tamilnadu

img

நிலா காத்திருக்கிறது

உதயசங்கர்

இன்னும் சூரியன் வரவில்லை.
வீட்டில் நிலா காத்திருக்கிறது. 
வானம் இருட்டி விட்டது.
நட்சத்திரங்கள் எல்லாம் வந்து விட்டன.
எங்கே போச்சு இந்தச் சூரியன்?
நிலாவுக்குக் கவலை.
இப்போது என்ன செய்வது?
சூரியன் வீட்டுக்குள் வந்தால் மட்டுமே நிலா வெளியே போகமுடியும்.
நட்சத்திரங்கள், மேகங்கள், காற்று,
எல்லாம் தயாராகி விட்டன.
வாசலில் நின்று யானை மேகம் அழைக்கிறது.
சன்னல் வழியே குயில் மேகம் பாடுகிறது.
கூரை மீது மயில் மேகம் தோகை விரித்து ஆடுகிறது.
சிங்கம் கர்ச்சிக்கிறது.
நாய் குரைக்கிறது.
புலி உறுமுகிறது.
அணில் கீச்சிடுகிறது.
புழு ஊர்ந்து போகிறது.
நிலாவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
இப்படித்தான் மாதத்தில் பதினான்கு நாட்கள் வீட்டுக்குத் தாமதமாக வருகிறது சூரியன்.
ஒரு நாள் வருவதே இல்லை.
ஆனாலும் சூரியன் இல்லாமல் நிலா கிடையாதே.
இதோ சூரியன் வந்து விட்டது.
சூரியனைப் பார்த்ததும் நிலாவின் கோபம் போய் விட்டது.
நிலா பால் வெள்ளையாய் குளிர்ந்து சிரித்தது.
உடனே வீட்டை விட்டுக் கிளம்பி விட்டது.
வீட்டை விட்டு வெளியில் வந்ததும் ஒரே சிரிப்பு.
பூமியைப் பார்த்துச் சிரித்தது.
மேகங்களைப் பார்த்துச் சிரித்தது.
நட்சத்திரங்களைப் பார்த்துச் சிரித்தது. 
அதோ ஒரு மொட்டை மாடி.
அம்மாவின் மடியில் உட்கார்ந்து ஒரு குழந்தை சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 
குழந்தை சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்தது.
அம்மா சொன்னாள்.
நிலா நிலா ஓடி வா
ஓடி வந்தது நிலா.
குழந்தைக்குக் கிச்சுக்கிச்சு மூட்டியது.
குழந்தை சிரித்தது.
அம்மா சிரித்தாள்.
நிலாவும் சிரித்தது.
கெக்க்கேக்க… 
கெக்கெக்கெ..