tamilnadu

img

மறக்கக் கூடாத மாமனிதர்!

இந்தியாவின் குடியரசு தின விழா இவ்வாண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜனவரி 23 முதலே துவங்கும் என ஒன்றிய அரசு அறிவித்தது.  நேதாஜி பிறந்த மேற்குவங்க மாநில அலங்கார ஊர்தியை இந்திய குடியரசு தின அணிவகுப்புக்குத் தேர்வு செய்யாமல் புறக்கணித்தது . ஏற்கெனவே தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ஒத்திகைகள் முடிவடைந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட அவலம் கண்டு உண்மையான தேசப்பற்றாளர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்ததை நாடறியும்.  இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் துளியும் தொடர்பில்லை என்ற நிலையில் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தும், மன்னிப்புக் கடிதங்களால் ஆங்கிலேயர்களை நெகிழச் செய்தவர்களுமான காவிக்கூட்டத்தினரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய நேதாஜி இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்தவர். இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை.  

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ்.  ஆனால்தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 1924ஆம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே வெற்றி வாகை சூடினார் . இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.  வீட்டுச் சிறையில் பயங்கர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்து தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார்.

ஜெர்மனியில் ஹிட்லரை  சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களைக் காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முதன் முதன்முறையாக அப்படி ஒருவர் பேசியது கண்டு வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள். 1938 குஜராத் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ஆற்றிய அவரது முதல் உரையை  “ஆங்கிலேய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை இங்கு அமல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையாக அரங்கேறியது. இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் முழங்கி வரும் ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தை முதன்முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான்.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர்  அதில், கேப்டன் லட்சுமி செகல் பெண்கள் படைப்பிரிவுத்தளபதியாக இருந்து முத்திரை பதித்தார். .  1943 அக்டோபர் 21 அன்று ஆஸாத் ஹிந்த்-ன் ஒரு தற்காலிக ஆட்சியை அமைப்பதாக நேதாஜி அறிவித்தார். பிரிட்டிஷ் படைகளுக்கும் நேதாஜி அமைத்திருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கும் போர் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் படையிடம் தாக்குப் பிடிக்க இயலாத நிலையில் 1944 ஜுன் 13 அன்று  பின்வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போரில் 21000 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.  1992ஆம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் போஸின் குடும்பம் அவ்விருதை ஏற்க மறுத்தது. அத்தகைய  மாமனிதனை நாம்  மறக்க இயலாது.இந்நிலையில் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23இல் துவங்கும் இந்தியக் குடியரசு தின விழாவைக் கொண்டாடும் நாம், அரிக்கப்பட்டு வரும்  அரசியல் அமைப்புச் சட்டங்களைப் பாதுகாக்கவும் சட்டத்தின்படியான ஆட்சியை நிலைநிறுத்தவுமான போராட்டத்தில் இணைய உறுதியேற்போமாக!

பெரணமல்லூர் சேகரன்