tamilnadu

img

சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் மகன் தோழர் நாலாயிரம் ஆறுமுகம் காலமானார்

மதுரை, மார்ச் 25-   மதுரை விளாங்குடி டெம்சி காலனியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ந.நாலாயிரம் ஆறுமுகம்  (வயது 79) வியாழனன்று காலமானார்.  இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்  தோழர் ஏ.நல்லசிவனின் மகன் ஆவார். தோழர் நாலாயிரம் ஆறுமுகம்  மதுரை  கோட்ஸ் மில் கூட்டுறவு  பண்டகசாலை செயலாளராக சிறப்பாக பணியாற்றி, தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் பாராட்டுகளை பெற்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்து மதுரை கோட்ஸ் தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்தவர்.  விளாங்குடி பகுதியில் மில் தொழிலாளர்களுக்கென சிஐடியு காலனியை மறைந்த தலைவர் தோழர் பி. எம். குமாருடன் இணைந்து உருவாக்கிக் கொடுத்தவர். விளாங்குடி பகுதியில்  கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். 

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால்  வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழனன்று பிற்பகலில் காலமானார். தோழரின் மறைவுச் செய்தியறிந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி. பரமேசுவரன், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன்,  மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ். பி. ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ. ராஜ்மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன்,  வை. ஸ்டாலின், மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி. ஜீவா மற்றும் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் நாலாயிரம் ஆறுமுகத்திற்கு சங்கரவடிவு என்ற மனைவி, நல்லசிவன் என்ற மகனும்  சாந்தினி என்ற மகளும் உள்ளனர்.  சு.வெங்கடேசன் எம்.பி. இரங்கல் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் தொலைபேசி மூலம் அவரது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். 

;