tamilnadu

img

தையல் தொழிலாளி கன்னையா லால் படுகொலை நாட்டின் சட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எதிரானது!

லக்னோ, ஜூன் 29 - முகம்மது நபியை அவதூறு செய்த நூபுர்  சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, உதய்பூரில் கன்னையா லால் (40) என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “கன்னையா லால் படுகொலை, இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானது; இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.

நபிகளை அவமதித்த நூபுர் சர்மா

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இஸ்லா மியர்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். பாஜக-வின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான நவீன் குமார் ஜிண்டாலும் நபிகளை அவதூறு செய்து டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டார்.

அரபு நாடுகள் கண்டனம்

இந்த செயல்கள் சர்வதேச அளவில் முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்தது. நபிகளை அவ தூறு செய்யும் பேச்சுக்களுக்கு சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் இந்தியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், அவர்களின் பேச்சு தொடர்பாக தத்தமது நாடுகளி லுள்ள இந்தியத் தூதர்களை அழைத்து விளக்கம் கோரின. நூபுர் சர்மா உள்ளிட்டோர் மீது இந்திய  அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அரபு நாடுகளில், ‘இந்தியாவைப் புறக்கணிப்போம்’ (#Boycott India) என்ற ஹேஷ்டேக்-க்கும் டிரெண்ட் ஆனது. 

கைது செய்யாத மோடி அரசு

இதன் காரணமாக, நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது பாஜக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது. எனினும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அவர் கைது செய்யப்படவில்லை. மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், நூபுர் சர்மாவைக் கைது செய்ய முடியவில்லை. அவர் தலைமறைவாக இருப்ப தாகவே கூறப்பட்டு வருகிறது. நூபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அலட்சியமாகவே இருந்து வந்தது. இது இஸ்லாமியர்களை அதிருப்திக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. அவர்கள் நூபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவு 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மால்டாஸ் பகுதியில் வசித்து வரும் கன்னையா லால், ஹாதிபோல் பகுதியில் ‘சுப்ரீம் டெய்லர்ஸ்’ என்ற பெயரில் தையலகம் நடத்தி வந்தார். இவர் நபிகளை அவதூறு செய்யும் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்ததுடன், நூபுர் சர்மாவின் புகைப்படத்தை, தனது முக நூலின் முகப்புப் படமாக வைத்துள்ளார். இது முகம் மது ரியாஸ் அக்தர், முகம்மது கவுஸ் ஆகியோரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

கொடூரப் படுகொலை

அவர்கள், செவ்வாயன்று கன்னையா லாலின்  கடைக்கு, துணி தைக்கக் கொடுப்பதுபோல சென்று  பேசியுள்ளனர். பின்னர் திடீரென கன்னையா லாலை கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து, தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றியதுடன், நபிகளை அவதூறு செய்யும் யாராக இருந்தாலும் இதே கதிதான் என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.

கொலையாளிகள் இருவரும் கைது 

தற்போது முகம்மது ரியாஸ் அக்தர், முகம்மது கவுஸ் ஆகிய கொலையாளிகள் இருவரையும் ராஜ்சமந்த் மாவட்டம் சர்புஜா காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். 

இணையச் சேவை முடக்கம் - ஊரடங்கு

கன்னையா லால் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில், ராஜஸ்தானில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புப் பணியில் அதிக எண்ணி க்கையிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். உதய்பூர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

கன்னையா லால் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முகம்மது ரியாஸ் அக்தர்,  முகம்மது கவுஸ் ஆகியோர் பிரதமர் மோடிக்கும்  கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள தால், இந்த கொலை சம்பவத்தைப் பயங்கரவாத தாக்குதல் நிகழ்வாகக் கருதி, ஒன்றிய பாஜக அரசு தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency -NIA)விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலையில் வேறு அமைப்புகள் மற்றும் வெளி நாட்டுத் தொடர்புகள் உள்ளதா? என்பது குறித்து  விசாரிக்கப்படும் என்று அமித்ஷா தலைமை யிலான உள்துறை அமைச்சகம் அறி வித்துள்ளது.

நவீன் ஜிண்டால் அச்சம்

“உதய்பூரில் கன்னையா லால் தலை துண்டிக்கப்பட்ட வீடியோவுடன் எனக்கு மிரட்டல் இ- மெயில்கள் வந்துள்ளன. கன்னையா லாலைக்  கொலை செய்தது போல என்னையும் என் குடும்பத்தினரையும் வெட்டி படுகொலை செய்யப் போவதாக அதில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள் ளன” என்று அண்மையில் நடவடிக்கைக்கு உள்ளான பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் அச்சம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம்

கன்னையா லால் படுகொலை சம்பவம் நாடு  முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டா ளர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்

“இஸ்லாமிய அமைப்புகள் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது, வருந்தத்தக்கது; அத்துடன் இது இஸ்லாத் திற்கு எதிரானது” என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board - AIMPLB) கன்னையா லால் கொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது.  இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஹஸ்ரத் மவுலானா காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த வொரு மதத்தினரையும் அவதூறாகப் பேசுவது குற்றம். பாஜக (முன்னாள்) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபிக்கு எதிராகப் பேசிய இழிவான வார்த்தைகள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் வேதனை அளித்தன. இதில் அரசு நட வடிக்கை எடுக்காமல் இருந்தது, வெந்த புண்ணில்  வேலை பாய்ச்சுவதாக இருந்தது. இருந்த போதிலும், யாரும் சட்டத்தை தங்கள் கைகளில்  எடுக்கக் கூடாது. ஒருவரைக் குற்றவாளி எனக்  கூறி கொலை செய்வது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. இதுபோன்ற செயல்களைச் சட்டமோ, இஸ்லாமிய ஷரியாவோ அனுமதிக்கவில்லை. உதய்பூரில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில், முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்ட வழிகளை மட்டுமே நாட வேண்டும். மதங்களை அவமதிக்கும் நபர்களைத் தண்டிக்கும் வகையில் ஒன்றிய அரசு உடனடியாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜம்மியத் உலமா-இ-ஹிந்த்

ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பும் உதய்பூர் கொலை சம்பவத்தைக் கண்டித்துள்ளது. “இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்த முடி யாது; இஸ்லாம் மற்றும் நாட்டின் சட்டத்திற்கு இது எதிரானது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.  கன்னையா லால் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகம்மது ரியாஸ் அக்தரின் ரியாஸூக்கு அவரது மருமகனும் கண்டனம் தெரி வித்துள்ளார். “எனது மாமா செய்த செயலை கண்டிக் கிறேன். அமைதியை கெடுக்க அவர் முயற்சி செய்து இருக்கிறார். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

“உதய்பூரில் நடந்த கொடூரமான கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற கொடூரத்தின் மூலம் பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் உடனடி யாக தண்டிக்கப்பட வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “இது ஒரு சோகமான மற்றும் அவமானகரமான சம்பவம். இன்று நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், அமித் ஷாவும் ஏன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை? மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றி, இதுபோன்ற வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இது மிகவும் வருத்தமான சம்பவம். இது ஒரு சிறிய சம்பவம் அல்ல, நடந்தது கற்பனைக்கு அப்பாற்பட்டது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“வன்முறையும் தீவிரவாதமும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. உதம்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் தனது கடமையை செய்யும், மக்கள் அனைவரும் அமைதி  காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.  “உதய்பூர் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஒருவரை கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. யாராலும் மற்றவர்களை கொல்ல முடி யாது. இது ஒரு குற்றம். ஆனால் நூபுர் சர்மாவை யும் கைது செய்ய வேண்டும். தையற்காரரின் கொலை கொடூரமானது. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

இறுதி ஊர்வலத்தில் காவிக்கொடிகளுடன் கோஷம்!

இதனிடையே, புதன்கிழமையன்று பலத்த பாதுகாப்புடன் கன்னையா லால் உடல் இறுதி ஊர் வலம் நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்க போலீசார் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இறுதி ஊர்வலத்தின் போது சிலர் காவிக் கொடிகளை ஏந்தியபடி ‘மோடி , மோடி’ என கோஷங்கள் எழுப்பி னர். உதய்பூரில் உள்ள அசோக் நகர் பகுதியில் கன்னையா லால் உடல் தகனம் செய்யப்பட்டது.

 


 





 

;