tamilnadu

img

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நேரடி களப் போராட்டங்கள்

சென்னை, செப்.30 - தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் சனிக் கிழமை (செப்.30) அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேரடி களப் போராட் டங்கள் நடைபெற்றன.

தென் முடியனூரில் வழிபாட்டுரிமை மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு வட்டம் தென்முடியனூர் முத்துமாரி யம்மன் ஆலய நுழைவுப் போராட்டம் தீஒமு மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன்,  மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை யில் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், 23.9.2023 அன்று மாவட்ட நிர்வாகம் கோவி லைத் திறந்து தலித் மக்களின் வழிபாட்டு உரிமை யை நிலைநாட்டியது.

அகரம் பேரூராட்சியில் அருந்ததியர்க்கு பட்டா

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி அருந்ததியர் மக்கள் குடியிருப்பிற்கு பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வனஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதா னந்தம் தலைமையில் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு முன்பே அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது.

ஜி.கல்லுப்பட்டியில் பஞ்சமி நிலம் மீட்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் ஜி.கல்லுப் பட்டி ஊராட்சியில் பாரி என்கிற நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டம் மாநில பொதுச் செயலாளர்  கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.கே.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பி.தர்மர், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை ஆகியோர் பங்கேற்ற னர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 420 என்ற சர்வே எண்ணிற்குரிய சட்டவிரோத பட்டா கோட்டாட்சிய ரால் ரத்து செய்யப்பட்டது. 432, 433 ஆகிய சர்வே எண்களின் சட்டவிரோத பட்டாக்களை ரத்து செய்திட கோட்டாட்சியர் பரிந்துரைத்துள்ளார் என்கிற முதல் கட்ட வெற்றியுடன் போராட்டம் நிறைவு பெற்றது.

சின்ன வெண்மணியில்  சுடுகாட்டுப் பாதை மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சின்ன வெண்மணி கிராமத்திற்கு சுடுகாட்டுப் பாதை கேட்டு மாநிலப் பொருளாளர் இ.மோகனா, மாவட்டத் தலைவர் இ.சங்கர், செயலாளர் ஜி. புருஷோத்தமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதிஅண்ணா ஆகியோர் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, 29.9.2023 அன்று மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், கோரிக்கையை நிறை வேற்ற உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் தற்கா லிகமாக திரும்பப் பெறப்பட்டது.

சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றம்

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஜெயங்கொண்டம் கிராம மக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றி, வேலி அமைக்கும் போராட்டம் மாநிலச் செயலாளர் கா.வேணி, மாவட்டத் தலைவர் ராஜேஷ்கண்ணா, செயலா ளர் பழ.வாஞ்சிநாதன் பங்கேற்புடன் நடத்த அறி விக்கப்பட்டது.  புவனகிரி வட்டாட்சியர் தலைமை யில் 26.9.2023 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

சாதிய அடையாளங்களை  அழிக்க கோரிக்கை

தஞ்சை மாநகராட்சித் தெருக்களில் சாதிய அடையாளப் பெயர்களை நீக்கிட வேண்டும் என மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலா ளர் என்.சிவகுரு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மகாதேவிபட்டினம் தலித் மக்களின் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு மாநி லச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் ஜி.பழனிவேலு, மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி தலைமையில் காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 27.9.2023 அன்று மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப் பட்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் ராமலிங்கபுரம் கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை கேட்டு மாவட்டத் தலைவர் எம்.முத்துகுமார், மாவட்டச் செயலாளர் ஜி.கே.முருகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன் தலைமை யில் காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தனி வட்டாட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் முன்னிலையில் 5.10.23 அன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

சுடுகாட்டுப் பாதை  கேட்டுப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம், ராமானுஜபுரம் கிராமத்தில் அருந்ததி யர் மக்களுக்கு சுடுகாட்டுப் பாதை கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலு வலர், ஒன்றிய பொறியாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ராமானுஜபுரம் கிராமத்தில் பாதை யை நேரில் ஆய்வு செய்து, இரண்டு வாரங்களில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. குமரி மாவட்டத்தில் பழுதடைந்த காலனி வீடு களை புதுப்பிக்க கேட்டும், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கேட்டும், 10 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாவை ரெவின்யூ பட்டாவாக மாற்றி வழங்க கேட்டும் நாகர்கோவில் வேப்பம்கூடு சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சசி தரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டா கேட்டு மனு திருச்சி புறநகர் துளையாநத்தம் கிராமத்தில் காலனி மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்திற்கு கணக்கில் ஏற்றி பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டதுணைச் செயலாளர் வீர விஜயன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை யில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எருக்கள் மற்றும் குளக்கரை கிராம மக்களுக்கு இடத்தை அளந்து கொடுத்து பட்டா கேட்டு காத்தி ருக்கும் போராட்டம் மாநிலச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன், மாவட்டத் தலைவர் சி.மேகநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.இளங்கோவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஒபி.சீனிவாசன் தலைமை யில் நடைபெற்றது.   ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி 7-வது வார்டு ஜெயம் நகரில் குப்பை கிடங்கு அகற்றும் போராட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பா.செல்வன், மாவட்டத் தலைவர் பி.ரகுபதி, மாவட்டச் செயலாளர் ஏபிஎம் சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.

தீண்டாமை  சுவர் அகற்றும் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா மாத்தூர் கிராம தலித் மக்கள் செல்லும் பாதையை தடுத்து கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றும் போராட்டம் மாநில சிறப்பு தலை வர் எஸ்.கே.மகேந்திரன், மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா, மாவட்டச் செயலாளர் பி.ஏழுமலை, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.ராமசாமி, விசிக மாவட்டச் செயலாளர் க.மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   வீட்டுமனைப் பட்டா கோரிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் தோப்பூர் பகுதி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கேட்டு, மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் நேரடியாக வந்து அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.

கழிப்பறை கட்டும் நேரடி இயக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 8-வது வார்டு தலித் மக்கள் பயன்பாட்டிற்கு கழி வறை கட்டும் நேரடி இயக்கம் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.   புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கிராமத்தில் தலித் குடியிருப்புக்கு மனை பட்டா கேட்டு காத்தி ருக்கும் போராட்டம், மாவட்டத் தலைவர் சலோமி, மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூ ராட்சி சுடுகாட்டிற்கு பாதை கேட்டு மாவட்டத் தலைவர் ஜெ.வினோத்ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ்சந்திரபோஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில் உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பூவந்தி மற்றும் மடப் புரம் கிராம தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம், மாவட்டத் தலைவர் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் ஆர்.வீரய்யா, சிபிஎம் மாவட்டச் செய லாளர் வி.கருப்பசாமி தலைமையில் நடை பெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் சமத்துவபுரம் மக்களுக்கு மனைப் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர்.வான்தமிழ் இளம்பருதி, மாவட்டச் செயலாளர் என்.கலையரசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை தலைமையில் நடைபெற்றது.