மதுரை:
மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு அலுவலகம் மூடப்பட்டு விட்டது இதனால் அப்பகுதியில் பயனடைந்து வந்த மக்கள் பாதிப்பிற்க்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து டிஆர்இயு மதுரை மண்டலப் பொதுச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன் கூறியதாவது:
மதுரை நகரின் வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் நலன் கருதி 1997- ஆம் ஆண்டு தல்லாகுளம் தபால்நிலைய கட்டடத்தில் ரயில்வே முன்பதிவு அலுவலகம் செயல்பட்டுவந்தது. மதுரையின் வடக்குப் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மத்தி-மாநில அரசு, மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களது கல்விச் சுற்றுலாவிற்கு சலுகை கட்டணப் படிவங்களை மாற்றுவதற்கும், காவல்துறையினர் தாங்கள் பயணம் செய்ய காவல்துறை வாரண்ட் மாற்ற வசதியாக இந்த முன்பதிவு மையம் இருந்தது. மதுரைக்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் ரயிலில் பயணம் செய்ய அரசு வைவுச்சர்களை மாற்றவும் இந்த முன்பதிவு அலுவலகம் உதவியாக இருந்தது. எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென தபால்துறை அலுவலகத்தை மூடியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மக்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் நலன் கருதி தல்லாகுளத்தில் இயங்கிவந்த ரயில்வே முன்பதிவு அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டுமென்றார்.