மதுரை:
சீவலப்பேரி கிராமத்தில் உள்ள ஆற்றில் மணல் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளைதடை விதித்துள்ளது. செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதாக அனுமதி பெற்று, சிலர் வெளிமார்க்கெட்டில் முறைகேடாக ஆற்றுமணலை விற்பனை செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாரியப்பன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தாமிரபரணி ஆறு மற்றும் சிற்றாறு சந்திக்கும் பகுதியிலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக சிலர் அனுமதி பெற்று ஆற்றுமணலை சட்டவிரோதமாக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியோடு அள்ளி, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதினால் விவசாயிகளின் நீர்வள ஆதார உரிமை பாதிக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு நீர்வள ஆதாரமே இல்லாமல் போய்விடும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்தவில்லை. எனவே தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தலையிட வேண்டும் என்று கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 29 அன்று நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன்,பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆற்றுமண் அள்ளப்படுவது இல்லை என்று தெரிவித்ததை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.மேலும் திருநெல்வேலி மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர்கள் மணல் அள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தொடர்ந்து ஆற்றுமண் அள்ளுவதற்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், சுப்பு முத்துராமலிங்கம், சீனிவாசராகவன் ஆகியோர் ஆஜராகினர்.