tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி 

தஞ்சாவூர், ஆக 1-  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.  அதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.  இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து, அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000/-  முதல் ரூ.3,00,000/- வரை  வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.  இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

குறுவை பயிர் காப்பீட்டு  கால அவகாசம் ஆக. 14 வரை நீட்டிப்பு

தஞ்சாவூா், ஆக 1-  தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2024- 25 காரிப் பருவம், குறுவை நெற்பயிர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31 உடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து தஞ்சை மாவட்ட விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட கடல்  அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது:  மற்றொருவர் தப்பியோட்டம்

தஞ்சாவூர், ஆக 1-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழுமங்குடா கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்த்குமார் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் பாரதிதாசன், ராக்கேஸ் பெர்நாத் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில், சந்தேகத்திற்கிடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நீல நிற கேனை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 383 எண்ணிக்கையிலான கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த, கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த மகன் கண்ணுச்சாமி(63) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடைய மருமகனான காளிமுத்து(40) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  இதையடுத்து, 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன உயிரின சட்டத்தின் கீழ், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, பேராவூரணி நீதிமன்றத்தில் கண்ணுசாமி ஆஜர்படுத்தப்பட்டு, தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய காளிமுத்து மீது, வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

உலக கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், ஆக 1-  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, தொழிலாளர் நலத்துறை ஆகியவை இணைந்து உலக கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி, கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சரண்யா தலைமை வகித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, கலைநிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர், குழந்தை கடத்தலை தடுக்க அனைத்து மக்களும் தயாராக வேண்டும். பேருந்து, ரயில் போன்ற பயணங்களில் சந்தேகப்படும் படியாக குழந்தைகளை கண்டால் காவல்துறை அல்லது 1098-க்கு தகவல் சொல்ல வேண்டும். மேலும், அதே இடத்தில் குழந்தைகளுடன் இருப்பவர்கள் குடும்பத்தினர் தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தீவிரமாக குழந்தை கடத்தலைத் தடுப்பதில் சட்ட அமலாக்கத் துறையினர் அடிக்கடி எதிர்கொள்ளும் சவால்கள், தற்போதுள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நீதி மற்றும் பயனுள்ள மறுவாழ்வை உறுதி செய்வது ஆகியவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.  இதில் தொழிலாளர் ஆய்வாளர் ராணி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவின் எஸ்.ஐ மருதமுத்து உள்ளிட்டோர் பேசினர்.