வாவுபலி பொருட்காட்சியில் மீண்டும் காவல்துறை பாதுகாப்பு
குழித்துறை, ஜூலை 16- குழித்துறை நகராட்சி சார்பில் 100 ஆவது வாவுபலி பொருட்காட்சி ஜூலை 9 அன்று துவங்கி, 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமாக வாவுபலி ஜூலை 24 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. பொருட்காட்சி திடலில் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல்துறை பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். இதற்காக களியக்காவிளை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரும்படி இங்கு புறக்காவல் நிலையமும் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. 7 இடங்களில் கேமிரா பொருத்தப்பட்டு இந்த புறக்காவல் நிலையத்தில் டிவியும் வைக்கப்பட் டுள்ளது. பொருட்காட்சி துவங்கிய நாளில் காவல்துறை பாதுகாப்பு காணப்பட்டது .ஆனால் திடீரென்று போலீஸ் அனைவரும் வாபஸ் பெறப்பட்டனர். காவல்துறை சார்பில் இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.இதற்கு நகராட்சி சார்பில் சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து வாவுபலி பொருட்காட்சியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. புறக்காவல் நிலையத்தில் போலீசார் உள்ளனர். காவல்துறையினர் ,வாகனங்களை ஓழுங்குபடுத்தி வருவதால் போதிய பாதுகாப்பு இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.