tamilnadu

img

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன தனியார்மய அறிவிப்பை உடனே திரும்பப்பெறுக.... பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்....

மதுரை:
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றை முழுமையாகத் தனியாருக்கு விற்பனை செய்யப் போவதாக நடப்பாண்டு பட்ஜெட் முன்மொழிவில் அறிவித்திருப்பதை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.  மிகப்பெரும் கார்ப்பரேட்நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சாதாரண, நடுத்தர பாலிசிதாரர்கள் உள்பட அனைத்துத் தரப்புபொது இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் களுக்கும் கடும் பாதிப்பைத் தரக்கூடியதாகவும் உள்ள இந்த அறிவிப்புக்கு நாடெங்கிலும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை மாற்றிக்கொண்டு, தனியார்மய முடிவைக் கைவிட வேண்டும் என்று சங்கத்தின் 26-வது மண்டல மாநாடு வற்புறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று காணொளி வாயிலாக நடைபெற்ற சங்கத்தின் மண்டலமாநாட்டில், அரசு பொது இன்சூரன்ஸ்நிறுவனங்கள் நான்கும் இணைக்கப் பட்டு ஒரே நிறுவனமாக்கி பலப்படுத்தப்பட வேண்டும், எல்ஐசி நிறுவன பங்குவிற்பனை, பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்பனை ஆகிய தேசவிரோத முடிவுகள் கைவிடப்பட வேண்டும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும், தன்னிச்சையாகத் திணிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலனுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி, தங்குதடையற்ற ஆக்சிஜன்சப்ளை ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும், ஊரடங்குகாரணமாக வேலை மற்றும் வருமானத்தை இழந்து தவிக்கும் அனைவருக்கும் ரூ.7500/- உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.எம். புஷ்பராஜன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச் செயலாளர் வி. ரமேஷ் மண்டலக் குழுவின் அறிக்கையை முன்வைத்தார்.

 3 பெண்கள் உள்பட 13 பிரதிநிதிகள் அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் நா. சுரேஷ்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் அமைப்புகள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நடை பெறவுள்ள மே 26 கறுப்பு நாள் அனுசரிப்பிற்கு இன்சூரன்ஸ் ஊழியர்களும் முழு ஆதரவை நல்கிடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஓராண்டிற்கான மண்டல சங்கத்தின் பொறுப்பாளர்களாக, எம். புஷ்பராஜன்-தலைவர், வி. ரமேஷ்-பொதுச்செயலாளர், எம். செந்தில் நாயகம்-பொருளாளர் ஆகியோர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி நிறைவுரை யாற்றினார்.  பொது முடக்கம் காரணமாக காணொலி வாயிலாக நடைபெற்றமாநாட்டில் கணிசமான எண்ணிக்கை யில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்கள் கலந்து கொண்டனர்.

;