தோழர்.என்.ராமகிருஷ்ணன் குறித்து ஜி.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செல்வன், சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோர் கட்டுரைகள் அடங்கிய சிறுபிரசுரத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இதனை எஸ்.ஏ.பெருமாள் வெளியிட பி.சுகந்தி பெற்றுக்கொண்டார்.
சென்னை, டிச. 15 - கம்யூனிச இயக்க வரலாறு குறித்த என்சைக்கி ளோபீடியாவாக தோழர் என்.ராமகிருஷ்ணன் திகழ்ந்தார் என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கால மான தோழர் என்.ராமகிருஷ்ணனுக்கு நினை வஞ்சலிக் கூட்டம் சென்னையில் திங்களன்று (டிச.13) நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “மத்தியக்குழு ஒரு குழுவை அமைத்து கட்சியின் அகில இந்திய வரலாற்றை எழுதியது. அதன் முதல் தொகுதி வெளிவந்துள்ளது. கேரளாவில் குழு அமைத்து அந்த மாநில வரலாற்றை 3 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளனர். 4வது தொகுதியை இறுதி செய்ய உள்ளனர். தமிழக கட்சி வரலாற்றை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதி முதல் தொகுப்பை வெளியிட்டார்” என்றார்.
“மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தி னங்கள், கணேஷ்கோஷ், சிவவர்மா, கிஷோரி லால் போன்ற தலைவர்களுடான பழக்கம் அவரை மேலும் கட்சிப்பிடிப்பு உள்ளவராக மாற்றியது. தில்லி அலுவலகத்திலிருந்து தமிழகம் வந்தபிறகு, கட்சியின் மாவட்ட வரலாறுகள், தலைவர்களின் வர லாறுகள் என 96 நூல்களை எழுதிக் குவித்தார். கட்சியின் மீதும், மார்க்சிய தத்துவத்தின் மீதும் உள்ளார்ந்த பற்றும், உறுதியும் இருந்ததால், உண்மைகளை கண்டறிந்து என்.ராமகிருஷ்ணன் எழுதினார். அதனால்தான் அவரது எழுத்துக்களில் தவறு நிகழவில்லை. கம்யூனிச இயக்கம் இருக் கும் வரை என்.ஆரின் பங்களிப்பு மறையாது” என்று புகழஞ்சலி செலுத்தினார்.
சென்னை நகர கட்சி வரலாறு
மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் குறிப்பிடுகையில், “என்.ஆர்., சிறு பிரசுரம் எழுதி னால் கூட அதில் நுட்பமான விஷயங்கள் அடங்கி இருக்கும். கட்சியின் நவரத்தினங்கள் குறித்து அவர் எழுதிய புத்தகத்தை தவிர வேறு எந்த குறிப்பும் கிடையாது. தோழர் என்.ஆரை பின் பற்றி சென்னை நகர கட்சி வரலாற்றை எழுத வேண்டும்” என்றார்.
செம்மார்ந்த மனிதர்
“10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவரின் நூல்களை வைத்து மதுரை பல்கலைக் கழகத்தில் 4 பேர் முனைவர் ஆய்வு செய்து கொண்டுள்ள னர். ஏராளமான புத்தகங்களை எழுதிடத் திட்ட மிட்டு வைத்திருந்தார். மார்ச் மாதம் மதுரையில் நடக்க உள்ள மாநில மாநாட்டில் பாசிசம் குறித்த புத்தகத்தை வெளியிட எழுத தொடங்கி இருந்தார். எழுதுவதும், தேடலும் அவருடன் கூடப் பிறந்த வை. தன்னடக்கத்தில் இலக்கணமாக திகழ்ந்தார். கட்சி வரலாறு தொடர்பாக அகில இந்திய தலை வர்கள் முதல் அனைவரும் தொடர்பு கொள்ளும் நபராக இருந்தார். ஒரு செம்மார்ந்த மனிதரை இழந்துள்ளோம்” என்று மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் குறிப்பிட்டார்.
தன்னை முன்னிறுத்தாத தலைவர்
“தாம் எழுதிய புத்தகங்களை வெளியிடும் போது அந்த நிகழ்வில் என்.ஆர். கலந்து கொள்ள மாட்டார். எழுத்தாளர் யாருக்கும் வாய்க்காத மன நிலை அது. பொதும்பு வீரணனால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தேன் என்று தன்னிடம் குறிப்பிட்ட என்.ஆர், கடைசியாக ‘பொதும்பு வீரணன் - ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை’ என்ற நூலை எழுதியுள்ளது வியப்பாக உள்ளது. அவரது அனுப வச் செறிவு காரணமாக கட்சியின் என்சைக்கிளோ பீடியாவாக திகழ்ந்தார்” என்று தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
அறிவுக்கடல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி குறிப்பிடுகையில், “ஒருபோதும் அவர் ஞானச்செ ருக்கோடு இருந்ததில்லை. கட்சியின் இருந்த பெண் தலைவர்களை பற்றியும், மாதர் இயக்க வரலாற்றையும் எழுத வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். அதை செய்துமுடிக்கும் பெருங்கடமை உள்ளது. அந்த அறிவுக்கடல் கொடுத்த புத்தகங்க ளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்வோம்” என்றார்.
இந்நிகழ்வுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை) மற்றும் எம்.ராமகிருஷ்ணன் (சிறுபான்மை மக்கள் நலக்குழு), ப.கு.ராஜன் (பாரதி புத்தகாலயம்), எழுத்தாளர் வீ.பா.கணேசன், இரா.சிந்தன் (மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு) உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.