திமுக அணி வேட்பாளர்கள் மனு
மாநிலங்களவைத் தேர்தல்
சென்னை, ஜூன் 6 - மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டிடும் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், பாமக எம்.பி. அன்புமணி, அதிமுக எம்.பி. சந்திரசேகரன், மதிமுக எம்.பி. வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 அன்று துவங்கியது. 6 இடங்களில் 4 இடங்களுக்கு மட்டும் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். திமுக சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டனர். அதனடிப்படையில், திமுக வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களது வேட்புமனுவை சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, ஆர். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிமுக மனு தாக்கல் இதேபோல 2 இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் ம. தனபால் ஆகியோரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், வெள்ளிக்கிழமையன்று தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் ஆர். விசுவநாதன், கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஜூன் 9 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10 அன்று நடைபெறுகிறது. மனுக்களைத் வாபஸ் பெற ஜூன் 12 கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூன் 19 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.