புதுதில்லி, டிச.23- டிரக் விபத்தில் பலியான இளம் தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகைக்காக அவரது பெற்றோர்களைக் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கும் நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ் நிறுவனத்தை நோக்கி, உச்சநீதிமன்ற நீதிபதி, “உங்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். கீழமை நீதிமன்றங்கள் அளித்திட்ட தீர்ப்பின்படி 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் இறந்தவரின் பெற்றோருக்கு நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ் நிறுவனம் அளித்திட வேண்டும். ஆனால் அவ்வாறு அளித்திடாமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்தே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வாயம் அந்நிறுவனத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்சத்து 64ஆயிரம் ரூபாயை அளிப்பதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் அவர்களை உச்சநீதிமன்றத்திற்கு இழுத்தடித்திருக்க வேண்டுமா என்றும் தீர்ப்பில் சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார். “மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப் படுவோரின் குடும்பங்கள் நாட்டிலுள்ள சட்டங் களின் கீழ் தங்களுக்கு உள்ள உரிமைகளை அநேகமாக உணர்வதில்லை. காரணம், இவ்வாறு பல ஆண்டுகள் நீதிமன்றங்களுக்கு அவர்கள் இழுத்தடிக்கப்படுவதும், இந்த அமைப்பால் இம்சைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்வதால், அவர்கள் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிடுகிறார்கள்,” என்றும் நீதிபதி சந்திரசூட் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இழப்பீட்டுத் தொகையான 2 லட்சத்து 64 ஆயிரத்து 895 ரூபாயுடன் இவர்களை இத்தனை ஆண்டு காலம் நீதிமன்றத்திற்கு இழுத்தடித்ததற்காக நீதிமன்ற செலவுக்காக மேலும் ஒரு லட்சம் ரூபாய் அளித்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)