tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணா

புகை பிடிப்பதினால்  குறையும் நோய் எதிர்ப்பு சக்தி

புகைபிடிப்பதனால் நுரையீரல் புற்று நோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஆகியவை ஏற்படும் என்று பல  காலமாக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இப்போது நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு, புகை பிடிப்பதால் நோய் எதிர்ப்பு  மண்டலத்திலும் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்கிறது. புகை பிடிப்பது நம் உடல், தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றலை உடனடி யாகவும் நீண்ட காலத்திற்கும் குறைக்கிறது; ஆரோக்கியமான திசுக்களையே அழிக்கும் லுப்பஸ் எனப்படும் தன் நோயெ திர்ப்பு கோளாறு, ருமாடைட் ஆர்திரிட்டிஸ் எனப்படும் மூட்டு வீக்கம் உட்பட நாள்பட்ட வீக்கம் தொடர்பான நோய்கள் ஆகி யவை ஏற்படும் அபாயத்தையும் உண்டுபண்ணுகிறது என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வில் இணை ஆசிரியராக கலந்து கொண்ட பாரி சிலுள்ள பாஸ்ச்சர் கழகத்தை சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் வயோ லைன் செயின்ட்-ஆன்றே ‘புகைபிடித்தலினால் ஏற்படக்கூடிய நீண்ட் கால விளைவுகளை பார்க்கும்போது புகைபிடித்தலை தொடங்காமலிருப்பதே சிறந்தது என்பதே எங்கள் ஆய்வின் செய்தி; குறிப்பாக இளைஞர்களுக்கு ‘ என்கிறார். வயது,  பால், மரபணு போன்றவற்றுடன் வாழ்க்கை முறை, சமூக பொரு ளாதார காரணிகள், உணவு பழக்கம் உள்ளிட்ட 136 மாறிலிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. 20 வயது முதல் 69 வயது வரை உள்ள 1000 நபர்களின் இரத்த மாதிரிகள், ஈகோலை மற்றும் ஃபுளூ வைரஸ் ஆகியவற்றிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது பரிசோதிக்கப்பட்டது. இவற்றில் புகைபிடித்தல் அதிக  பட்ச விளவுகளை உண்டுபண்ணுவது காணப்பட்டது. பரி சோதனைக் குழுவிலிருந்த புகைபிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டவுடன் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டது; ஆனால் பல ஆண்டுகளுக்கு முற்றிலுமாக குணமாகவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வகைப்படும். ஒன்று இயல்பாக உள்ளது. இன்னொன்று நாம் தகவமைத்துக் கொள்வது.  புகைபிடித்தலை விடும்போது முதல்வகை மீண்டுவிடுகிறது. இரண்டாவது வகையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்கிறது. இந்த ஆய்வில், குறைவான நபர்களே ஈடுபடுத்தப்பட்டது; நேரடி யாக மனித உடலில் அல்லாமல் சோதனைசாலையில் நடத்தப்  பட்டது; அனைவரும் ஃப்ரெஞ்சு நாட்டவர்கள்; உடல் பரும னில்லாதவர்கள் போன்ற குறைபாடுகள் உள்ளன. இவை எதிர்காலத்தில் சரி செய்யப்படலாம். ஆனால் எலிகளில் செய்யப்பட்ட சோதனைகளில் புகைபிடித்தல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது காணப்பட்டது.

ஒளியின் வேகத்தைக் குறைக்க முடியுமா?

ஒளி ஒரு நொடிக்கு 299792 கிமீ வேகத்தில் செல்கிறது. அதனுடய பாதையில் மின்காந்தப் பொருட்களை வைப்பதன் மூலம் அதன் வேகத்தை குறைக்க முடி யும் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இப்போது காங்ஸி  பல்கலைக்கழக ஆய்வாளர்களும் சீன அறிவியல் கழகத்தை சேர்ந்தவர்களும் இணைந்து  அதனை செயல்படுத்தும் நடைமுறையை காட்டியுள்ளனர். மின்காந்த தூண்டலினால் ஒளி  ஊடுருவல்(electromagnetically induced transparency (EIT)) என்பதன் அடிப்படை யில் இது செய்யப்பட்டுள்ளது. வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள வாயுவிலுள்ள எலெக்ட்ரான்களை கட்டுப்படுத்தி அது ஒளி ஊடுருவும் பொருளாக மாற்றப்படுகிறது. ஒளி  ஊடுருவது மட்டுமல்ல அதன் வேகமும் குறைகிறது. ஆனால் அவ்வாறு வரும்போது  ஒளியும் ஆற்றலும் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக மிக மெல்லிய சிலிக்கான்  அடுக்குகளை கொண்ட மெட்டா சர்ஃபேஸ் எனப்படும் தளத்தை ஏற்படுத்தினர். இந்த ஆய்வின் முடிவின்படி ஒளியின் வேகத்தை 10000 மடங்கிற்கு மேல் குறைக்க முடியும்.  அதே சமயம் இதற்கு முன் உண்டாக்கப்பட்ட முறைகளைவிட ஒளி இழப்பு ஐந்து மடங்கு குறைவாகவும் உள்ளது. அகல கற்றை இணையம்(broad band internet) முதல் குவாண்டம் கணக்கீடு வரை  ஒளி முக்கிய பங்காற்றுவதால் இந்த ஆய்வின் மூலம் பல்வேறு பயன்பாடுகள் உண்டாக  வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆய்வு ‘நானோ லெட்டர்ஸ்’ (Nano Letters) என்கிற இத ழில் வெளியிடப்பட்டுள்ளது.

கோள்களின் வளையங்களை நிலைநிறுத்தும் நிலவுகள்

சிறு கோள்களின் புதிரான வாழ்வு நாம் நினைத்திருப்பதை விட சிக்கலானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கலாம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக ஜூபிட்டர்(வியாழன்) கோளுக்கு வெளியே எரிநட்சத்திரம் போன்ற விண்கல்லை சுற்றும் ஒரு ஜோடி வளையங்கள் கண்ணுக்கு தெரியாத சிறு நிலவுத் துண்டால் இயக்கப்படுவதாக இருக்கலாம்.  சாரிக்லோ(Chariklo) என பெயரிடப்பட்டுள்ள இந்த எரிகல் மட்டுமே வளயங்களைக் கொண்டதாக அறியப்பட்ட ஒரே குறுங்கோளாகும். ஜூபிட்டர், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் போன்ற பெரிய கோள்கள் வளயங்களைக் கொண்டிருப்பது தெரிந்ததே. இந்த வளையங்கள் சிறிய தூள்களாலும் பனித்துகள்களாலும் ஆனவை. சிதைக்கப்பட்ட நிலவு போல் அவை ஈர்ப்பு விசையால் கோள்களை சுற்றிக் கொண்டிருக்கும். அதே போல சில சிறிய கோள்களும் எரிகற்களும் நிலவு போன்ற சிறு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் சாரிக்லோ போல தெளிவான வளையங்கள் இதுவரை காணப்படவில்லை.  இது குறித்து ஆய்வு செய்த கோள் அறிவியல் கழகத்தை சேர்ந்த அமண்டா சிக்காஃபூஸ் மற்றும் அவரது குழுவினரும் டிரினிட்டி பல்கலைக்கழகத்தை சேர்ந்த கணினி அறிவியலாளர் மார்க் லெவிஸ்சும் என் சிமுலேஷன் எனும் முறையில் ஒரு கிலோமீட்டர் விட்டமுள்ள சிறிய நிலவுகள் வளையங்களை நிலையாக வைத்திருக்க இயலும் என்பதனைக் கண்டனர்.  நிலவு போன்ற துணைக்கோள் இல்லாத வளையங்கள் அகலவாக்கில் பெரிதாகி ஒன்று கலந்துவிடும். நிலவு இருந்தால் அது வளையங்களை அதன் அளவுகளிலேயே வைத்திருக்க முடியும். சாரிக்லோ மிகவும் சிறியதாகவும் வெகு தொலைவிலும் இருப்பதால் அங்கு நிலவு இருக்கிறதா என்பதை விண்கலம் ஒன்றை அனுப்பினால் மட்டுமே படம் பிடிக்க இயலும். வேறுவழிகளும் இருக்கலாம். இந்த ஆய்வு The Planetary Science Journal என்கிற இதழில் வெளிவந்துள்ளது.