tamilnadu

img

விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

விதை விற்பனை  நிலையங்களில் ஆய்வு

பாபநாசம், ஆக. 29-  தஞ்சாவூர் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் தலைமையில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்  தஞ்சாவூர், அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் 16 விதை விற்பனை நிலையங்களில் வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்  விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விரிவாக்க மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடிமரத்துமூலை, காட்டுதோட்டம், மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், இரும்புதலை, திருக்கருக்காவூர், பாபநாசம், கபிஸ்தலம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.   விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.  இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை, 1983 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.  அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விரிவாக்க மையங்கள் என 16 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது 35 சம்பா விதை நெல் அலுவலக மாதிரிகள், முளைப்பு திறன் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்தில் உள்ள விதை பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.  ஆய்வில், விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்த 6 விதை விற்பனை குவியல்களுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள 14.5 மெ.டன் விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.  இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா மற்றும் விதை ஆய்வாளர்கள் சுரேஷ், நவீன் சேவியர் மற்றும் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.