tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

காஞ்சிபுரம், ஜன.18- குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு வைத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்ப டுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத் ்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக் ்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சரி வர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே காவலேன்கேட் பகுதியில் செவ்வாயன்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சின்ன காஞ்சிபுரம் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம், தண்ணீர் வழங்க உடனே நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்களாக வீணாக கடலில் சென்று கலந்த பின்பும் கூட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக் ்குறை ஏற்பட்டு இருப்பது மிகவும் வருத்தம ளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மெரினா கடற்கரையில் கிடந்த ஆண் சடலம்

சென்னை, ஜன.18- மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையாக? இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரைகள் அனைத்தும் மூடப்ப ட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை, நொச்சி நகர் பகுதியில் உள்ள கடல் மணல் பரப்பில் திங்களன்று அதிகாலை ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாப்பூர் போலீசார், கடல் மணல் பரப்பில் கிடந்த ஆண் சடலத்தை  மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மெரினா கடற்கரையில் சடலமாக கிடந்தவரின் பெயர் ஜெகதீஷ் என்பதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குநரகத்தில் உதவியாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் ்தொடர்ந்து ெஜகதீஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

பொன்னேரி, ஜன.18- பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரியை அடுத்த வெண்பாக்கம், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்தார். திங்களன்று  காலை அவர் தனது மனைவியுடன் பெரும்பேடு ஏரியில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு இடத்திற்கு வாத்துகளை கொண்டு செல்ல ஏரியில் இறங்கினார். அந்த நேரத்தில் வாத்து குஞ்சுஒன்று ஏரியின் நடுவே சென்று விட்டது. அதனை விரட்டியபோது ஏரியில் இருந்த அல்லிக் கொடியில் செல்வராஜ் சிக்கிக் கொண்டார்.இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் மனைவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய செல்வராஜை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

பெரியபாளையம்,ஜன.18- வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கல் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அதில் வந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது 1 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் திருநின்றவூர், கன்னட பாளையத்தை சேர்ந்த சுரேஷ்பாபு, பாகல்மேடு பெரிய காலனியை சேர்ந்த செந்தர்ராஜன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ்பாபு, செந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

உத்திரமேரூர், ஜன.18- உத்திரமேரூர் அருகே அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாப்ப நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர் 2 நாட்களாக தொடர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. வேறு எந்த உணவும் எடுத்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அவர் திடீரென வீட்டின் முன் பக்கமாக மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உத்திரமேரூர் காவல்நிலையத்தின்ர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,

அகில இந்திய  திறனாய்வு  தேர்வு

சென்னை,ஜன.18-  சட்டம், இளங்கலை வணிக நிர்வாகம், மனித வள மேம்பாடு மற்றும்திட்ட மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்களுக்கான அகில இந்திய  கேட் ஸ்காலர்ஷிப் மாதிரி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23)  நடைபெறவுள்ளது. ட்ரையம்பண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் ்மென்ட் எஜூகேஷன் நிறுவ னம் சார்பில் இலவசமாக நடத்தப்படும் இந்த  மாதிரி தேர்வுகளை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே எழுதலாம். இந்த தேர்வு களில்சிறப்பாக செயல்படும் மாணவர்க ளுக்கு 2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான டைம் கல்வி நிறுவனத்தின் சட்டம், இளங் ்கலை வணிக நிர்வாகம், மனிதவள மேம்பாடு மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்களுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்பு கட்டணத்தில் 100விழுக்காடு கட்டண தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் 250 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ்

சென்னை, ஜன. 18- பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப் ்பட்டிருந்தன. ஆனாலும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி ஒருசில ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவ ரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்திருந்தார். மேலும் இதற்காக12 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவ தும் ஆம்னி பேருந்துகளில் திடீர்ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 250 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித் ்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்ப டையில் அதன் உரிமையாளர்களுக்கு நோட் ்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர அநேக ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இருந்ததும் தெரிய வந்தது. போக்குவரத்துத் துறை விதிகளை மீறி இயக் ்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் திங்கட்கிழமை முதல் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு பெரும்பாலானவர்கள் சென்னை திரும்பு கிறார்கள். இதனால் ஆம்னி பேருந்து களில் தொடர்ந்து சோதனை நடை பெறுகிறது. கூடுதல் கட்டணம் வசூலித் ்தால் பொதுமக்கள் 18004256151 என்ற இல வச தொலைபேசி எண் வழியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் அரசு நிர்ணயிப்பதில்லை. இதனால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, ஜன. 17- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம்  என்னும் ஊரில் உள்ள வயல் வெளி யில் அண்ணாமலையார் கோவி லுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வர லாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள ஆய்வு செய்த பொழுது, ராதாபுரத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் ஆதி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியின் மத்தியில் வேப்ப மரத்தின் கீழ் பலகை கல் ஒன்று இருப் பதைக் கண்டு, அங்குள்ள மக்களிடம் விசாரித்த பொழுது, அது பலகால மாக மண்ணில் விழுந்து கிடந்ததாக வும், சில வருடங்கள் முன் அதனை  எடுத்து மரத்தின் கீழ் நிறுவியதாக வும் தெரிவித்தனர். மண்ணில் பல வருடம் இருந்த தால், கற்பலகை மிகவும் அரித்து  கருப்பாகக் காட்சி தந்தது. அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் விஜய நகர காலத்திய எழுத்து தென்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 3 அகலமும் கொண்ட இப்பலகை கல்லின் முதல்  பாதியில் இடதுபுறம் சூரிய சந்திரர்  உடன் திருவண்ணாமலை கோயி லுக்கு தரப்பட்ட தானத்தைக் குறிக்கும் சோணாசலகிரியும், நடுவில் சூலம் மற்றும் வலது புறத்தில் இரு குத்து விளக்கு காட்டப் பட்டுள்ளது. இதற்குக் கீழ் உள்ள  மீதி பாதியில் 16, 17ஆம் நூற்றாண் டின் எழுத்தமைதியில் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. கல்வெட்டு செய்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல் வெட்டு சோழர்களையும் சிங்களவர் களையும் வென்றதாக வெற்றி செய்தி யைக் குறிப்பிட்டு “இராவிந குமாரர்  வேங் இராச” என்பவர் வக்கையூர் என்ற ஊரைத் தானமாக அளித்து  அதன் மூலம் அண்ணாமலையாருக் கும் உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும் 20 வெற்றிலையும் அடங்கிய அடைகாய அமுது அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்கூரைச் சேர்ந்த மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார் என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார். இக்கல்வெட்டில் பெரும்பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு மன்னர் பெயர் மற்றும்  காலம் தெளிவாகத் தரப்படவில்லை. எனினும் இக்கல்வெட்டில் உள்ள “வேங்” என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராகக் கருதலாம் என்று இக்கல்வெட்டைப் படித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார் . பிற்கால விஜயநகர ஆட்சியில் இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) மற்றும் மூன்றாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1632-1642) என்று இருவர் உள்ளனர். மூன்றாம் வேங்கடபதி ராயர் காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யம் பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு 300 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் காலம் முழுவதும் போரில் கழிந்ததாக வரலாறு கூறுகிறது. முதலாம் ஸ்ரீரங்கா ஆட்சியில் பெரிதும் வீழ்ச்சி கண்ட விஜயநகர சாம்ராஜியத்தை மீட்டு எடுத்து விஜயநகர பேரரசின் இரண்டாம் பொன் அத்தியாயத்தை எழுதி சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) காலத்தில் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்குக் கொடை வழங்கி இருந்தாலும் குறிப்பாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குப் பல கொடைகள் வழங்கியுள்ளதை இக்கோவிலில் பதிவாகியுள்ள 9  கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடி கிறது. எனவே இவரின் காலத்தில் தான் இத்தானம் வழங்கி இருக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. சுமார் 400 வருடம் பழமையான இக்கல்வெட்டு மூலம் திருவண்ணா மலையைச் சுற்றி உள்ள பல  ஊர்களில் இருந்து அண்ணாமலை யார் கோவிலுக்குக் கொடை பெறப் பட்டது போலவே இவ்வூரிலிருந்தும் தரப்பட்ட தானத்தை அறியமுடி கிறது.

மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

திருவண்ணாமலை, ஜன. 18- திருவண்ணாமலை பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன அவைகள் எப்போதாவது விவசாய இடங்க ளுக்குச் சென்று இரை தேடும். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அவைகளை விஷம் வைத்துக் கொன்று விடுகின்றனர். இந்நிலையில் வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில்  திருவண்ணாமலை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் திங்களன்று ரோந்து சென்றனர். அப்போது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீரனூர் ராஜபாளையம் என்ற பகுதியில் விவசாய நிலத்தில் பயிர்களை தின்ற 6 மயில்களை விஷம் வைத்துக் கொன்றிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசார ணையில் அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜா (57) என்பவர் தனது நிலத்தில் இரை தேடி வந்த மயில்களை விஷம்  வைத்துக் கொன்றது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஒரு  ஆண் மயிலும், ஐந்து பெண் மயில்களும் இறந்துள்ளன. தேசிய பறவையான மயில்களை வேட்டையாடிய குற்றத் திற்காக காசிராஜாவை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மயில்களை விவசாயிகள் கொல்லக் கூடாது. அவ்வாறு கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்திய மருத்துவமுறை மருத்துவர்களின் பணிஓய்வு வயது 65ஆக உயர்வு

புதுச்சேரி, ஜன. 18- புதுவையில் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களின் பணி ஓய்வு வயது 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை ஆளுநர் இந்திய மருத்துவ முறை, ஓமியோபதியில் பணிபுரியும் மருத்து வர்களின் பணிக்கால வயது வரம்பை 62இல் இருந்து 65ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 62 வயதை கடக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து 65 வயது  வரை பணியாற்றலாம். இவர்கள் சீனியர் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணி அமர்த்தப்படுவர். கடந்த 6 மாதத்திற்குள் 62 வயதை கடந்த மருத்துவர்கள் இந்த வயது  உச்சவரம்பு தளர்வை பயன்படுத்தி கொண்டு பணியில் நீடிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 அணைக்கட்டில் மீன்பிடி தொழிலாளி தவறி விழுந்து சாவு

சென்னை, ஜன. 18- பாகூர் அருகே அணைக்கட்டில் மீன் பிடித்த தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார். கடலூர் மாவட்டம் இரண்டாயிர விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அய்யப்பன் (32). இவருக்கு திருமணமாகி ஜீவா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் பாகூர் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சித்தேரி அணைக்கட்டில் மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி அய்யப்பன் ஆற்றில் விழுந்தார். இதனை யாரும் கவனிக்க வில்லை. இந்நிலையில் நீரில் மூழ்கிய அய்யப்பன் பிணமாக மிதப்பதை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்த வரின் உறவினருக்கு தெரிவித்தார். இதையடுத்து அவரது தாயார் பழனியம்மாள் (48) கொடுத்த புகாரின் பேரில் பாகூர் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து - வேன் மோதல்: 5 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஜன. 18- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஓலப்பட்டி யில் உள்ள சிப்காட்டில் ஓலா தனியார் தொழிற்சாலையும், ஷூ தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் திங்களன்று இரவு பணிக்கு சென்றவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த  ஓலா நிறுவனத்தின் தனியார் பேருந்தும், ஷூ தொழிற்சாலை யின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேனும் கும்மனூர் அருகில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பெண் தொழிலாளர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கல்லாவி  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் தேர்வில் யாருடைய குறுக்கீடும் இருக்காது: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி, ஜன. 18- புதுவையில் நடை பெறும் காவலர் தேர்வில் யாருடைய குறுக்கீடும் இருக்காது என அமைச்சர்  நமச்சிவாயம் உறுதிய ளித்தார். புதுவை காவல்துறை யில் காலியாக உள்ள 390 காவலர், 12 ரேடியோ டெக்னீஷியன் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது. இந்த பணிகளுக்காக விண்ணபித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி  தேர்வு  19ஆம் தேதி கோரி மேடு காவல் மைதானத்தில் தொடங்குகிறது. எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காமல் நேர்மை யாக நடைபெறும் வகையில்  கம்ப்யூட்டர் சிப் பொருத்தப் பட்ட பட்டை அணிந்து ஓட்டம்,  நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதிகள் துல்லியமாக கணக்கிடப்பட உள்ளது. தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோர் செல்போன் எடுத்து வர அனுமதி கிடை யாது. தேர்வில் ஈடுபடும் காவலர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறி வைத்திருந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டுள்ளது. தேர்வில் ஈடுபடும் காவ லர்களின் உறவினர்கள் தேர்வில் பங்கேற்றால், அவர் களை மாற்றுப்பணிக்கு அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. தேர்வு நடத்தும் அதிகாரிகளை சுழற்சி அடிப்படையில் மாற்றி பணி கள் வழங்கப்பட உள்ளது. தேர்வுக்கு வருவோர் கொரோனா இல்லை என்ற  சான்றிதழ் அளிக்க வேண் டும். இவர்கள் எளிதாக சான்றிதழ் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தால் வேறு தேதியில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கிடையே உடல்  தகுதி தேர்வை நேர்மை யாக நடத்த அனைத்து முயற் சிகளையும் எடுத்திருப் பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித் துள்ளார். யாருடைய குறுக்கீடும் இருக்கக்கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. அதிகாரி கள் மீது புகார்களோ, குற்றச் சாட்டுகளோ எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். அதிகாரத்தை தவறாக   பயன்படுத்தியது தெரியவந் தால், துறைரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்தால் காவ லர் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பரவல்: 50 விழுக்காடு அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும்

புதுச்சேரி, ஜன. 18- கொரோனா பரவல் அதிகரித்து வருவதை யொட்டி புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என்று அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரியில் அனைத்து அலுவலகங் களில் பணிபுரியும் குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். அதே போல் சார்பு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், துறை நிர்வாகிகள் அனைவரும் 100 விழுக்காடு பணிக்கு வரவேண்டும். குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு அதிகாரி கள், ஊழியர்கள் 50 விழுக்காட்டினர் பணிக்கு  வந்தால் போதும். அதேபோல் கர்ப்பிணிகள், உடல் குறைபாடு உடையோர் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து பணியாற்றலாம். ஆனால் இந்த உத்தரவு அத்தியாவசிய துறைகளுக்கு பொருந்தாது. மேலும் வரு வாய் தொடர்பான துறைகள், கொரோனா  தொடர்பான பணிகளில் உள்ள துறைக ளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர் அலுவலகம் வருவதில் விலக்கு அளிக்க லாம். வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பணி நேரத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வசதியை உறுதிப்படுத்த வேண்டும். அலுவலக கூட்டங்களை வீடியோ கான்பரசிங் முறையில் நடத்தலாம். பார்வை யாளர்களைத் தவிர்க்கலாம். அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றுவோர் 100 விழுகாடும் தடுப்பூசி போட்டதை துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பணியிடங்கள் தூய்மையாக இருப்பதையும், அலுவலக வளாகங்கள், உணவு விடுதிகளில் கூட்டம் கூடுவதையும் தவிர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை  இம்முறை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

;