1 செயற்கை இதயம் தயாராகிறது
மனித இதயத்தசை செல்களிலிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு இயங்கும் மீன் பொறியை ஹார்வர்ட் மற்றும் எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இதயம் சுருங்கி விரியும்போது ஏற்படும் தசை இயக்கங்களை இந்தப் பொறி மீட்டுருவாக்குகிறது. ஸீப்ரா பிஷ் எனும் மீனின் வடிவம் மற்றும் நீந்தும் முறைகளை பின்பற்றி இந்தப் பொறி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் செயற்கை தசை பம்புகளை உருவாக்குவதுவும் இறுதியாக செயற்கை இதயம் வடிவமைப்பதுவுமான முயற்சிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2 அப்பவும் இருந்தது இம்போசிஷன்
2000 ஆண்டுகளுக்கு முந்தய எகிப்திய வாழ்வை சித்தரிக்கும் கையேடுகளை ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டுள்ளார்கள்.இவை ‘ஆஸ்டிரகா’ எனப்படும் மண்பாண்டத் துண்டுகளில் எழுதப்பட்டுள்ளன.வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், ரசீது ஆகியவை எழுத இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே வாக்கியங்கள் திரும்ப திரும்ப எழுதப்பட்ட பள்ளி கையேடுகளும் இதில் அடங்கும். இது சேட்டைக்கார மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகளாக இருக்கலாம் என்கிறார்கள். இத்தகைய ஏறத்தாழ 18000 துண்டுகள் எகிப்திலுள்ள அத்ரிபிஸ் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3 திரையில் தெரியும் காட்சி
முற்றிலும் நெய்யப்பட்ட 45அங்குல துணி காட்சித்திரை ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உண்டாக்கியுள்ளார்கள். இதனுள்ளே திறன் உணர்விகள், சக்தியை உள்வாங்கி சேமிக்கும் செயல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது காட்சித்திரையாக, உட்செலுத்தப்படுபவற்றை கண்காணித்தல்அல்லது ஆற்றலை சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்துவது ஆகிய பல பயன்பாடுகள் கொண்டது. இதிலிருந்து தொலைக்காட்சியாக பயன்படும் திரைச்சீலைகள்,ஆற்றலை சேமிக்கும் தரை விரிப்புகள், சுய ஆற்றல் கொண்ட இடையீடு செய்யும் அங்கிகள் ஆகியவை உண்டாக்கப்படலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
4 சேதத்தை தடுக்கும் ஒரிகாமி
ஒரு கார் எதன்மீதாவது மோதும்போது அதன் தாக்கம் காரிலுள்ள ஃபெண்டர் எனும் பாகத்தை சேதப்படுத்துகிறது.இந்தப் பகுதியில் ஏதாவது ஒரு பொருளை பொருத்தி மோதலின் தாக்கத்தைக் குறைத்து உட்பகுதிகள் சேதமடையாமல் பாதுகாக்க முடியுமா எனும் ஆராய்ச்சி சென்னை ஐஐடியில் நடைபெற்றுள்ளது. இந்தப் பொருட்களின்மீது ஒரு சக்தி அழுத்தும்போது அவை கிழிபடுவ தில்லை. மாறாக கசங்குகின்றன. அதாவது அவை செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ உருக்குலைகின்றன. செலுத்தப்படும் சக்தியின் திசைவழியில் நிகழும் உருக்குலைவுக்கும் கிடைமட்டமாக நிகழும் உருக்குலைவுக்கும் இடையே உள்ள விகிதம் பாய்ஸன்(poisson) விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் எதிர்மறையாக இருந்தால் அழுத்தும் சக்தியின் தாக்கத்தை அது தாங்கிக்கொள்கிறது. இத்தகைய பொருட்கள் ஆக்செடிக்ஸ்(auxetics) என அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொருட்கள் மென்மையானவையாக உள்ளன. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் காலணியின் உட்புறம் இவை சேர்க்கப்படுகின்றன. ஆனால் இவை கார் விபத்து போன்ற நிகழ்வுகளை தாங்கக் கூடியதாக இல்லை. இப்போது ஐஐடி ஆய்வாளர்கள் இரண்டு பொருட்களை அதன் ஓரங்களில் இணைத்து ஒரிகாமி மெட்டாமெடீரியல்ஸ் எனும் பொருளைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஜப்பான் கலையான ஒரிகாமியைப் போன்ற மடிப்பு முறையை தகுந்த பொருளில் பயன்படுத்தி இவை உண்டாக்கப்படுகின்றன. இதன் சிறப்பு என்னவென்றால் இவை எந்தப் பொருளால் உண்டாக்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல. அது பேப்பர்,பாலிமர் அல்லது உலோகம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். அழுத்தப்படும்போது அவை ஒட்டப்பட்ட விளிம்புகளின் வழியே மடிகின்றன. இந்த ஆய்வு ‘பொறியியல் இயந்திர இதழில்’(Journal of Engineering Mechanics) வெளிவந்துள்ளது. (13.02.2022 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் சுபஸ்ரீ தேசிகன் ட்டுரையிலிருந்து)
5 அறிவியலில் பாலினப் பாகுபாடு (சென்ற வாரத் தொடர்ச்சி)
‘மொனோபலி’ ‘டிரேட்’ போன்ற சிறுவர்கள் விளையாட்டின் முன்னோடியான ‘The Landlord’s Game ‘ என்பதை எலிசபத் மேகி பிலிப்ஸ் என்பவர் 1903இல் கண்டுபிடித்தார். உண்மையில் ஏகபோக பெரு முதலாளிகளான ஆண்ட்ரூ கார்னகி, ராக்ஃபெல்லர் போன்ற வர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அவர் இந்த விளை யாட்டை வடிவமைத்தார். அவர் இதை பேடன்ட் செய்தபோது வெறும் 500 டாலர்களே கிடைத்தது. பின்னர் இந்த விளையாட்டு சார்லஸ் டேரோ என்பவர் கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் அதை பார்க்கர் பிரதர்ஸ் என்கிற நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். அந்த நிறுவனமும் சார்லஸ்தான் இதை உருவாக் கியவர் என்று பொய்யுரைத்தது. குரோமசோம்களுக்கும் கருவின் பால் நிர்ண யிப்புகளுக்கும் இடையிலுள்ள தொடர்பைக் கண்டுபிடித்தவர் நெட்டி ஸ்டீவென்ஸ் என்பவர். ஆனால் அவரது சக ஆய்வாளரும் அவரது வழிகாட்டியு மான ஈ.பி.வில்சன் என்பவர் அவருக்கு முன்பாக தனது ஆய்வறிக்கையை வெளியிட்டு அந்தக் கண்டுபிடிப்பின் சொந்தக்காரர் ஆனார். சியன் ஷிங் வூ என்பவர் யுரேனியம் உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தார். 1956இல் ‘வூ சோதனை’ எனப்படும் மின்காந்த இயக்கங்கள் குறித்த சோதனைகளை நடத்தி புதிய முடிவுகளை கண்டார்.ஆனால் சாங் டாவ் லீ என்பவரும் சென் நிங் யாங் என்பவரும் இதே போன்ற கருதுகோள்களை முன்மொழிந்து வூவின் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக் காரர்களானார்கள். நோபல் பரிசும் பெற்றார்கள்.
6 கொசுவுக்குப் பிடித்த நிறம்
கொசுக்கள் சிவப்பு,ஆரஞ்சு,கருப்பு மற்றும் பச்சைஊதா(cyan) ஆகிய வண்ணங்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றன என்று வாஷிங்டன் பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது. நமது மூச்சுக் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை கொசுக்கள் முகரும்போது நமது குறிப்பிட்ட நிறத்தை சோதிக்குமாறு அவற்றின் கண்கள் தூண்டப்படுகின்றன; பின் நம்மை நோக்கி அவை வருகின்றன என்கிறார் பேராசிரியர் ஜெப்ரி ரிஃபல். மனிதனின் தோல் எந்த நிறத்திலிருந்தாலும் அது சிவப்பு-ஆரஞ்சு வண்ண சமிக்கைகளையே கொசுக்களின் கண்களுக்கு அனுப்புகின்றனவாம்.