tamilnadu

img

மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாத்து வேலையின்மையைப் போக்க போராட்டங்கள்

டியாகோ மாரடோனா நகர் (சால்ட் லேக், கொல்கத்தா)மே 16- மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும் உறுதியேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு நிறைவடைந்தது. பொதுச் செயலாளர் அபோய் முகர்ஜி முன்வைத்த அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த அறிக்கை மீதான விவாதத்தில் 22 மாநிலங்களில் இருந்து மொத்தம் 53 பிரதிநிதிகள் பங்கேற்றனர். விவாதத்திற்கு அபோய் முகர்ஜி பதிலளித்தார். ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். பாசிச சக்திகளின் எல்லைமீறிய தாக்குதல்களை எதிர்கொண்டு நாட்டின் அரசமைப்பு சாசன விழுமியங்களை வாலிபர் சங்கம் பாதுகாக்கும் என்று சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.ரஹீம் கூறினார். அகில இந்திய இணைச் செயலர் பிரீத்தி சேகர் வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு காணும் வகையில், ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி மசோதா’ வரைவை தாக்கல் செய்தார். வரலாற்றில் முதன்முறையாக அகில இந்திய இளைஞர் அமைப்பின் மாநாடு வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காணும் மசோதாவை முன்மொழிந்தது. வங்கத்திலும் திரிபுராவிலும் இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும், ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வங்காளத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை உணர்த்தும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றன.

 227 பிரதிநிதிகள் சிறை சென்றவர்கள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற 461 பிரதிநிதிகளில் 227 பேர் தங்கள் அமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். கேரளாவின் வி.கே.நிஷாத் 425 நாட்கள் நீண்ட சிறைவாசத்தை அனுபவித்துள்ளார். கேரளத்தின் சதீஷ்வர்கி 126 முறை கைது செய்யப்பட்டுள்ளார். மாநாட்டில் ஒரு எம்பி (ஏ.ஏ.ரஹீம்), ஒரு மாநகராட்சி மேயர் (ஆர்யா ராஜேந்திரன்), மூன்று எம்எல்ஏக்கள், 19 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 5 உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 169 பேர் முதுகலை பட்டதாரிகள் மற்றும் 136 பேர் பட்டதாரிகள். 10 பேர் பிஎச்டி மற்றும் 6 பேர் எம்ஃபில். 151 பேர் ஓபிசி. 63 பேர் எஸ்சி, 23 பேர் எஸ்டி. 461 பிரதிநிதிகளில், 123 பேர் கேரளாவையும், 95 பேர் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள். 17 சதவிகிதம் பெண்கள். பிரதிநிதிகளின் சராசரி வயது 34. பெரும்பாலான பிரதிநிதிகள் தொழிலாளி வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள். 107 பேர் விவசாய கூலித்தொழிலாளர்கள். பிரதிநிதிகளின் தகுதி அறிக்கையை குழு கன்வீனர் வி.கே.சனோஜ் சமர்ப்பித்தார்.

உலக இளைஞர் அமைப்புகள் வாழ்த்து

இந்தியாவுக்கான கியூபா துணைத் தூதர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இடதுசாரி இளைஞர் அமைப்புகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் கியூபாவிற்கு ஆதரவளித்த வாலிபர் சங்கத்திற்கு துணைத் தூதர் ஆபெல் அப்பாஸ் டெஸ்பெயின் நன்றி தெரிவித்தார். ஏகாதிபத்திய சக்திகளும் மேற்கத்திய ஊடகங்களும் கியூபாவை வேட்டையாடும் போது வாலிபர் சங்கம் அளிக்கும் ஆதரவு மிகவும் பொருத்தமானது. சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கியூபா ஏற்படுத்துகிறது. அதே இலக்கை நோக்கி வாலிபர்  சங்கமும்செயல்பட்டு வருவதாக ஆபெல் அப்பாஸ் டெஸ்பெயின் கூறினார். வேலையின்மை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான வாலிபர்சங்கத்தின் போராட்டத்திற்கு வங்க தேசத்தின் இளைஞர் ஒற்றுமை அமைப்பின் தலைவர் சபாஹா அலிகான் காலின்ஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவைப் போலவே வங்கதேசமும் கடும் நெருக்கடியில் இருப்பதாக அவர் கூறினார். இங்கிலாந்து இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் சார்பில் பியரி மார்ஷலும், அமெரிக்காவின் இளம் கம்யூனிஸ்ட் லீகின் சார்பில் அலெக்ஸ் டில்லார்டும், இலங்கையில் சோசலிச மாணவர்கள் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் கல்பனா மதுபாஷினியும் வாழ்த்தினர். வியட்நாமில் உள்ள ஹோசிமின் கம்யூனிஸ்ட் ஒன்றியத்தின் வாழ்த்துச் செய்தியும் மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
 

;