திண்டுக்கல், ஜுன் 7- பணித்தளங்களில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. இது தொடர்பான புகார் கொடுப்பதற்கு அரசு அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்று கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. கட்டுமான தொழில் உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு திண்டுக்கல்லில் செவ்வாயன்று மகாலிங்கம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு தலைமை வகித்தார். மாவட்டபொதுச்செயலாளர் கே.பிரபாகரன் வரவேற்று பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் தீத்தான். மாவட்டத்தலைவர் எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். . திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி துவக்கவுரையாற்றினார். சிஐடியு உழைக்கும் பெண்கள் அமைப்பின் அமைப்பாளர் டி.தனலட்சுமி, சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி.குமார், கட்டுமானத்தொழிலாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.ஆர்.கணேசன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள், மாநில பொதுச்செயலாளர் டி.குமார், கட்டுமான உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜே.லூர்துரூபி ஆகியோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பம் நன்றி கூறினார்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 55 வயதான பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட வீட்டு வசதி திட்டம் மற்றும் நலவாரிய ஆன் லைன் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும். சர்வர் திறனை மேம்படுத்த வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு தனி கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்டுமான பெண் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வதற்கான பாதுகாப்பு மையங்கள் இல்லை. படிப்பு வசதியற்ற பெண்கள், விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். தனிப்பெண்கள், ஆகியோர் அதிகமாக இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். எனவே இந்த கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். வாழ்வாதாரத்திற்கான நிவாரணம் வழங்க வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அது போல கட்டுமானத் தொழிலில் ஈடுபடக்கூடிய பெண்களுக்கு மகப்பேறு கால நிவாரண தொகை மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பணித்தளங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தனிக்கழிப்பறை வசதிகள், குழந்தை காப்பக வசதிகள் செய்து தர வேண்டும். போக்குவரத்து வசதி செய்து தர அரசு முன்வர வேண்டும். பாலியல் பிரச்சனைகள் வரும்பட்சத்தில் புகார் அளிக்கும் வகையில் ஆட்சியர், தாசில்தார் போன்ற பொதுவான அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.