கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ரூ. 2 ஆயிரம் 3 மாத மகளிர் உரிமைத் தொகை மொத்தமாக ரூ. 5,000 வரவு வைப்பு!
சென்னை, பிப். 13 - மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாயை, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது. இதனிடையே, சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், விதி களைக் காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகைக்கு தடை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தவணைகளையும் (மொத்தம் ரூ. 3 ஆயிரம்), பிப்ரவரி மாதத்தோடு சேர்த்து தமிழக அரசு வரவு வைத்துள்ளது. அத்துடன், மகளிர்க்கு கோடைக்கால சிறப்புத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து, மொத்தம் ரூ. 5 ஆயிரத்தை, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் உரிமைத் தொகையாக தமிழக அரசு வரவு வைத்துள்ளது. இதுதொடர்பாக, தமது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர், “தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்த்தார்கள். முந்திக்கொண்டது நமது திமுக அரசு!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்றும், “வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு, அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!” என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் உறுதி அடுத்தும் திமுக ஆட்சியே அமைய வுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! என்றும், “இது, என் சகோதரி களுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!” எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
