tamilnadu

வன்முறையால் பாதிப்பு : முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை

புதுதில்லி, பிப்.27- இரண்டு ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு தில்லியில் முஸ்லீம் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறை வெறியாட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியாளர் களிடமிருந்து இதுவரை எவ்விதமான நிவாரணமும் வரவில்லை. இதைக் கண்டித்து, தில்லி, நாடாளுமன்ற வீதியில், தர்ணா போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்டன தர்ணா போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கையறு நிலைகளைப் பதிவு செய்தனர். லிமா என்னும் பத்து வயது சிறுமி, இக்கூட்டத்தில் பேசும்போது தன்னைக் காப்பாற்றி வந்த தன் அண்ணன் இந்த வன்முறை நிகழ்வில் பலியாகிவிட்டார் என்றும், தான்  எப்படி உயிர்வாழ்வது என்றும் கேள்வியை எழுப்பினார்.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் எவ்வித நிவாரணமும் வழங்கப் படாததால், நிவாரணம் கோரி, பாதிப்புக்கு உள்ளானவர்கள் இப்போராட்டத்தில் குரல் எழுப்பினார்கள். பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களிலிருந்து பத்து பேர் இக்கண்டனக் கூட்டத்தில் தங்கள் அவல நிலைகளை எடுத்துரைத்தார்கள். இன்றளவும் தாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். சில  குடும்பத்தினர் இந்த வன்முறை நிகழ்வில் தங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டிவந்த உறுப்பினர்களை இழந்து விட்டதால் தாங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கு மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார்கள். இக்கண்டனக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா  காரத் உரையாற்றினார்.

அப்போது அவர், வன்முறை வெறி யாட்டங்கள் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னரும்கூட, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அடிப்படை புலன் விசாரணை கூட இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், குற்றமிழைந்த கயவர்களுக்கு எதிராகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். வன்முறை வெறியாட்டத்திற்குத் துணை போன எந்த வொரு போலீஸ்காரருக்கு எதிராகவும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். தில்லிக் காவல்துறை, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கிரிமினல்களைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிகிறது என்றும் மறுபக்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய அப்பாவி இளைஞர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். வன்முறை வெறியாட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரங்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிருந்தா காரத் கூறினார். இவற்றைப் பெறுவதற்கு வீதியிலிறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.        

            (ந.நி.)