தது தமுஎகச.  திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் எழுதி, பேசி, போராடி உருவாக்கிய விழுமியங்கள், மொழி, மண் உரிமைகள் போன்றவற்றிற்காக மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளத்தில் உள்ள கொள்கைப் பிடிப்பு பாஜகவின் வெற்றிக்குத் தடையாக உள்ளது. அதனை தகர்க்க மொழி ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கிறது. அறிவியல் ரீதியாக நிறுவப்பட்டவைகளையும் புறக்கணிக்கிறார்கள்.  தமிழகத்தின் பெருமையை மட்டுமல்ல, சிந்தனை மரபையும் அழிக்க முயற்சிக்கிறார்கள். தமுஎகச, கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அறிவின் அரணாக நின்று இதனை தடுக்க வேண்டும்” என்றார். ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றிய தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, “காசி தமிழ்ச் சங்கம், திருவள்ளுவரைக் கொண்டாடுவது என சங்பரிவாரம் நடத்தும் அனைத்துமே ஏமாற்று வேலை. சனாதனச் சமூகத்தை கட்டமைக்க, அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கின்றனர். மொழிகளை அழிக்க முயற்சிப்பதையும் அதன் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் வெறுப்பை விதைக்கிறது. எனவேதான், ‘வெறுப்பின் கொற்றம் வீழ்க; அன்பே அறமென எழுக’ என முழக்கம் வைத்துள்ளோம். தர்மம் என்றால் அது மநுதர்மத்தையும், சனாதன தர்மத்தையும் குறிக்கும். எனவேதான் தர்மத்தை முன்வைக்கவில்லை. ‘அன்பே அறமென எழுக’ என்கிறோம்” என்றார்.