tamilnadu

img

தபால் வாக்கு ஜனநாயக உரிமையை நிலை நிறுத்துக! தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

மதுரை, ஏப்.8-

மதுரை மக்களவைத் தொகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களது வாக்குரிமையை, ஜனநாயக உரிமையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் உறுதிசெய்ய வேண்டுமென மதுரை தொகுதிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.சு.வெங்கடேசன் சார்பாக அவரது தேர்தல் முகவர் மா.கணேசன் மதுரை ஆட்சியரிடம் திங்களன்று மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:-ஏப்.7-ஆம் தேதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறும் மையங்களில் தபால் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால்,அந்த மையங்களில் வேட்பாளர், கட்சியின் முகவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவதற்கான வழிகாட்டல்கள் ஏதும் தரப்படவில்லை. அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் அது குறித்த போதுமான புரிதலோடு இல்லையென்பதை முகவர்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.பதிவான வாக்குகளை தொகுதிவாரியாகப் பிரிப்பது வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்யப்பட வேண்டியதாகும். ஆனால், ஏப்.7-ஆம் தேதி சில மையங்களில் வாக்குப் பெட்டியிலிருந்த வாக்குச்சீட்டுகள் எடுக்கப்பட்டு பிரிக்கப்பட்டதாகவும், அவை கட்டுகளாக போடப்பட்டதாகவும் அறிய வருகிறோம். இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். வாக்காளர்களின் தெரிவை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை நெறிகளுக்கு இது முரணனானது.


90 சதவீத தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகள் கோரி உரிய முறையில்விண்ணப்பித்திருப்பதாக அறிய வருகிறோம். ஆனால், 10 சதவீதமானவர் களுக்கு மட்டுமே தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக திருமங்கலம் மையத்தில் மதுரை மேற்கு உள்ளிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகளே வந்து சேராமல் அத்தொகுதி அலுவலர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். தபால் வாக்குப்பதிவு மையத்திற்கும், தேர்தல் அலுவலகத்திற்குமான தகவல் இடைவெளிதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இத்தகைய தாமதம் உள்நோக்கம் கொண்டதோ என்கிற ஐயம்எழுகிறது. மொத்த தேர்தல் அலுவலர் களின் எண்ணிக்கை, தபால் வாக்கிற்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை, தபால் வாக்குப் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, வேறு தொகுதிகள் எனில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவிவரங்களை தினம்தோறும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 5, 6 தேதிகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் பணிச்சான்று, தபால் வாக்குகள் வழங்கப்பட்டு விடும் அல்லது அவர்களது முகவரிகளுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இவ்வளவு மிகக் குறைவான அலுவலகர்களுக்கே இத்ததைய வாய்ப்பு கிடைத்திருப்பது நடைமுறையில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை காட்டுகிறது.தபால் வாக்குகளுக்கான சான்றொப் பம் யாரால் வழங்கப்படலாம் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.


அது குறித்த அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட வேண்டும். மேலும் தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள் குறித்த நெறிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.வாக்குப்பெட்டி பராமரிப்பு, வாக்குரகசியம் பாதுகாப்பு, வாக்குப் பதிவேடுகள் நிர்வகிப்பு ஆகியவற்றிற்கான விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.நூறு சதவீத வாக்களிப்பே இலக்கு என்று அறிவித்துவிட்டு தேர்தல் பணி அலுவலர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாட்டை முறையாகச் செய்யாமல் இருப்பது என்ற பெரும் குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.அனைவருக்கும் தேர்தல் பணிச் சான்று, தபால் வாக்குகள் உடனடியாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.காவல்துறையினரின் தபால் வாக்கு பதிவிற்கான நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதன் வெளிப்படைத் தன்மை பாதுகாக்கப்படும் வகையில், வேட்பாளர்/கட்சி முகவர்கள் முன்னிலையில் அது நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.வாக்குச்சாவடிகளில் முகவர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விவரங்கள் (படிவம் 17சி ல்) எழுத்துப்பூர்வமாக தரப்படுவது போல, தபால் வாக்குப்பதிவு மையங்களிலும் முகவர்களுக்கு அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

;