tamilnadu

img

சாதி மறுப்புத் திருமணம் கிரிமினல் குற்றமா?

தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிராக சாதிய சக்திகள் நடத்திய தாக்கு தலும், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை களும் வரலாறு காணாதது ஆகும். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் ஆகிய கிரா மங்களில் நடத்தப்பட்ட வன்முறை வெறி யாட்டம் ஜனநாயக சக்திகளின் மனசாட்சியை உலுக்கும் சம்பவங்களாகும். சாதி மறுப்பு திருமணத்திற்கு அதுவும் தலித் இளைஞன் மற்ற சாதி பெண்ணை காதலித்து மேற் கொண்ட சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான  இலக்கு இத்தாக்குதலின் முக்கிய அம்ச மாகும். 2012 நவம்பர் 7இல் இக்கிராமங்களின் 300 வீடுகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. அடைத்த வீடுகளின் பூட்டை உடைப்பது, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள நகைகள், பணத்தை கொள்ளையடிப்பது, பிரிட்ஜ், கட்டில், மின்விசிறி, கேஸ் அடுப்பு மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உடைத்து நொறுக்குவது, துணிகளை தீயிட்டு கொளுத்து வது போன்ற வன்முறைச் சம்பவங்களை ஒவ்வொரு வீட்டிலும் சாதிய சக்திகள் அரங் கேற்றின. இதுபோக, தாக்குதலின் இறுதிக் கட்டமாக பெட்ரோல் ஊற்றி வீட்டையே நெருப் புக்கு இரையாக்குவது என்ற முறையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஒரே மாதிரியான தாக்குதல்கள் 300 வீடுகளிலும் நடந்தேறியுள்ளன. தலித் மக்கள் இக்கிராமங்களில் இழந்த சொத்துக்களின் மதிப்பு பல பத்து கோடி களை தாண்டும் என்பதில் ஐயமில்லை. பெங்களூர், திருப்பூர் என பல ஊர்களுக்கு சென்று இக்கிராமங்களின் இளைஞர்கள் கடுமையாக உழைத்து சிறுகச்சிறுக சேகரித்த சொத்துக்கள் முழுவதும் சாதி வெறியர்களால் கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.

தலித் மக்களின் உயிர்களை தவிர அவர்களுடைய உடைமைகள் முழுவதும் இக்கிராமங்களில் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையையே பறிகொடுத்தவர்களாக- சொந்த கிராமங்களிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். ஒரு தலித் பெரியவர் தழுதழுத்த குரலில் கூறினார். “எங்களது வாழ்க்கை 50 ஆண்டுகளுக்கும் முன்பிருந்த நிலைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது”. இக்கொடூரமான தாக்குதலுக்கு காரணம் என்ன? 23 வயது நிரம்பிய தலித் இளைஞன் இளவரசன் - 20 வயது நிரம்பிய பிற சாதி பெண் திவ்யா. இவர்களிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இது மிகப் பெரிய குற்றமாம். அதுவும், தலித் இளைஞன் பிற சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக 3 கிராமங்களில் உள்ள அனைத்து தலித் குடும்பங்களுக்கும் சாதி வெறியர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அந்த இளம் தம்பதியரை தங்கள் முன்பு ஆஜர்படுத்துமாறு சாதி பஞ்சாயத்து கட்டளை யிட்டிருந்தது. இதன் நோக்கம் அறிந்த அத்தம் பதியர் தாங்கள் இணைந்து வாழ விரும்பு கிறோம் என உறுதிபட தெரிவித்துவிட்டு ஆஜ ராக மறுத்துவிட்டனர். இதன்பிறகு, அம்பு திவ்யாவின் தந்தை நாக ராஜ் மீது பாய்கிறது. பெண்ணை உருப்படி யாக வளர்க்கவில்லை என அவரைச் சாடு கிறார்கள். கேவலமான வார்த்தைகளால் திட்டு கிறார்கள். சாதி பெருமையை கெடுத்துவிட்ட தாக அலறுகிறார்கள். இத்தகைய சாதி வெறி யர்களின் அலறல்களை பொறுக்க முடியாமல் நாகராஜ் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனார். பிறகு, நாகராஜ் மரணத்திற்கான பழியை யும் தலித் மக்கள் மீது சுமத்துகின்றனர். தலித் இளைஞன் தன் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும் தலித் மக்கள் துன்புறுத்திய தாலும் தான் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி அவரது சடலத்தை பிரதான சாலையில் வைத்து சாலை மறியல் நடத்துகின்றனர். சாதி உணர்வை விசிறிவிட்டு சாதி வெறியாக மாற்றி 2000 பேர் திரட்டப்படு கின்றனர். கையில் உருட்டுக் கட்டைகளோடும், பெட் ரோல் பாட்டில்களோடும் தலித் குடியிருப்பு களுக்குள் நுழைகின்றனர். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் தலித் இளை ஞர்கள் வேலை தேடி பிழைப்புக்காக பெங்க ளூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு சென்று விட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மட்டுமே கிராமங்களில் இருந்த னர். வெறி கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வருவது கண்டு அவர்கள் அஞ்சி உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அவசர அவசரமாக ஊரை விட்டு ஓடி வெளியேறுகின்றனர்.

இதன் பிறகு தான் ஊருக்குள் புகுந்து மேற்கண்ட வாறு 3 கிராமங்களையும் நரவேட்டை ஆடி யுள்ளது சாதி வெறிக்கும்பல். சாதிய சக்திகள் சட்டத்திற்கு சவால் விடும் சம்பவங்களில், காவல்துறையின் நடவடிக்கை கள் ஏற்க முடியாதவை ஆகும். நத்தம், கொண் டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் சுமார் 5 மணி நேரம் சாதிய சக்திகள் தாக்குதல் நடத்திய நிலையில் காவல்துறையினர் எவ்வித தலை யீடும் செய்யவில்லை. தங்களுக்கு தெரியாது என்பதையோ போதுமான காவலர்கள் இல்லை என்பதையோ நம்புவதற்கு இல்லை. காவல்துறை அதிகாரிகள் சிலரும் சாதிய உணர்வுடன் செயல்பட்டுள்ளனர் என்ற கருத்தை புறக்கணிக்க முடியாது. தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அச்சமயத்தில் செயல்பட்ட அஸ்ரா கார்க் ஒரு நேர்மையான அதிகாரி. அவர் மதுரை மாவட்ட பணிக்கு அனுப்பப்பட்டுவிட்ட பின்னணி யில் தலித் குடியிருப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. அவர் தர்மபுரி திரும்பிய பிறகு தான் நிலைமையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் கூறினர். நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்ப ட்டனர். இத்தகைய தாக்குதல்கள் தலித் மக்கள் மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் நடந்த பின்னணியில் அரசியல் கட்சிகளின் செயல் பாடுகள் கவனிக்கத்தக்கதாகும். அக்காலத் தில் அஇஅதிமுக அதிகாரத்தில் இருந்தது. அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத் தின் பல இடங்களில் தலித் மக்களின் மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் சாதிய சக்தி களும் ஏன் காவல்துறையும் கூட கொடூரமான தாக்குதல்களை நடத்தின. கொடியங்குளம், நாலு மூலைக்கிணறு, சங்கரலிங்கபுரம் என இதற்கான ஒரு பட்டியலையே நம்மால் தர முடியும். இதர முதலாளித்துவ கட்சிகள் தலித் மக்கள் மீதான சாதிய சக்திகள் - காவல் துறையின் தாக்குதல்கள் குறித்து போது மான தலையீடுகள் செய்வதில்லை. வாய் நிறைய சமூக நீதி பேசினாலும் இக்கட்சிகள் தலித் மக்கள் பால் காட்டும் அக்கறை இத்தகையதுதான். சிபிஐ(எம்), சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் வரலாறு நெடுகிலும் தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியான நிலை எடுத்து வந்துள்ளன.

விடு தலை சிறுத்தைகள் கட்சி தலித் மக்கள் மீதான தாக்குதல்களையும் அடக்குமுறை களையும் உறுதியாக எதிர்த்து வரும் இயக்க மாகும். தர்மபுரி தாக்குதலை தொடர்ந்து தலித் மக்களை நேரடியாக சந்திக்க வந்த தொல் திருமாவளவன் தர்மபுரியில் ஒரு கண்டனக் கூட்டத்தில் உரையாற்றினார். சாதிய சக்தி களின் இத்தகைய தாக்குதல்களுக்கு தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்ட திரு மாவளவன் “தலித் மக்களை பாதுகாப்பதற் கான போராட்டங்களிலும், முயற்சிகளிலும் எங்களோடு வரலாறு நெடுகிலும் சிபிஐ(எம்), சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் உறுதிபட நின்றுள்ளன. தர்மபுரி தாக்குதலுக்கு எதிராகவும், இடதுசாரி இயக்கங்கள் வலு வான போராட்டங்களையும், முயற்சிகளை யும் மேற்கொள்ளும் என நம்புகிறேன்” என உறுதிபட தெரிவித்தார். அவர் எதிர்ப்பார்ப் பிற்கு ஏற்பவே நிகழ்வுகள் நடந்தன. சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி இயக்கங் கள் தர்மபுரி தாக்குதல்களுக்கு எதிராக வலு வான தலையீடுகளை செய்தன. சம்பவம் நடந்த மறுநாள் 2012 நவம்பர் 8இல் சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர்கள் டில்லிபாபு எம்.எல்.ஏ., குமார் (இப்போ தைய சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர்) உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையின் தடையை மீறி தாக்குதல் நடைபெற்ற நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் ஆகிய கிரா மங்களுக்கு வருகை தந்தனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களோடு இணைந்து நின்றனர். சம்பவம் நடந்த ஒரு சில நாட்களுக்குள் கட்சியின் அன்றைய மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இக்கிராமங்களுக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதலும், தைரியமும் அளித்தனர். தர்மபுரியில் ஒரு கண்டன கூட்டத்திலும் இவர் கள் உரையாற்றினர். இதனை தொடர்ந்து சிபிஐ(எம்) சட்டமன்ற குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.டில்லிபாபு, பீம்ராவ் உள்ளிட்ட தலைவர்கள் இக்கிராமங்களுக்கு வந்தனர்.  

அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இக்கிராமங்களுக்கு வந்து மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடி யாக விசாரித்து ஆறுதல் கூறினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமு வேல்ராஜ் இக்காலத்தில் பல முறை தர்மபுரி வந்தார். ஒவ்வொரு வீடாகச் சென்று பாதிப்பு களின் விபரம் அறிந்து தமிழக அரசின் மூலம் நஷ்டஈடு கிடைக்க ஏற்பாடு செய்தார். வலு வான போராட்டங்கள் மற்றும் நிர்ப்பந்தங் களுக்கு பிறகு தமிழக அரசின் நிவாரணத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் தவணை ரூபாய் ஐம்பதாயிரமும், அடுத்தடுத்து பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு வீட்டிற்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்கப்பட்டது. சிஐடியு, விவசாயிகள் சங்கம், மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள் ஏராளமாக நிதி திரட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கினர். எல்ஐசி ஊழியர்கள் இம்மக்களுக்கு அளித்த நிவாரணம் கணிசமானதாகும். சுவாமிநாதன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கான பெரு முயற்சிகளை எடுத்தனர். மின்சாரம், போக்கு வரத்து தொழிலாளர்கள் அடுத்தடுத்து பெரு மளவிலான நிவாரணமும், உணவுப்பொருட் களும் வழங்கினர். தர்மபுரி தாக்குதலை கண்டித்து சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு கண்டன இயக் கங்கள் நடந்தன. மனித உரிமை அமைப் பிற்கு இடதுசாரி இயக்கங்கள் சார்பாக புகார் அனுப்பப்பட்டு அதன் விசாரணையும் நடை பெற்று சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏராளமான தலித் அமைப்பு கள் தர்மபுரியின் இந்த மூன்று கிராமங்களுக் கும் வந்து அம்மக்களுக்கு நிவாரணப் பொருட் கள் வழங்கி தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். மேற்கண்ட மகத்தான மனிதாபிமான உதவிகளும், ஒருமைப்பாடும் பெருமளவில் தெரிவிக்கப்பட்டாலும் தர்மபுரியின் மூன்று கிராமங்களின் துயரங்கள் தொடர்ந்தன.

இளவரசன்-திவ்யாவை பிரிக்க பெரு முயற்சிகள் நடந்தன. சாதிய சக்திகள் இதற் காக உயர்நீதிமன்றத்தை அணுகின. உயர்நீதி மன்றம் முன்பு ஆஜரான இளவரசனும், திவ்யா வும் தாங்கள் இணைந்து வாழ விரும்புவதாக இரண்டு முறை உறுதிபட தெரிவித்தனர். இதனை பதிவு செய்த உயர்நீதிமன்றம் அவர் கள் இருவரும் இணைந்து வாழ்வதை அங்கீ கரித்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் வழக்கை தள்ளி வைத்தது.  ஆனால், திவ்யாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணம் கூறி  திவ்யாவை அவருடைய தாயாருடன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் வந்தபோது, மனிதநேய அடிப்படையில் திவ் யாவும் தாயாரை பார்க்க அவருடன் செல்வ தாக விருப்பம் தெரிவித்தார். இப்போது உயர்நீதிமன்றம் திவ்யாவை இளவரசனிட மிருந்து பிரித்து தாயாருடன் செல்ல தீர்ப் பளித்தது. இளவரசன்-திவ்யா இணைந்து வாழ அங்கீகாரமும், பாதுகாப்பும் தராமல் திவ்யாவை தாயாருடன் செல்ல அனுமதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருக்கும் வியப்பளித்தது.  இத்தீர்ப்பிற்கு பிறகு திவ்யாவை இளவர சனுடன் இணைந்து வாழ சாதிய சக்திகள் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை சாதிய சக்திகள் இளவரசனிடமிருந்து திவ்யா வை நிரந்தரமாக பிரிக்க பயன்படுத்திக் கொண்டன. இதனால், இளவரசனுக்கு அதிர்ச்சியும், சோர்வும் ஏற்பட்டது. இந்நிலையில், ஒருசில தினங்களில் இள வரசனின் உடல் ஒரு ரயில்வே ட்ராக் அருகில் கண்டறியப்பட்டது. அவர் எவ்வாறு மரண மடைந்தார் என்ற பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் பரவின. ஒரு பகுதியினர் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த னர். எனினும், திவ்யா பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட இளவரசன் மரணம் என்ற சோக நிகழ்வு தமிழக மக்களை பதற வைத்தது. தமிழகத்தில் சமீப காலங்களில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதையொட்டி பல படுகொலைகளும், அதையொட்டிய வன்முறைகளும் நிகழ்ந்தன. இளவரசன்-திவ்யா, மாரிமுத்து-அபிராமி, சங்கர்-கௌசல்யா, திலிப்குமார்-விமலாதேவி, கனகராஜ்-வர்ஷினி, நந்தீஸ்-சுவாதி என இப்பட்டியல் நீள்கிறது.

தர்மபுரியில் இளவரசன் திவ்யா திருமணத்தை யொட்டி தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நடந்த காலத்தில் தர்மபுரி மாவட்டக்குழுவின் பணிகள் பாராட்டத்தக்கதாகும். அதுமட்டு மல்ல, தர்மபுரி மாவட்ட செங்கொடி இயக்க வரலாற்றில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய பெருமை மிக்க பாரம்பரி யத்தையும், இங்கு நினைவு கூர்வது அவசியம். 1950 களில் அரூர் நகரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலூன்களில் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ முடியாது. ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் இயக்கம் போராடி அவர்களுக்கு அதற்கான உரிமையை பெற்றுத் தந்தது. இதேபோல, தீர்த்தமலை புனித தீர்த்தத்தில் தலித் மக்கள் குளிக்க முடியாத காலம் இருந்தது. அப்போதும் செங்கொடி இயக்கம் போராடி அவர்களை அத்தீர்த்தத்தில் குளிக்க உரிமை பெற்றுத் தந்தது. 1960களிலேயே கொங்கவேம்பு வேட்ரபட்டி கிராமங்களில் தலித் மக்களுக்கு காலில் செருப்பு அணியும் உரிமை போராடி பெற்றுத் தரப்பட்டது. அது போல, அக்கிராமங்களில் இருந்த தேநீர் கடை களில் இரட்டை குவளை முறை போராடி ஒழிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டத்திற்குட் பட்ட பல கிராமங்களில் தலித் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதற்காக சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டனர். செங்கொடி இயக்கம் போராடி தண்ணீர் எடுக்கும் உரிமை, கடைகளில் பொருட்கள் வாங்கும் உரிமை போன்றவற்றை பெற்றுத் தந்தது. இண்டூரில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை ஒழிப்பு, சலூன்கடைகளில் முடி திருத்தும் உரிமை, உணவகங்களில் சமமாக அமர்ந்து உணவருந்தும் உரிமை போன்றவை போராடி தலித் மக்களுக்கு பெற்றுத் தரப்பட்டன.

பொன்னகரம் அளேபுரம் அற நிலையத்துறையின் கீழிருந்த கோவிலில் தலித் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந் ததை எதிர்த்து போராடி அவர்களின் ஆலய நுழைவு உரிமை பெற்றுத் தரப்பட்டது. நெருப் பூரில் அமலில் இருந்த இரட்டை குவளை முறை, பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்கத் தடை போன்றவற்றை எதிர்த்து செங்கொடி இயக்கம் போராடி அவற்றை முறியடித்தது. தலித் மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்தது. ஏரியூர், அரூர், டி.ஆண்டியூர் தலித் மக்களுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுடுகாட்டுப் பாதை மீட்டுத்தரப்பட்டது.  1998 செப்டம்பர் 5 அன்று கணிசமான பெண்கள் உள்பட 5000 பேர் பங்கேற்ற தீண் டாமை ஒழிப்பு மாநாடு அரூரில் நடைபெற்றது. என்.சங்கரய்யா, கே.வரதராசன், பெ. சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டக்குழு இதற்கான சிறப்பான ஏற்பாடு களை செய்திருந்தது. தர்மபுரி மாவட்டக்குழு  வின் ஒட்டுமொத்த பணிகள் காரணமாக இம்மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் வளர்ந்தது. இதன் காரணமாக டில்லிபாபு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக அரூர் தொகுதி யிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

இவர் சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் தலித், பழங்குடி மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பகுதி மக்களுக்காகவும் அவரும், சிபிஐ(எம்) இயக்கமும் தியாகப்பூர்வமாக செயல்பட்டனர். தர்மபுரி உள்ளிட்டு தமிழகம் முழுவதும் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தலித் மக்கள் அனைவருமே உழைப்பாளிகள் தான். பொருளாதார ரீதியாக / சமூக ரீதியாக என இரட்டை ஒடுக்கு முறைக்கு உள்ளான உழைப்பாளிகளாக இவர்கள் உள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளை வீழ்த்துவதும், தமது ஒருமைப்பாட்டை தெரி விப்பதும் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்க கடமையாகும்.  நமது தொழிற்சங்க இயக்கங்களும், ஜன நாயக இயக்கங்களும் இத்தகைய புரிதலை அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் உணர்த்தி தலித் மக்களை பாதிக்கும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர்களையும் ஒன்று திரட்டி போராட்டக் களத்தில் இறக்க வேண்டும். தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு இது அவசியமாகும். தலித் மக்கள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களிலும் கணிசமானவர் கள் உழைப்பாளிகளே. இவர்கள் மத்தியில் செயல்படும் சாதிய சக்திகள், சாதிய உணர்வை வெறியாக மாற்றி தலித் மக்க ளுக்கு எதிராக திரட்ட முயல்கின்றனர். இது உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரான சதி யாகும். இச்சதியை முறியடிக்க ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக இயக்க மும் அணிதிரள வேண்டும். சாதிய சக்தி களை அம்பலப்படுத்துவதும், முறியடிப்ப தும் மக்கள் ஒற்றுமையை நிலை நாட்டவும் சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்தவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளாகும்.

;