tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்! சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் வர்க்க விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் இந்திய தொழிலாளி வர்க்கம் வெற்றிகரமான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது. கோடிக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 23வது தமிழ்நாடு மாநில மாநாடு தனது புரட்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின வீரம் செறிந்த தொடர் போராட்டத்தின் மூலம் ‘வெல்ல முடியாதது மோடி அரசு’ என்ற பிம்பத்தை சுக்குநூறாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது வரலாற்று நிகழ்வாகும். “ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடித்துவிட்டால் அது பௌதீக சக்தியாக மாறும்” என்ற மார்க்சின் கூற்றுக்கிணங்க பேரெழுச்சியை ஏற்படுத்திய விவசாயிகளை இம்மாநாடு பாராட்டுகிறது.

இந்திய ஒன்றிய பாஜக அரசு, மாநில உரிமைகள் பறிப்பு, மாநில அரசுகள் சட்டமியற்றும் உரிமை பறிப்பு, நிதி வழங்குவதில் பாரபட்சம், இந்தி மொழித் திணிப்பு, சமஸ்கிருத மொழிக்கு சிறப்பு அந்தஸ்து, மற்றமொழிகளை சிறுமைப்படுத்துவது, தொழிலாளர் நலன்களை பறிக்கும் வகையில் சட்டமியற்றுவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் மக்களின் சிவில் உரிமை பறிப்பு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை, பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறைத் தாக்குதல், பூதாகரமாக வளர்ந்துள்ள வேலையின்மையை கட்டுப்படுத்தத் தவறியது, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல், மசூதிகள் இடிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல் மற்றும் மக்களை பிளவுபடுத்துவது போன்ற அடுக்கடுக்கான பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன.

பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தி மக்களை ஒட்டச் சுரண்டுவது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த தவறியது, அரசு நிலங்களை, வளங்களையும், கட்டமைப்புகளையும் பணமயமாக்கல் என்றெல்லாம் தன் கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளி இறைப்பது, கல்வி, நீட் உள்ளிட்ட பிரச்சனைகளில் மாநில நலன்களைப் புறக்கணிப்பது, பட்டியலின பழங்குடியின மாணவர்களின் 10ம் வகுப்புக்கு பிந்தைய கல்வித் தொகைகள் ஒன்றிய அரசின் நிதியிலிருந்து 75 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாகக் குறைத்து அதையும் முழுமையாக மாணவர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது, பிரதமர் பெயரில் பயிர்க்காப்பீடு திட்டம் என்று வைத்துக் கொண்டு அதற்கான காப்பீடு பிரிமியத்தில் 49:49:2 என்றிருந்ததை 25:73:2 என மாற்றி மாநில அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியது, சமையல் எரிவாயுக்கான மானியத்தை கபளீகரம் செய்தது என ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் வதைக்கப்படுகின்றனர்.

அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைகளின் வெளிப்பாடே விவசாயிகளின் போராட்டமும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் ஆகும். இந்த எழுச்சியும் போராட்டங்களும்தான் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 23வது மாநாடு தெரிவித்துத் கொள்கிறது.

இந்திய ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புணர்வை மேலும் வலுவாக வளர்த்தெடுத்து, தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்களை பிளவுப்படுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுமிக்க வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க இம்மாநாடு தீர்மானிக்கிறது.

;