திடீர்னு இடி இடிச்ச மாதிரி ஒரு சத்தம். என்னன்னு புரியல. பேரன் சுரேஷ கூப்பிட்டு என்னாச்சு பாருன்னு ஓங்கி குரல் கொடுத்தேன். ஆனால் நான் சொன்னது யார் காதிலும் விழுந்த மாதிரி தெரியல.
பேத்தி கீதுதான் ஓன்னு அலறினாள். ”பாட்டி, பாட்டின்னு”! நிறைமாத கர்ப்பிணியான அவளின் சத்தம் அடுக்கு மாடி கட்டடத்துல இருக்கற அத்தன பேருக்கும் கேட்டிருக்கும். அப்படி ஓர் அலறல். என்னாச்சுன்னு பிடி படவேல்ல.
அப்பத்தான் மதிய தூக்கம் முடிச்சு, கண் முழிச்சுண்டேன். மனைவி கமலா பால்கனி பக்கம் போனா “காபி கலந்து தரட்டுமா” ன்னு கேட்டுண்டே. சாயங்காலம் ரெண்டாவது வேளை குளிச்சிட்டு, கையோடு தோய்த்த ஈரப் புடவையை காய வெக்கறதுக்காக.
நானும் எப்பவும் சொல்ற மாதிரி ”ஜாக்கிரத, கிரில் மேல ரொம்ப சாயாத” ன்னு சொல்லிண்டிருந்தேன். கமலா கீழ விழுந்துட்டாளா? ஒண்ணுமே புரியலய.
இதுக்கு ரெண்டு மாசம் முன்னாடிதான் எனக்கு பக்கவாதம் வந்து வலது கால், வலது கை போயிடுச்சு. அதனால தான் பக்கத்து தெருவில குடியிருந்த நாங்க மூத்த மகளின் பக்கத்து ஃப்ளாட்லேயே குடி வந்தோம்.
கமலாதான் எல்லாம் பாத்துண்டா. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரத்துக்கு மட்டும் ஒரு நர்ஸ் உதவிக்கு வெச்சுண்டோம். “எல்லாம் நான் பாத்துக்கறேன். யாரும் வேண்டாம்” என்று கமலா தீர்மானமா சொல்லிட்டா. எனக்கு சாப்பாடு ஊட்டறதிலிருந்து டயபர் மாத்தரது வரைக்கும் எல்லாமே கமலாதான்.
54 வருஷ மண வாழ்க்கையில் அவளின் அளவற்ற அன்பையும் வாஞ்சையையும் அனுபவிச்சு எப்போதுமே நான் திளைச்சிருக்கேன். என் உயிர்த் தோழியாகத்தான் அவள் எப்போதுமே இருந்திருக்கா.
வீட்டுக்கு குடி வந்த நாளிலிருந்து கிரில் சுவர் கொஞ்சம் பலவீனமா இருக்குன்னு எல்லாரும் சொல்லிண்டிருந்தாங்க. கமலா ரெண்டாவது மாடியிலிருந்து கீழ விழுந்துட்டான்னு பேத்தி அழுதுண்டே வந்து சொன்னா. ”ஆம்புலன்ஸ் வர நேரமாயிடிச்ச்சு. பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு அப்பாதான் ஆட்டோவில தூக்கிண்டு போயிருக்காரு” என்று விசும்பலுக்கிடையே சொன்னாள். எனக்கு என்ன பண்றதுன்னே புரியல.
என்னாச்சோன்னு கவலை மனச பிசஞ்சது. தாங்க முடியல. அப்படியே பிரமை பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன்னு எனக்கே தெரியல.,,,
இன்னிக்கு நடந்தது போல அப்படியே ஞாபகம் இருக்கு. கமலாவை பெண் பார்க்கப் போன போது நல்லா தலைய பின்னி காட்டன் புடவை கட்டிக் கொண்டு மெஜஸ்டிக்கா ட்ரஸ் பண்ணிண்டிருந்தா. மொதல்ல பாத்ததுமே பிடிச்சு போச்சு.
கமலாவுக்கு கூட பொறந்தவா ஏழு பேர். 2 அக்கா. 3 தங்கை, 2 தம்பி. ”டீச்சர் ட்ரெயினிங் முடிச்சி ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா; கல்யாணத்த குறையில்லாம நடத்திடுவோம்; அதுக்கு மேல வசதி இல்ல” என்று வருங்கால மாமனார் சொன்னார்.
அவர் வரதட்சணையத்தான் சொல்றார்னு புரிஞ்சுது. அது எங்களுக்கே கொள்கை விரோதம். எனக்கு எல்லாத்துக்கு மேல கமலாவிடம் இருந்த திடமான நம்பிக்கையும், வாழ்க்கையப் பத்திய அவளோட பார்வையும், அவளோட சுய மரியாதையும் ரொம்ப பிடிச்சிருந்தது.
கல்யாணம் ஆன கொஞ்ச நாள் கழிச்சி, ஒரு நாள் பேச்சு வாக்குல கேட்டேன். “ஏன் கமலா நீ மட்டும் பி.யூ.சி. யோட படிப்ப நிறுத்திட்ட.! மூத்த அக்கா, தங்கைகளெல்லாம் போஸ்ட் கிராஜுவேஜுவேஷன் வரைக்கும் படிச்சிருக்காங்களே”.
”அத ஏன் கேக்கறீங்க, அப்பாவுக்கு அப்ப நல்ல வசதி இருந்தது, பெரிய அக்காவ நல்லா படிக்க வெச்சாரு. ரெண்டாவது அக்காவை படிக்க வெக்கறதுக்குள்ள நெலம மோசமாயிடுச்சு. அதனால அவள ஸ்கூல் படிப்போட நிறுத்திட்டார்.
ரெண்டு வருஷத்தில நெலம சரியாயிடுத்து. என்னை படிக்க வெச்சிருக்கலாம். ஆனா அக்காவ காலேஜ் அனுப்பாததனால என்னையும் நிறுத்திட்டார்.
அக்கா எவ்வளவோ சொன்னா. அப்பா கேக்கல. அப்பா கூட ரெண்டாவது அக்கா ரொம்ப சண்டை போட்டா…. என்னை படிக்க வைக்கலன்னாலும் பரவாயில்ல; கமலாவையாவது படிக்க வைங்கன்னு.
அப்பா ஒரெயடியா மறுத்துட்டார். இப்ப சொல்லுவ. பின்னாடி மனசு மாறிடும். அப்ப வேற மாதிரி பேசுவன்னு சொல்லி முடியாதுன்னு சொல்லிட்டார்.
எங்க தாத்தா போன போது மூத்த பையனான எங்க அப்பாக்கு 12 வயசு. அப்பவே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாராம். அப்போலேருந்து குடும்பத்த அவர்தான் பாத்துண்டாராம். அதனால அவர் பேச்சுக்கு மறு பேச்சே இல்ல.
சித்தப்பா கிட்ட போய் பேசி பாத்தேன். அவர் அண்ணா பேச்ச மீற முடியாதுன்னு சொல்லிட்டார். எனக்கு அழுகையா வந்தது. ஒரு வாரம் ரூம்ல கதவ சாத்திண்டு யார் கூடயும் பேசல. உண்ணாவிரதம் இருந்து பாத்தேன். எதுவும் பலிக்கல. சரி சொந்த கால்ல நிக்கணும்னா டீச்சர் ட்ரெயினிங்காவது முடிக்கணும்னு அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்”.
அப்பதான் தெரிஞ்சது இதுக்கு பின்னால இவ்வளவு பெரிய கதை இருக்குன்னு.
போலிஸ்காரர்கள் வந்தார்கள், நிறைய கேள்விகள் கேட்டார்கள். விபத்து நடக்கும்போது வீட்டில் மூத்த மகள் சுமி இல்லை. விஷயம் கேள்விப்பட்டு உடனே வந்துட்டா. அவள்தான் எல்லாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தா. என்னாச்சுன்னு எனக்கு ஒண்ணுமே பிடிபடல. அப்படியே எவ்வளவு நேரம் ஆச்சுன்னும் தெரியல.
அவள் நல்ல விவேகின்னு எனக்கு நல்லா புரிஞ்சிடிச்சு. வீட்டில எல்லா முடிவையும் அவதான் எடுப்பா; நான் அப்படியே கேட்டுப்பேன். எனக்கும் பெரிய நிம்மதியாயிடுச்சு. வாழ்க்கை பாரம் குறைஞ்சு, மனசே ரொம்ப லேசாயிடுச்சு.
ஒரு கவர்மெண்ட் எய்டெட் ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சர் போஸ்ட் காலியா இருக்குன்னு கேள்விப்பட்டு அதுக்கு அப்ளிகேஷன் போட்டா கமலா. அப்போ முதல் பொண்ணு சுமிய பிள்ளையாண்டிருந்தா.
இன்டர்வியூல்லாம் முடிஞ்சு அப்பாயின்மெண்ட் ஆர்டர் கையில கொடுக்கும் போது நானும் கூட போயிருந்தேன். தலைமை ஆசிரியை ”கமலா என்ன ப்ரக்னென்ட் ஆகியிருக்கியா” என்று சந்தேகமா கேட்டார். கமலா “ஆமாம்” என்று சொன்னவுடன் தலைமை ஆசிரியைக்கு பயங்கரமா கோபம் வந்துடுத்து.
”மொதல்லயே சொல்ல வேண்டாமா? இப்ப வந்து சொல்றீயேன்னு” பாய்ஞ்சுட்டார். கமலாவுக்கு பயங்கர அதிர்ச்சி. அதே சமயம் கோபமும் கூட. “என்ன மேடம், நான் அப்ளிகேஷன்லேயே கர்ப்பமாயிருக்கேன்னு தெளிவா எழுதியிருக்கேன். இப்ப வந்து இப்படி கேக்கறீங்க” என்று நிதானமா ஆனால் உறுதியாக பதில் சொன்னா.
அப்ளிகேஷன எடுத்து பார்த்தா அதில் போல்ட் லெட்டர்ல பளிச்சுனு எழுதியிருந்தது. உடனே தலைமை ஆசிரியை தன் தவறை உணர்ந்து சாந்தமாகி விட்டார்.
“சாரிம்மா, கர்ப்பிணிப் பெண்களை வேலைக்கு எடுக்கக் கூடாதுன்னு ஸ்கூல் பாலிசி. ஆனா இது என்னோட மிஸ்டேக். நான் கரஸ்பாண்டன்ட் கிட்ட பேசிக்கிறேன். நீ ஜாயின் பண்ணிடு” என்றார்.
கமலா உடனே “மேடம். நீங்க பாலிசிய மீறி வேலை குடுக்குறீங்க. எனக்கு மூணு மாசம் மெடர்னிடி லீவுக்கு எலிஜிபிள் இருந்தாலும், ஒரு மாசம் முடிந்ததுமே நான் வேலைக்கு வந்துடுவேன்” என்று ஒரு கமிட்மென்ட் கொடுத்தா.
கமலா சொன்னத கேட்டு தலைமை ஆசிரியைக்கு ரொம்ப சந்தோஷம். தன்னுடைய செலக்ஷன் சரியானதுதான்னு ஒரே திருப்தி.
ஆஸ்பத்திரியிலிருந்து எந்த விஷயமுமே தெரியலை. பேத்தி பக்கத்து ஃப்ளாட்ல இருந்தா; பொண்ணு சுமியும், பேரன் சுரேஷும் போலிஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கான்னு சொன்னாங்க. பிசியோதெராபிஸ்ட் தொடர்ந்து கொடுத்த.பயிற்சியில இப்பத்தான் மெதுவா படுக்கைய விட்டு எழுந்திருக்கவே பழகினேன். ஆனா இப்ப எழுந்திருக்கலாம்னு பாத்தா ஒண்ணுமே முடியல. மனசில தெம்பிருந்தாதான ஏதாவது செய்ய முடியும்!
கிராமத்திலேருந்து பசங்கள கொண்டு வந்து சேக்கும்போதே, “டீச்சரம்மா; கண்ணு ரெண்ட மட்டும் விட்டுருங்க, எங்க வேணா அடிங்க. எம் பையனுக்கு எப்படியாவது படிப்பு வரணும், அவனும் என்ன மாதிரி கஷ்டப்படக்கூடாது” என்று அநேகமாக எல்ல பெரியவங்களும் சொல்லிடுவாங்க.
அப்படி வந்து சேர்ந்தவன்தான் கருப்புசாமி. ரொம்ப ஒபீடியன்ட். சொன்ன பேச்ச அப்படியே கேப்பான். ஆனா கணக்கு மட்டும் வரவே வராது. ஒரு நாள் அவன எங்க வீட்டில கொண்டு வந்து விட்டுட்டா அவங்கம்மா மாடத்தி.
”அப்பா இல்லாத பையன்…. இவன வீட்டோட வெச்சு ஏதாச்சும் சொல்லி கொடுங்க டீச்சர். உங்களுக்கும் ஒதவியா இருப்பான்”. என்று சொல்லிட்டு போயிட்டா. கமலாவுக்கும் அவன ரொம்ப பிடிச்சு போச்சு. அன்றிலிருந்து கருப்புசாமி எங்க வீட்டுல ஒருத்தனாயிட்டான்.
ஒரு நாள் என்னோட நெருங்கின உறவுக்காரர் ஒருவர் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு போனோம். கருப்புசாமியும் கூட வந்திருந்தான். சாப்பிடும்போது எல்லாருக்கும் இலை போட்டாங்க. கருப்புசாமிய மட்டும் காணோம். தேடிப் பார்த்தா அவன வாசல் திண்ணையில உக்கார வைச்சி தனியா சாப்பாடு போட்டிருந்தாங்க.
எனக்கு கூட அது ஒரைக்கல. ஆனா கமலாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. இலைய தூக்கிண்டு கருப்புசாமி பக்கத்தில திண்ணையில போய் உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டா. சொந்த காரங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. ஆனா அவளோட அந்த சமத்துவ பார்வைய யாரும் வாய் திறந்து கேள்வி கேக்கல. அவளோட அந்த சமயோசித புத்தி, தைரியம் இதெல்லாம்தான் எனக்கு அவ மேல இருந்த மரியாதைய பல மடங்கு கூட்டி விட்டது.
காலம் ஓடி விட்டது. மூணு பொண்ணுங்க. நானும் அவளும் ஸ்கூல் டீச்சர்ஸ். இருக்கற வருமானத்தில கல்யாணம் பண்ணணும். எல்லா பொறுப்பையும் கமலாவே ஏத்துக்கிட்டா. ஒரு பைசா கடன் வாங்காம மூணு பேருக்கும் கல்யாணம் பண்றேன்னு எங்கிட்ட சொல்லிட்டா. அவ சொன்னா சொன்னதுதான்.
சுமி கல்யாணத்தின் போது தங்க செயின் வாங்க நான், கமலா, கமலாவின் மூத்த அக்கா மூணு பேரும் கடைக்கு போனோம். 200 ரூபாய் கொறஞ்சுது. கமலாவின் அக்கா ”நான் தர்றேன், நீ எனக்கு நாளைக்கு கொடு” என்றார். கமலா ஒத்துக்கவே இல்லை. ஒரு நாள்னா கூட கடன் வாங்கின மாதிரி தான். நான் ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கறேன்னு உறுதியா சொல்லிட்டா.
சொன்னபடியே மூணு பொண்ணுங்களுக்கும் கடனே வாங்காம கல்யாணம் பண்ணி முடிச்சா கமலா.
இடி இடிச்ச மாதிரி என்ன சத்தம்னு அப்புறம்தான் புரிஞ்சது. மூணு பக்க கிரில் சுவரோட மொத்த பால்கனியும் முதல் மாடி பால்கனியையும் பேத்துண்டு அப்படியே விழுந்துட்டிருக்கு. இப்படி ஒட்டு மொத்த பால்கனியும் முழுசா பேத்துண்டு விழும்னு யாருமே கனவில கூட நினைக்கல.
பாத்தவங்க எல்லாம் பயந்து போயிட்டிருக்காங்க. மூத்த பொண்ணோட சம்பந்தி அப்பதான் அரை மணிக்கு முன்னாடி பால்கனி கீழ் நடந்து வந்திருந்தாங்களாம்.
ரெண்டாவது பொண்ணோட மாப்பிள்ளை ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த பால்கனியிலிருந்து அரை மணி நேரம் போன் பேசிண்டிருந்தார்.
மூணாவது பொண்ணோட பேரன் முந்தின வாரம் அமெரிக்கா போனபோது கமலா, பொண்ணு, மாப்பிள்ளை, பேரன், பேத்தி அஞ்சு பேருமே அந்த பால்கனியில நின்னுதான் வழி அனுப்பி வெச்சாங்க. அப்ப இந்த மாதிரி ஆயிருந்தா என்னாயிருக்கும் தாத்தான்னு அவன் அமெரிக்காவிலிருந்து விம்மி விம்மி அழறான்.
”பில்டிங் பலவீனம் ஆயிடுச்சு, இடிச்சு கட்டணும்னு மூணு வருஷமா பேசிண்டிருக்கோம், ஆனா சில ஓனர்ஸ் ஒத்துக்காததுனால தள்ளி தள்ளி போகுதுன்னு” மூத்த மாப்பிள்ளை சொன்னார். ஆனா இவ்வளவு பலவீனமா இருக்கும்னு யாருக்குமே தோனலை.
ஏதோ கிரில் மேல சாயக்கூடாதுன்னு மட்டும்தான் எல்லாரும் சொன்னாங்க. இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இங்க வந்திருக்கவே மாட்டோம். வந்திருந்தாலும் பால்கனிய பூட்டி வெச்சிருப்போம்.
தலையில பலத்த அடி பட்டு ரத்தம் வீணாயிடுச்சாம். விழுந்த ஷாக் வேற. அதனால கோமாவுக்கு போயிட்டாளாம். காப்பாற்ற எடுத்த முயற்சி எதுவும் பிரயோஜனமா இல்லன்னு மாப்பிள்ளை சொன்னார். நான் பயந்துடுவேன்னு மறு நாள் காலம்பரதான் எங்கிட்ட தயங்கி, தயங்கி விஷயத்த சொன்னார்.
எது நடக்கக் கூடாதுன்னு பயந்தேனோ அது நடந்துடுச்சு. கமலாவின் உயிர் அமைதியா பிரிஞ்சிடிச்சு. போஸ்ட்மார்ட்டம் செய்து கையில் கொடுக்கும் போது மறுநாள் மதியத்திற்கு மேல் ஆயிடுத்து.
கமலாவை இப்படி பார்க்க எனக்கு மனசு இடம் கொடுக்கல. அதனால ஆஸ்பத்திரியிலிருந்து இங்க கொண்டு வராதீங்க; அப்படியே கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டேன்.அதனாலதான் அவளோட சிரிச்ச முகம் மட்டும் அப்படியே நினைவில பசுமையா படிஞ்சுடிச்சு.16 குடியிருப்பு உள்ள அப்பார்ட்மென்ட் அது. எந்த ஃப்ளாட் சொந்தக் காரருக்கு வேணும்னா இப்படி ஒரு விபத்து நடந்திருக்கலாம்.
முதல் மாடி பால்கனியில அந்த நேரத்தில யாராவது இருந்திருந்தா அவங்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கலாம். கீழே யாராவது இருக்கும்போது இந்த பால்கனி விழுந்திருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிக்க கூட முடியல. இவ்வளவு நாள் முடியாதுன்னு சொன்ன எல்லாருமே இந்த விபத்துக்கப்புறம், இடிச்சி புதுசா கட்ட ஒத்துகிட்டாங்களாம். குடியிருக்க வந்த கமலா அங்கிருந்த ஓனர்ஸ் யாருக்கும் எதுவும் ஆகாம, தன்னுயிரை கொடுத்து எல்லாரையும் காப்பாத்திட்டான்னு குடியிருப்புல இருக்கறவங்க பேசிக்கிட்டாங்களாம்.