கி.பி. 1700 களில் இங்கிலாந்து கப்பல் படையில், புதிய நிலங்களுக்காக ஸ்பானியர்களை எதிர்த்து சண்டையிடச் சென்ற வெள்ளையர்களில் ஒருவரான அலெக்சாண்டர் செல்கிர்க் 1704 ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில், ஒரு தீவில் தனித்து விடப்படுகிறார். பல்லாண்டுகள் அந்த தீவில் தன்னந்தனியே வாழ்ந்து சமாளிக்கிறார். பின்னர் மீட்கப்படுகிறார்.
இவரது தீவு வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலுக்கும், அதன் நாயகனுக்கும் “ராபின்சன் குருசோ” என்று பெயர் வைக்கிறார் அதன் ஆசிரியர் டேனியல் டெஃபோ (Daniel Defoe)
1719 இல் வெளியிடப்பட்ட இது ஆங்கிலத்தில் முதல் நாவல் எனப் புகழ் பெற்றது.அதன் பின் ராபின்சன் குருசோ வை நாயகனாக்கி பல நாவல்களும், காமிக்ஸ்களும், நாடகங்களும், சினிமாக்களும் வெளிவந்து வசூலை அள்ளியுள்ளன.
1975 இல் அதிரியன் மிஷல் கதை வசனத்தில் ஜாக் கோல்ட் இயக்கத்தில் வெளிவந்த மேன் ஃப்ரைடே (Man Friday) படத்தின் நாயகனும் ராபின்சன் குருசோ தான். வித்தியாசம் என்னவெனில், குரூசோவை வைத்து மேற்கின் அரசியலை, கலாச்சாரத்தை செமையாக நையாண்டி செய்திருக்கிறார்கள் !
வெள்ளையனான குருசோ ஒரு குழுவாக வரும் நான்கு கறுப்பர்களில் மூவரை சுட்டுத்தள்ளுகிறான். மிச்சமிருக்கும் ஒரு கறுப்பனை துப்பாக்கி முனையில் மிரட்டி அடிமையாக்குகிறான். தன்னை “ஆண்டான்” (Master) ஆக ஏற்றுக்கொள்ளும்படி அந்த கறுப்பனை பயமுறுத்தி சம்மதிக்க வைக்கிறான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவனுக்கு ஃப்ரைடே (Friday) என்று பெயரும் வைக்கிறான்.
பல்லாண்டுகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து சலித்துப்போன குருசோ அடிமை ஃப்ரைடே கிடைத்ததும் மகிழ்கிறான். தன். கூட்டாளிகள் மூன்று பேர் சுடப்பட்டு செத்துப்போனதால் பயந்து போகும் ஃப்ரைடே, குருசோவின் கட்டளைகளை ஏற்று ஒரு அடிமையைப் போல வேலை செய்கிறான். என்றாலும் தனது எதிர்ப்பைக் காண்பித்துக்கொண்டே இருக்கிறான்.
ஃப்ரைடே க்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறான் குருசோ. கிறித்தவ மதத்தை, பைபிளை, கடவுளை, அறிமுகப்படுத்துகிறான். “அடிமை” (Slave) என்றால் என்ன என்று கேட்டு, புரிந்து கொள்ளும் ஃப்ரைடே இனிமேல் தன்னை அப்படி அழைக்க கூடாது, ஃப்ரைடே என்று பெயர் சொல்லியே அழைக்க வேண்டுமென்கிறான். சரி என்று ஒத்துக்கொண்டு, ஃப்ரைடே யிடம் கடுமையாக வேலை வாங்குகிறான் குருசோ. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, தங்கள் இனத்தில் ஆண்டான் அடிமை எல்லாம் இல்லை என்று வாதிடும் ஃப்ரைடே, பாதி வேலையை குருசோ பகிர்ந்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கிறான்.
ஆனால் இதனை ஒத்துக்கொள்ள மறுக்கும் குருசோ, ஃப்ரைடே தனக்கு ஒரு அடிமை என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறான்.
கடவுள்-பக்தன், ஏழை-பணக்காரன் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன்-தாழ்ந்தவன் போன்ற குருசோ வின் கருத்தாக்கங்களை எதிர்க்க துவங்குகிறான் ஃப்ரைடே. ஒரு கட்டத்தில் ஃப்ரைடே யிடம், நீ பார்க்கிற வேலைக்கு பணம் தருகிறேன் என்கிறான் குருசோ. “பணம் என்றால் என்ன?” எனக் கேட்கிறான் ஃப்ரைடே. பணத்தை வைத்து என்னிடமிருக்கும் எல்லாப் பொருள்களையும் நீ விலைக்கு வாங்கி விடலாம் என்கிறான் குருசோ. அன்று முதல் தன்னிடமிருக்கும் தங்க காசுகளை ஃப்ரைடேக்கு கூலியாக கொடுக்கிறான் குருசோ.
ஆண்டுகள் பல கடக்கின்றன. தங்க காசுகள் அனைத்தும் ஃப்ரைடே வசம். வந்துவிட, குருசோவிடம் காசுகள் இல்லை. காசுகள் அனைத்தையும் குருசோ விடம் கொடுத்து விட்டு அவனது உடைமைகள் அனைத்தையும் ஃப்ரைடே விலைக்கு கேட்கிறான். திகைத்துப் போகும் குருசோ துப்பாக்கியை மட்டும் தர முடியாது எனக் கூறுகிறான். அது இருந்தால் மட்டுமே தான் வலிமை மிக்கவனாக வாழ முடியும் என்கிறான்.
சண்டை வருகிறது. ஃப்ரைடே யை குருசோ சுட முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பித்து தனது கூட்டத்திடம் வந்து சேரும் ஃப்ரைடே, குருசோ வோடு தான் வாழ்ந்த கதையை கூறுகிறான்.
ஃப்ரைடே யை பின் தொடர்ந்து வரும் குருசோ தன்னை அவர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறான். கறுப்பர் குழந்தைகளுக்கு “கற்று தருகிறேன்” என்கிறான். “நீ என்ன கற்று தருவாய் என்பது எனக்கு தெரியும். அது எங்களுக்கு தேவை இல்லை. நீ இங்கிருந்து ஓடி விடு..” என்கிறான் ஃப்ரைடே.
தனிமையில் தவிக்கும் குருசோ இறுதியில் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொள்கிறான்.
குரூசோவுக்கும், ஃப்ரைடே க்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இயற்கையை நேசித்து சக மனிதர்களோடு சமத்துவமாய் வாழும் தத்துவத்திற்கும், மனிதர்களை அடிமைப்படுத்தி, சுரண்டி கொழுத்து வாழ முயலும் ஆண்டான்-அடிமை தத்துவத்திற்கும் இடையேயான விவாதங்களாக இருக்கிறது. உரையாடல் எழுதியவரையும், இயக்குனரையும், தயாரிப்பு நிறுவனத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்..!