tamilnadu

img

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய பெருங்காமநல்லூர் தியாகிகளைப் போற்றுவோம்!

மதுரை,ஏப்.3-  ஆங்கிலேயரின் கொடூர அடக்கு முறைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த  பெருங்காமநல்லூர் தியாகிகளின் 103 ஆவது நினைவு தினம் ஏப்ரல் 3 திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.  மதுரை மாவட்டம், பேரையூர்  தாலுகாவில் உள்ளது பெருங்காம நல்லூர் கிராமம்.  ஆங்கிலேயர் கொண்டுவந்த அடக்குமுறைச் சட்டமான குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப்  போராடிய  பெருங்காம நல்லூர் கிராம  மக்கள் மீது 1920 ஆம் ஆண்டில்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.  நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என அழைக்கப்படுகிறது.  பெருங்காமநல்லூர் தியாகிகளின் 103 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 3 அன்று தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, மதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. அனீஷ் சேகர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ.மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம், மூத்த  தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, கட்சியின் மதுரை புறநகர் - மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, வி.பி.முருகன்,  செ.முத்து ராணி,  ஜா.நரசிம்மன், அ.ரமேஷ் மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய செய லாளர் பெ.ராமர், சேடபட்டி ஒன்றியச் செயலாளர் காசிமாயன் உட்பட மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  “பெருங்காமநல்லூரில் நடை பெற்ற போராட்டம்  சாதியப் போராட் டம் அல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டம். ஒடுக்குமுறை களுக்கு எதிராக பெருங்காமநல்லூர் தியாகிகளின் வழியில் தொடர்ந்து போராடுவோம்” என்று தியாகிகளின் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் சபதம் ஏற்றனர். 

130 கோடி கைரேகைகள்

முன்னதாக உசிலம்பட்டியில் நடை பெற்ற தியாகிகள் தினக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்று கையில், “குற்றப்பரம்பரை சட்டத்திற்கு  எதிரான போராட்டம் இன்றும்  நீடிக்கிறது.  அன்றைக்கு கைரேகையை பதிவு செய்ய சொல்லி பிரிட்டிஷ் காவல் துறை கட்டாயப்படுத்தியது. இன்றைக்கோ இந்திய அரசு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆதார் அட்டை என்ற பெயரில் 130 கோடி மக்களின் கைரேகைகளை பெற்று வருகிறது.   130 கோடி மக்களிடம் பெறப்படும் கைரேகைகள் எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறது என்பது  குறித்து மோடி அரசு மௌனம் காக்கிறது. இது  குறித்து கேட்டால் நலத்திட்டங் களுக்காக என பூசி மெழுகுகிறது.  பெருங்காமநல்லூர் போராட்டத் திற்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  குற்றப்பரம்பரை சட்டத்திற்கு  எதிராகவும் பாதிக்கப்பட்ட  மக்களுக் காகவும் போராடியவர்கள் கம்யூ னிஸ்டுகள். கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் ப.ஜீவானந்தம், பி.ராம மூர்த்தி, கே.பி. ஜானகிஅம்மாள் ஆகியோர் விடுதலைப் போராட்டவீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் இணைந்து மதுரை மாவட்டம் செக்கானூரணி துவங்கி கூடலூர் வரை பிரச்சாரம் செய்தனர்.  இதன்பிறகே சென்னை மாகாண சட்டமன்றத்தில் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிரான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புத லுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணி பாத்திரம் வகித்தவர்கள் என்பதற்கு பெருங்காமநல்லூர் தியாகிகள் இன்றும் சாட்சியாக உள்ளனர்” என்று தெரிவித்தார். (ந.நி.)