மார்க்சிய சிந்தனை நம்மிடம் மட்டுமல்ல கலைஞர்களிடத்தில் வலுவாக ஊன்றி உள்ளது. கட்சி ஊழியர்களாக ராஜாகண்ணு கொலை வழக்கு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினோம். ஆனால், தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய எழுத்தறிவு இல்லாத குறவர் சமூகத்தை சேர்ந்த பார்வதி அதிக பாராட்டுக்குரியவர். வாச்சாத்தி போராட்டம் 18 ஆண்டுகள், அண்ணாமலை நகர் காவல் நிலைய மரண வழக்கு போராட்டம் 16 ஆண்டுகள் என நடந்தன. சின்னாம்பதி, நாலுமூலை கிணறு என மனித உரிமை பாதிக்கப்பட்ட இடத்திற்கு முதலில் சென்று குரல் கொடுக்கும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சனை வரும்போது தொடக்கத்தில் வந்து போஸ் கொடுத்துவிட்டு காணாமல் போய் விடுகின்றன. ஆனால் வெற்றி பெறும் வரை போராடுகிற இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை பதிவு செய்தால் பெரும் வரலாறாக இருக்கும். 1993-96 கட்டத்தில் கடலூரில் 4 வழக்கை கட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது 2 காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிக்கிறது.
கம்யூனிஸ்ட்டுகள் குண்டு வைத்ததாக கைது செய்தார்கள். காவல்நிலைய சித்ரவதைகள், தாக்குதல்கள், பொய்வழக்குகள், கொடுமைகள் என பல சோதனைகளை கடந்து வழக்குகளில் வெற்றி பெற்றோம். காவல்துறையில் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை; குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள் என்றுதான் போராடுகிறோம். ராஜாகண்ணு வழக்கில் வழக்கறிஞர் சந்துரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தார். ராஜாகண்ணு, நந்தகோபால் உள்ளிட்ட காவல்நிலைய கொலை வழக்குகளில் அரசு வழக்கறிஞராக தோழர் வெங்கட்ராமன் 16 ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றார். ராஜாகண்ணு வழக்கில் உடல், உடற்கூராய்வு சான்றிதழ் இல்லாதபோது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு போராட்டத்தை படமாக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ‘ஜெய்பீம்’ படத்தை பாராட்டுகிறோம். அடித்தட்டு மக்களின் நீதிக்கான போராட்டம், மக்களை விழிப்படையச் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மிரட்டுகிறார்கள்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் வரும்போது தடைவிதிக்கிற, இடையூறு செய்யும் மிரட்டல் அரசியலில் யார் ஈடுபட்டாலும் எதிர்த்து களப் போராட்டத்தில் ஈடுபடுவோம். “கேரளாவில் இடதுசாரி இயக்கம் வலிமையாக உள்ளது. அங்கு கூட இடதுசாரி, மார்க்சிஸ்ட் கட்சி கருத்துக்களை பகிரங்கமாக காட்டும் நிலை உருவாகவில்லை. ஜனநாதன் படங்கள், ஜெய்பீம் படம் போன்றவற்றை பார்க்கும்போது, தமிழ்த் திரையுலகம் வேகமாக மாறியிருக்கிறது; முன்னேறி இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தெரிவித்தார். இதுபோன்ற படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் செய்த திரைக்கலைஞர் சூர்யா, கட்சியின் கோரிக்கையை ஏற்று பார்வதிக்கு 15 லட்சம் ரூபாயையும் கொடுத்தார். அந்த பணத்தை கூட அவரே நேரடியாக பார்வதியிடம் கொடுக்கவில்லை. திரைப்படம் உருவாக, பார்வதிக்கு நீதி கிடைக்க, படம் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கட்சிதான் காரணம். எனவே, காசோலையை பார்வதிக்கு நீங்கள்தான் (மாநிலச் செயலாளர்) தர வேண்டுமென்று நமது கையாலேயே கொடுக்க வைத்தார்.
தமிழகத்தில் மிகச்சிறந்த இயக்குநராக மிளிர்ந்துள்ள ஞானவேல் இவ்வளவு நாளாக வெளியே தெரியாமல் எப்படி இருந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டமாக இருந்தால்கூட, செங்கொடியை காட்டாமல் கூட எடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல், நேர்மையாக படத்தை பதிவு செய்துள்ளார். வங்கத்தில் சத்யஜித்ரே போன்று தமிழகத்தில் ஞானவேல் உருவாகிறார். ஜனநாதன் படங்களை தொடர்ந்து அசுரன், பரியேறும் பெருமாள், மாநாடு, ஜெயில், ஆன்டி இண்டியன், ஜெய்பீம் என தமிழ்ச் சினிமா மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது. திரைத்துறையினர் கேமிராவை மக்கள் பிரச்சனைகள் பக்கம் திருப்பியுள்ளனர். இது திரைத்துறையில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை மட்டுமல்ல, இந்தியாவில், தமிழகத்தில் இடதுசாரிகள் வலுவடைகிற இயக்கமாக பரிணமிக்கும். சினிமா அடித்தட்டு மக்களுக்காக என்ற திசையில் வளர வேண்டும். மதவெறி சக்திகளை முறியடிக்க மார்க்சியத்தை முன்னெடுக்கிறோம். அதேநேரத்தில் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை உள்வாங்கி செயல்படுவோம். ஞானவேலின் பயணம் வெற்றியடையட்டும். மாற்று தயாரிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.