tamilnadu

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் அநியாய விலையேற்றத்தை உடனடியாக கைவிடுக!

சென்னை, மார்ச் 23 - சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் அநியாய விலையேற்றத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 பைசாவும், டீசல் விலை சில்லரையாக வாங்கு வோருக்கு ஒரு லிட்டருக்கு 86 பைசாவும், மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு லிட்டருக்கு 25 ரூபாயும் உயர்த்தப்பட்டுள் ளது. சமையல் எரிவாயு 2021லிருந்து இதுவரை யிலும் 260 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது  அனைத்து முனைகளிலும் விலை உயர்வை ஏற்படுத்தி அனைத்துப் பகுதி மக்களையும் கசக்கிப் பிழியும் அட்டூழியமான நடவடிக்கை யாகும். பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில்  ஏற்படும் மாற்றம் உணவு, காய்கறி, போக்கு வரத்து உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கொரோனா, வேலையின்மை,

விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவுகள் என்று ஒவ்வொரு அம்சத்திலும் மிகக் கடுமை யாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், எவ்வித நியாயமும் அற்ற முறையில்  ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றி உள்ளது. இதன்மூலம் சாதாரண மக்கள் இதர அத்தியாவசிய செலவு களை குறைத்துக் கொள்ளவும், தவிர்க்கவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மொத்தக் கொள்முதல் செய்வோருக்கு டீசல்  விலை ரூ.25 உயர்த்தப்பட்டிருப்பது பொதுப்  போக்குவரத்து மற்றும் சிறு, குறு தொழில்களை மிகக் கடுமையாக பாதிக்கும். பல பொதுப் போக்குவரத்து நிறுவனங்களை நட்டத்திற்கு தள்ளுவதோடு, தனியார் போக்கு வரத்து கட்டணங்களும் தாறுமாறாக உயர்வ தற்கு வாய்ப்பளிக்கிறது. மக்கள் நலன் பற்றி எவ்வித அக்கறையுமற்ற ஒரு அரசாங்கமாக ஒன்றிய அரசு மோடி தலைமையில் நடத்தி வரும் மற்றுமொரு குரூரமான தாக்குதல் இது. மக்களை ஏமாற்ற எண்ணெய் விற்பனை நிறு வனங்களே விலையை நிர்ணயித்துக்கொள் கின்றன என்கிற பம்மாத்தை பாஜக  அரசு தொடர்ச்சியாக கொஞ்சமும் கூச்சமின்றி  சொல்லிக்கொண்டே வருகிறது.

கடந்த நவம்பர்  4 ஆம் தேதி முதல் ஐந்து மாநில தேர்தல்கள் அறிவித்த காரணத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் எவ்வித மாற்ற மும் இல்லாமல் இருந்தது. அதாவது ஒன்றிய அரசு, தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக விலை ஏறாமல் பார்த்துக்கொள்வதும், தேர்தல் முடிந்தவுடன் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவா யில்லை என்று பொய்யான காரணங்களை சொல்லி தாறுமாறாக விலையேற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. குறைந்தபட்ச நேர்மையும், மக்கள் மீது எள் முனை அளவு அக்கறையும் இருக்கும்பட்ச த்தில் ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு மோடி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.