போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், செப். 16- போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்களுக்கு, 25 மாதங்களாக பணப்பலன் வழங்காமல் காலதாமதப்படுத்தும் அரசு, உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 18 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராடும் தொழிலாளர்களை அழைத்துப்பேசி உடனே தீர்வு காண வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மைய முடிவின் அடிப்படையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மு.காந்தி, போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார். தலைஞாயிறு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா சிறப்புரையாற்றினார். கும்பகோணம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கும்பகோணம் வட்ட கிளை சார்பாக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வைத்தார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்டத் தலைவர் துரைராஜ், செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொறுப்பாளர்கள், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொறுப்பாளர்கள், போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தலைமை வட்டத் தலைவர் மகாதேவன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி ராஜதுரை கண்டன உரையாற்றினார். வட்ட பொருளாளர் ராமநாயகம் நன்றி தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய நான்கு வட்டங்களிலும் நடைபெற்றது.