குறுவை சாகுபடியை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி தொடங்கிடவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு, காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை மாதந்தோறும் வழங்க ஒன்றிய அரசும், காவிரி ஆணையமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், திருவாரூரில் அகில இந்திய துணைத் தலைவர் டி.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், அரியலூரில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, அறந்தாங்கியில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, நாகப்பட்டினத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.