பருவமழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு
புதுக்கோட்டை, அக். 23- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இடையறாது பெய்த மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, காவல் துறை மற்றும் மின்வாரிய துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால்களை உடனடியாக சுத்தம் செய்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றுமாறும், பணிகளை தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாக சரிசெய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு, பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் எனறும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர் எம்.லியாகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
