districts

img

சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.2,800 கோடி: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை,ஏப்.12- தமிழ்நாட்டில் ரூபாய் 2,800 கோடி செலவில் சாலைகள் மேம்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று(ஏப்.12) நெடுஞ்  சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் வேலு,“தமிழர் பண்பாட்டின் புகழை பரப்பி வரும் மதுரை கீழடியில் சுமார் 110 ஏக்கர் நிலப்பரப்பில் தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற் கூடப் பகுதி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளிக் கொண்டுவரப் பட்டுள்ளது” என்றார். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை காட்சிப் படுத்தி உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன், அகழ்வைப்பகம் அருங்காட்சியக பணிகள் 11 கோடி ரூபாய் செலவில் 31,919 சதுர அடி பரப்பில் 6 முக்கிய கட்ட தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்படும் கட்டடங்களின் வடிவமைப்பு அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக முற்றும் தாழ்வாரம் மற்றும் மண்டபகளுடன் அமைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “செங்கல் பட்டு நகரத்தை புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடியில் தயாரிக்கப்படும்” என்றார்.

கோவை, பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர், காரியப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் துறைமுக சாலை  நான்கு வழிச்சாலையாக அமைக்க ரூ.4 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 150 கிலோ மீட்டர் சாலைகளை நான்கு வழித்தடமாக 600 கிலோ மீட்டர் சாலைகள் இருவழி தடமாகவும், ரூ.2,300 கோடி செலவில் அகலப்படுத்தப்படும. தொழிற்சாலைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகரத்தில் உற்பத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் தொழிற்சாலையை ஊக்கப்படுத்தவும் மேலும் ரூ.300 கோடியில் நான்குவழி சாலைகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை 485 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை பெருநகர மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடி செலவில் மேம்பாலம். பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் 100 கோடி ரூபாயில் அகலப்படுத்தப்படும். 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577 கோடியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும். நகரங்களுக்குள் ரூபாய் 500 கோடி செலவில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலையில் 206 கோடி செலவில் புதிதாக சாலை அமைத்துக் கொடுக்கப்படும் உள்ளிட்ட 56 அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.

;