சென்னை, பிப். 27- இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர் உள்ளிட்டோரின் வேலை கோவில் பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதல்ல. கோவில் சொத்துக்கள், வரவு, செலவுகள் உள்ளிட்ட நிர்வாகப் பணிதான் அவர்களின் வேலை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் இந்து அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்து கின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற் கிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்கு களால் ஜொலிக்கும் என்று விரிவாக விளக்கி யிருக்கிறார்.
இந்து அறநிலையத்துறை, அதன் அதி காரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடு வதோ, செயல்படுவதோ அல்ல. கோவில் சொத்து, வரவு, செலவுகளைக் கண்கா ணிப்பதும், சரிபார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும்தான். நாவலர் இரா.நெடுஞ்செழியன், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்ச தர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழி யாக விலக்கிவிட்டார். அப்பொழுது ஆன்மிக வாதிகள் பெரிய அளவில் பிரச்சினை யாக்கிய பொழுது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது, ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடு கிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் அமைச்சர் நாவலர். தந்தை பெரியார் பலே, பலே நெடுஞ் செழியன் என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்து கிறோம். இந்து அறநிலையத் துறை அதற்கு ரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள். அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை யில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரண்படலாமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.