களத்துமேட்டுக் குவியலில்
விதைநெல்லுக்குப்போக விற்ற பணத்தில்
பொண்டாட்டி புள்ளைக்கு புதுத்துணியெடுத்து
கொம்புசீவி உழவுமாட்டை கொளத்துல குளிப்பாட்டி
கழுத்துல கரும்பும் கிழங்கும் கட்டி
காய்கறிப் பொங்கல்ஊட்டி
அடுத்தநாள் அவுத்துவிட்டா
ஜல்லிக்கட்டுக் காளையாட்டம்
துள்ளிக்கிட்டு ஓடுமே...
அம்மன்கோயில் திடலிலே
கும்மாங்குத்துப் பாடலோட
அத்தைபுள்ள மாமன்புள்ள
அடிக்கிற கூத்து அலப்பறையாகுமே
மாடுகட்டிப்போரடித்தால்
மாளாது செந்நெல்லுன்னு
ஆனைகட்டிப் போரடித்து
ஊருக்கே படியளந்த உழவன்
கூனிக்குறுகி நிற்கிறான்
ஆயிரம் ரூபாய் கியூவில்
புத்தரி புதுப்பானை
மஞ்சள்கொத்தும் மாறிப்போயி
குக்கர் விசிலு கூவுது பொங்கலுன்னு....