tamilnadu

img

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள்

சென்னை, டிச.12- சென்னையில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 இடங்களில் ரூ.7.95 லட்சம் பெறுமான வெள்ள நிவாரண உதவிகள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளில் 4 நாட்களாக தொடர்ந்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான நிவாரணப்பொருட்களை திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கங்கள் அனுப்பி வைத்துள்ளன. ஆர்.கே நகர், திரு.வி.க நகர், ராயபுரம், கடப்பாக்கம் கிராமம், கொருக்கு பேட்டை கண்ணகி நகர், புது ஆவடி ரோடு குஜ்ஜி தெரு, எக்மோர் சாஸ்திரி நகர், அண்ணா நகர் டி.பி.சத்திரம், ஆலந்தூர் கக்கன் நகர், திருநின்றவூர்  பகுதிகளில் அரிசி, பால், போர்வைகள், தார்பாலின், பிஸ்கட்டுகள், சேனிட்டரி நாப்கின்கள், மளிகை பொருட்கள் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளை புரசைவாக்கம் திடீர் நகரில் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

ஆலந்தூர் கக்கன் நகரில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போதெல்லாம் மக்களுக்காக  நிவாரண களம் இறங்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார். நிவாரண நிகழ்ச்சிகளில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள்  டி.செந்தில்குமார், ஜி.ஆனந்த், க.சுவாமிநாதன், செ.முத்துக்குமாரசாமி, வி.ஜானகிராமன், ஆர்.கே.கோபிநாத், எஸ். ரமேஷ்குமார், எஸ்.சிவசுப்ரமணியன், ஆர்.சர்வமங்களா, கே.மனோகரன், ஏ.முருகன் (திருநெல்வேலி), ரவிக்குமார், குபேந்திரன், கங்காதரன், கிரன், நடராஜன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் நாகராஜன், கிருஷ்ணா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் பா.சுகந்தி, வேல்முருகன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.