அமெரிக்காவின் 50 சதவிகித கூடுதல் வரி விதிப்பால் நெருக்கடி தீவிரமாகிறது
திருப்பூரில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
உற்பத்தி முடக்கம், வேலையிழப்பு தொடங்கியது
திருப்பூர், செப். 1 – வே.தூயவன் அமெரிக்காவின் 50 சதவிகித கூடு தல் வரி விதிப்பினால் திருப்பூரில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர் வேலையிழப்புத் தொடங்கியுள்ளது.
தாங்கள் கூறும் வர்த்தக ஒப்பந்தத் தில் கையெழுத்திட இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த ஜூலை மாதக் கடைசியில் இந்திய பொருட்களுக்கு 25 சதவிகிதம் கூடு தல் வரி விதிப்பதாக அறிவித்தார். அடுத்த தாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வதை நிறுத்த வேண்டும் என மிரட்டல் விடுத்த டிரம்ப், கூடுதலாக 25 சதவிகி தம் அபராதம் விதிப்பதாக அறிவித்தார். ஆக மொத்தம் அமெரிக்கச் சந்தைக்கு இந்தியாவில் இருந்து அனு ப்பும் பொருட்களுக்கு வழக்கமான இறக்குமதி வரி சுமார் 16 சதவிகி தத்துடன், கூடுதலாக 50 சதவிகிதம் சேர்த்து மொத்தம் 66 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை அமெரிக்க அரசு திணித்துள்ளது. இந்த வர்த்தக யுத்தம் காரணமாக இந்தியாவின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள், அமெரிக்காவுக்கு ஏற்று மதி செய்யப்படுவது கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். அதில் முதன்மையாக ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி மிகப்பெரும் அடி வாங்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் திருப்பூ ரில், “வரலாறு காணாத நெருக்கடி” ஏற்படும் என்று இங்குள்ள ஏற்றுமதி யாளர்கள் உள்பட அனைத்து தரப்பி னரும் ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.
குறிப்பாக, ஆகஸ்ட் 27 அன்று இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், உடனடி பாதிப்புகள் திருப்பூ ரில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. ஏற்றுமதியாளர்கள் முதல் தொழிற் சங்கத்தினர் வரை அனைவரும் ஒரே குரலில் சொல்வது, “இந்த வரி விதிப் பின் பாதிப்புகள் முழுமையாகத் தெரி வதற்கு குறைந்தது ஒரு மாத கால மாகும். தீபாவளி பண்டிகை சமயத்தில் திருப்பூரில் பாதிப்பின் ஆழம், அதன் முழுமையான பரிமாணம், வெளிப்படை யாக உணரப்படும், என்கின்றனர். இது குறித்து ஏற்றுமதியாளர்கள், பையிங் ஏஜெண்டுகள் எனப்படும் வர்த்தக முகவர்கள், ஜாப் ஒர்க் செய்வோர், தொழிற்சங்கத்தினர் என பல தரப்பினரிடமும் விசாரித்தபோது கூறியதாவது: திருப்பூரில் கடந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி அளவு ரூ. 40 ஆயி ரம் கோடியை தொட்டது. இதில் சுமார் 35 சதவிகிதம் (சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி) அமெரிக்க சந்தைக்கு அனுப்பி யதாகும். இந்த 2025 - 26 நிதியாண்டு தொடங்கியதில் இருந்து முதல் நான்கு மாத காலத்தில் ஒரு பகுதி ஆடைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இடையே, டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு வரி விதிப்பை
அறிவித்ததில் இருந்து நிச்சயமற்ற நிலைமை ஏற்படுவதை உணர்ந்த ஏற்று மதியாளர்கள் ஆர்டர்களை உறுதிப் படுத்துவதை நிறுத்தி விட்டனர். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஆர்டர் களை மட்டும் உற்பத்தி செய்து உடனடி யாக அனுப்பி வைப்பதில் அவசர உணர் வோடு செயல்பட்டனர். அதே சமயம், டிரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடியவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கூடுதல் அபராத வரி விதிப்பைக்கூட நீக்கி விடுவார் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். முதற்கட்டமாக 25 சதவிகிதம் வரி விதிப்பு என்றபோது கூட, வர்த்த கர்கள், ஏற்றுமதியாளர்கள் சமமாக ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு, ஏதோ ஒரு வகையில் சமாளித்து விடலாம் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக் கொண்டி ருந்தனர். ஆனால், அடுத்து 50 சதவிகி தம் வரி எனும்போது, வர்த்தக விசார ணையை முழுவதுமாக நிறுத்திவிட்டனர். 2027 கோடைக் காலத்திற்கான வர்த்தக விசாரணை ஆகஸ்ட், செப்டம் பர் மாதங்களில் நடைபெறும். அதன் மூலம் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆடைகள் உற்பத்தி நடை பெறுவதற்கு ஆர்டர் கிடைத்திருக்கும். அது மொத்தமாக 100 சதவிகிதம் அள விற்கு முழுமையாக தற்போது நின்று விட்டது. வால்மார்ட் உள்ளிட்ட முன் னணி அமெரிக்க பிராண்டுகள் ஏற்கெ னவே கொடுத்த ஆர்டர்களையும் கொள்முதல் செய்யவில்லை.
புதிய ஆர்டர்களையும் நிறுத்தி விட்டனர். ஆகஸ்ட் 27 அன்று வரி விதிப்பு நடை முறைக்கு வந்த பிறகுதான் நிலைமை யின் தீவிரத்தை ஒரு பகுதி ஏற்றுமதி யாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். முந்தைய ஆர்டர்களில் தயாரிக்கப் பட்ட ஆடைகளை அனுப்புவது அப்படி யே நின்று போயுள்ளது. அமெரிக்க வர்த்தகர்கள் இப்போதைக்கு அனுப்ப வேண்டாம், நிறுத்தி வையுங்கள் என்று சொல்லி விட்டனர். முழுமையாக தயாரித்து முடித்த இதுபோன்ற ஆடைகள், சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு முடங்கிப் போயுள்ளது. இந்த ஆடைகளை வர்த்தகர்கள் வாங்கினால்தான் அதற்குரிய பணம் ஏற்றுமதியாளர்களுக்கு வந்து சேரும். எனவே, அடுத்தடுத்து ஜாப் ஒர்க் தரப்பினருக்குத் தர வேண்டிய ஜாப் ஒர்க் தொகையையும் ஏற்றுமதி யாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோக, உறுதி செய்யப்பட்ட ஆர்டர்களை செய்து அனுப்பு வதற்காக, நூல் கொள்முதல் செய்து நிட்டிங் துணி தயாரிப்பது, டையிங் சாய மேற்றுவது, கட்டிங், தையல் என அடுத்தடுத்த பல்வேறு நிலைகளில் உற் பத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த தையும் அப்படி அப்படியே நிறுத்தி விட்டனர். இதனால் நிட்டிங், சாய மேற்றுதல், காம்பேக்டிங், எம்ப்ராய்டரி என ஜாப் ஒர்க் நிறுவனங்களில் உடனடி யாக உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 30 முதல் 40 சதவிகித மான ஜாப் ஒர்க் நிறுவனங்க
ள் கடந்த ஓரிரண்டு நாட்களில் நிறுத்தப் பட்டுள்ளன. இதனால் மட்டும் குறைந்த பட்சம் 20 சதவிகிதம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் வரை உடனடியாக வேலை குறைப்பை சந்தித்துள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், திருப்பூரில் வேலை யிழப்பு என்பது பல அம்சங் களைக் கொண்டது. தற்போது வெளிப் படையாக இது தெரியாவிட்டாலும், ஆங்காங்கே உடனடியாக வேலை அளவு குறைவது, வருமானம் குறை வது எனத் தொடங்கியுள்ளது. ஏற்றுமதி அளவில் 35 சதவிகிதம் பாதிப்பு என்றால், குறைந்தபட்சம் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து உள்ளது என்றனர். ஆடை தயாரிப்பில் ஈடுபடுத்தப் படும் அனைத்து துணைப் பிரிவுகளை யும் உள்ளடக்கி ஒரே கூரையின் கீழ் இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களது உற்பத்தி நடவடிக்கையை அப்படியே நிறுத்திவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதி யத்தையும் சேர்த்துக் கொடுத்து, அடுத்து தகவல் சொல்லும் வரை வேலைக்கு வர வேண்டாம் எ
ன நிறுத்தி விட்டதாக ஏற்றுமதியாளர் தரப்பில் தெரிவிக்கின்றனர். எல்லா தொழில் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வைத்திருக்கக்கூடிய ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களில் வரும் தகவல்கள் எல்லாம் புலம்பல் களாகவே இருக்கின்றன. எதிர்காலம் என்னாகுமோ என்ற அவர்களின் அச்சம் கலந்த புலம்பல்களை கேட்க முடியவில்லை என்று ஏற்றுமதியாளர் ஒருவரே வேதனையை வெளிப்படுத்து கிறார். சாயத் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறுகையில், திருப்பூரின் அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களி லும் வேலையிழப்பு தொடங்கி விட்டது. வரக்கூடிய ஒரு மாத காலத்தில் நம்மால் கணிக்க முடியாதபடி நிலைமை கள் மாற்றமடையும் என்றார். எல்லாத் தரப்பினரும் ஒரே குரலில் சொல்வது, இப்போதுதான் பாதிப்பின் தொடக்கத்தை சந்திக்கி றோம்.
அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும். ஒரு மாத காலத்தில் உச்சக்கட்ட நெருக்கடி யைச் சந்திப்போம் என்பது தான். அமெரிக்க அரசு ஏதோ ஒரு வகையில் வரிக் குறைப்பு செய்தால் நாம் தப்பிக்கலாம். அதுவும் கூட இப்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சில மாத காலம் பிடிக்கும். எனவே, ஒன்றிய அரசு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீடேற முடியும். இல்லாவிட்டால் இதன் விளைவுகள் மிகக் கடுமையான தாக இருக்கும் என்று திருப்பூர் தொழில் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா கூட்டணியினர் இன்று ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பால் பின்னலாடைத் தொழில் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க வரி விதிப்பை நீக்க வலியுறுத்தியும், திருப்பூரில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ஒன்றிய மோடி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி கட்சியினர், செவ்வாயன்று (செப். 2) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை திருப்பூரில் நடத்துகின்றனர். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்ற னர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு திருப்பூரின் குரலை ஒலிக்க உள்ளனர்.