மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜுன் 21- மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். தஞ்சாவூரில் சனிக்கிழமை அச்சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் எஸ்.வள்ளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை துணைத் தலைவர் ஆனந்தி வரவேற்றார். இதில் மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், துணைத் தலைவர் கே.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாநில அரசு சார்பில் சுகாதாரத்துறையின் கீழ், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநிலம் முழுவதும் 10,960 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தினக்கூலியாக ரூ.183 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் பணியாற்றுபவர்களை தன்னார்வலர்கள் என கூறுகின்றனர். ஆனால் இந்த பணியில் சுகாதாரத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து எங்களது ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். எங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வரும் வேளையில், எங்களிடம் கூடுதல் பணிச்சுமைகளை திணிக்க கூடாது. எங்களது பணியாளர்களுக்கும் சான்றிதழுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் ஊதியத்தை காலதாமதமாக வழங்குவதை தவிர்த்து மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.