tamilnadu

img

பழனி-கொடைக்கானல் சாலை மேம்படுத்தப்படும்.... அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.....

மதுரை:
கொடைக்கானல் - மூணாறு சாலையை கேரள அரசுடன் பேசிதரம் உயர்த்த நடவடிக்கை  எடுக்கப்படும்.  கீழடி அகழாய்வு இடத்திற்கு செல்லும் சாலையையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சங்கரபாணி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  ஆகியோர் தலைமையில் மதுரை, தேனி,திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு  கூறியதாவது:- 

ஊராட்சி, ஒன்றியச் சாலைகளை தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.சாலைப் பணிகளில் நில எடுப்பின் காரணமாக பணிகள் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க நில எடுக்கும் பணிக்காக ஐந்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ரயில்வே பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2,000 கி.மீ சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. பழனி - கொடைக்கானல் பாதையை தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு சாலையை கேரள அரசுடன் பேசி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கீழடி அகழாய்வுஇடத்திற்கு செல்லும் சாலையையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கலைஞர் நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடம் பொருத்தமாக உள்ளது. அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை விரைவுபடுத்துவோம் என்றும் கூறினார்.

;