தீவிர நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி
1,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் அபாயமிக்கது
சென்னை, ஆக. 22- நாடு முழுவதும் உள்ள நிலச்சரிவால் பாதிக்கப் படக்கூடிய பகுதிகள் அனைத்தையும் இந்திய நில அளவையியல் துறை (ஜிஎஸ்ஐ) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இதனை குறிப்பிட்டு ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள மலைப் பகுதிகளின் 4.3 லட்சம் சதுர கிலோமீட்டர் பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் என ஜிஎஸ்ஐ வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 11,000 சதுர கிலோமீட்டர் பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகும். அதில் 8,000 சதுர கிலோமீட்டர் குறைந்த ஆபத்து வகையிலும், 2,000 சதுர கிலோமீட்டர் மிதமான ஆபத்து உள்ள பகுதி என்ற நிலையில், 1,000 சதுர கிலோமீட்டர் அதிக ஆபத்து வகையில் நிலச்சரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள 1,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் அனைத்தும் நீலகிரி மாவட்டம் என குறிப்பிடப் பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.