tamilnadu

img

‘மக்கள் முன் இருக்கும் ஒரே நம்பிக்கை செங்கொடியே!’

ஈரோடு, மே 19- மக்கள் முன் இருக்கும் ஒரே நம்பிக்கை செங்கொடி தான். செங்கொடி இயக்கம் பலமாக  இருந்தால் தான் மக்கள் உரிமைகளை பெற  முடியும் என்று கடம்பூரில் நடைபெற்ற மலைவாழ்  மக்களுக்கான சிறப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  கடம்பூர் மலை வட்டார மக்கள் கோரிக்கை மாநாடு புதனன்று நடைபெற்றது. இம்மாநாட்டி ற்கு கடம்பூர் மலை வட்டாரச் செயலாளர் சி.துரை சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.சடையலிங்கம் வரவேற்றார். மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகி யோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இம்மாநாட்டில் மலையாளி மற்றும் லம்பாடி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுள்ள ஒன்றிய அரசு இவர்களை பழங்குடியினராக உடனடியாக அறி வித்திட வேண்டும். வன உரிமை சட்டம் 2006 ஐ  செயல்படுத்தி பழங்குடியின மக்களுக்கு நில உரிமைச்சான்று (பட்டா) வழங்கிட வேண்டும். வனப்பகுதியில் விளையும் சிறு மகசூல் சேக ரிக்கும் உரிமையை உறுதி செய்திட வேண்டும். மனித, வன விலங்கு மோதலை நிரந்தரமாக தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்து கூட்டுறவு  சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன

கே.பாலகிருஷ்ணன்

முன்னதாக, இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  பங்கேற்று பேசுகையில், தொழி லாளர்கள் தான் சம்பளம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடுவார்கள். இன்று அரசு ஊழியர்களும், முதலாளிகளும் சங்கம் வைத்து போராடுகிறார்கள். நாம் நமது கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய அவ சியத்தில் உள்ளோம். 2006ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் கூட வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நிலைமை இதுதான். ஆதிவாசி மக்களுக்கும், பழங்குடியினருக்குமான இந்த சட்டத்தை கடந்த 10 வருடமாக ஆட்சியில்  இருந்த அதிமுக முறையாக செயல்படுத்தியிருந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலம் வழங்கப் பட்டிருக்கும். ஆனால் செய்யவில்லை.  மலைவாழ் மக்களுக்கு பட்டா, நிலம் கொடுக்கும் இந்த சட்டத்தை மோடி அரசு திருத்த  முயல்கிறது. இந்த ஆபத்தை நாம் ஒற்றுமை யாக எதிர்கொள்ள வேண்டும். நமக்கான உரிமை களை வழங்குவதை விடுத்து பாஜகவும், ஆர் எஸ்எஸ்-சும், இந்து முன்னணி உள்ளிட்டவை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என மலை கிராமங்களில் ஒற்றுமையாக இருக்கும் மக்க ளை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிக்க  நினைக்கின்றனர். இந்துக்களுக்கு என்று 50 சத விகிதம் பெட்ரோல், டீசல் விலை குறைவில்லை. விலைவாசி மதம் பார்ப்பதில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மத மோதலை ஏற்படு த்தி ரத்த ஆறு ஓட வேண்டும் என்பதற்கான வேலையை செய்கின்றது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது.

இடஒதுக்கீடு இல்லாமல் போட்டியிட முடியுமா?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினர் சான்று இல்லை. அனைத்து சாதியினரும் இட ஒதுக்கீட்டிற்குள் வரும் போது இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை இதனால் மறுக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரை யாக படித்தவர்களுடன் 90 சதவிகிதம் கைநாட்டாக உள்ள இந்த மக்கள்  இட ஒதுக்கீடு இல்லாமல் போட்டி போட முடியுமா? இந்த மக்களுக்கு இனச் சான்று வழங்க முடியா தென்றால் கலெக்டர், டிஆர்ஓ என அதிகாரி களும், அவர்களுக்கு கார், ஜீப் ஆகியவையும் எதற்கு? எனவே இனச்சான்று வழங்கும் வரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு தயாராக வேண்டும். இனச் சான்று வழங்க வேண்டிய அதிகாரம் மோடி கையில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் பரிந்து ரை செய்தால் அது நடக்கும். அது நடக்கும் வரை  நீடித்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இனியும் ஏமாளிகளாக இருக்கக் கூடாது. 30 ஆண்டு காலம் சட்ட போராட்டம் நடத்தி பேரறி வாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல,  நாமும் போராடி நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். இன்று மக்கள் முன்  இருக்கும் ஒரே நம்பிக்கை செங்கொடிதான். 20 ஆண்டுகளுக்கு முன் வனங்களில் இருந்த  நிலை இன்று இல்லை. யாரை வேண்டுமானா லும் கைது செய்யலாம், பெண்களை துன்புறுத்த லாம் என்ற நிலை மாறியுள்ளது. செங்கொடியும், மார்க்சிஸ்ட் கட்சியும் அந்நிலைமைகளை மாற்றி யுள்ளது. மலைவாழ் மக்களுக்கு அரசியல் சட்டம்  வழங்கியுள்ள உரிமைகளை மற்றவர்கள் தட்டிப் பறிக்கிறார்கள். செங்கொடி இயக்கம் பலமாக இருந்தால் தான் மக்கள் உரிமைகளை பெற முடியும் என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

டில்லிபாபு

இதைத்தொடர்ந்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவருமான பி.டில்லிபாபு பேசுகையில், அரசும், காவல்துறையும், வனத்துறையும், மழையும் மிரட்டிக் கொண்டி ருக்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலைவாழ் மக்களின் கோரிக்கைக்காக மாநாடு நடத்திக் கொண்டுள்ளது. பழங்குடி யினர் சான்று வழங்கு, வன உரிமை சட்டத்தை  அமலாக்கு என போராடிக்கொண்டிருக்கிறோம், 2007இல் தமிழகத்தில் பழங்குடியின நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கான நிதி ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வாரியம் மாற்றியமைக்கப்படவில்லை. ஆட்சி மாறியபோதும் பழங்குடியின நல வாரியம் செயல்படாமல் முடங்கியது. வாச்சாத்தி போன்ற வழக்குகளில் பல உயர் அதிகாரிகள் தண்டனை பெற்ற பிறகும், வனத்துறை அதிகாரிகள் திருந்தவில்லை. பொய் வழக்கு போடுவதும், துன்புறுத்துவதும் தொடர்கிறது. கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல ஆடு, மாடுகள் மேய்க்கக் கூடாது என்ற உத்தரவை தமிழக அரசு  பரிசீலித்து இதனை நீக்க வேண்டும். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, இப்பகுதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து போராடுவோம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் பேசுகையில், மலை வளமும், சுற்றுச் சுழலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மலை மக்களிடம் காட்டும் அதிகாரத்தை பழங்குடியில்லாதவர்கள், மலை வளத்தை சீரழிப்பவர்களிடம் வனத்துறை காட்டுவதில்லை. வனத்தையும், வளத்தையும், வன மக்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் யாரைவிடவும் மார்க்சிஸ்டுகள் மிகுந்த  அக்கறையுள்ளவர்கள். வன வளத்தை கூறு போட்டு விற்க ஒன்றிய மோடி அரசின் முயற்சியை எதிர்த்து வலிமையான போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

முன்னதாக, இம்மாநாட்டில் குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர். திருத்தணிகாசலம், சிபிஎம் மூத்த தோழர்கள் கே.துரைராஜ், எஸ்.முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முனுசாமி, கே.எம். விஜயகுமார், நவீன், ஆர்.கோமதி,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.மாரி முத்து, சகாதேவன், கே.எம்.விஜயகண்ணன் மற்றும் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்  கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சடையப்பன் நன்றி கூறினார்.
 


 

;