tamilnadu

img

நாடாளுமன்றத்தில் அம்பலமான நட்டாவின் பொய் - சு. வெங்கடேசன்  எம்.பி

பா.ஜ.க தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலமானது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

5 சதவீத மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்து விட்டன என்று மதுரை வந்த பா.ஜ.க தலைவர் நட்டா கூறினார். மதுரை மக்கள் உண்மை அறிந்தவர்கள் என்பதால் அவருடைய பேச்சு இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக மாறியது. நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் எய்ம்ஸ் அமைவிடத்திற்கு சென்று அது பொட்டலாக காட்சி அளிப்பதை அம்பலம் ஆக்கினோம். ஆனால் நட்டாவின் நோக்கம் மதுரை மக்களை ஏமாற்றுவது இல்லை. நாடு மன்னரின் ஆட்சி நல்லபடி போகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது என்பதே. 

ஆகவே நாடாளுமன்றம் நட்டாவின் பொய்யை நிராகரிக்க வேண்டுமல்லவா! திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்வியும் இன்று (09.12.2022) அமைச்சர் அளித்துள்ள பதிலும் அந்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அவர்கள் மதுரை எய்ம்ஸ் பற்றி கீழ்க் காணும் கேள்விகளை எழுப்பி இருந்தார். 

அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான வேலை துவங்கவில்லை என்பதை அரசு அறியுமா? ஆம் எனில் விவரங்களும், காரணங்களையும் கூறுங்கள். கட்டுமானப் பணிகள் நிறைவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேட்டு இருந்தார்.

அமைச்சர் பதில்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மான்சுக் மாண்டவியா அளித்துள்ள பதிலில் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் 27.01.2019, மாநில அரசு நிலம் தந்த நாள் 20.02.2020, முதலீட்டிற்கு முந்தைய நடவடிக்கையும், எல்லைச் சுவர் கட்டும் பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது என்று பதில் அளித்துள்ளார். 

ஜப்பானின் ஜிகா நிறுவன நிதியின் வாயிலாக கட்டுமானம் என்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்ட காலம் 5 ஆண்டுகள், 8 மாதங்கள் என்பதால் அக்டோபர் 2026 இல் தான் முடிவடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சு.வெங்கடேசன் விமர்சனம்
கேள்வி எழுப்பிய கலாநிதி அவர்களுக்கு நன்றி. காம்பவுண்ட் சுவர்தான் முடியும் தருவாயில் உள்ளது, இனிதான் கட்டுமானமே என்பதை நாடாளுமன்றம் மூலம் நாடு அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதே காலத்தில் ஒப்புதல் தரப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இமாசலப் பிரதேச தேர்தலுக்காக அவசர அவசரமாக முடித்தார்கள். ஆனால் அங்கேயே இவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இங்கேயே 2024 தேர்தலுக்கு பிறகு கெடு சொல்கிறார்கள். அதுவும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியும் பதிலில் இல்லை. மதுரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். எய்ம்ஸ் சை போராடி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

;