அதிராம்பட்டினத்தில் சிபிஎம் கிளை அமைப்பு
தஞ்சாவூர், ஆக. 21- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினத்தில் சிபிஎம் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் பேசினார். கிளைச் செயலாளராக எம். சுப்பிரமணியன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், விபத்தினை தவிர்க்கும் வகையில் பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குளச்சல் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை புலி இறால்
நாகர்கோவில். ஆக. 21- குளச்சல் விசை படகில் மீன் பிடிக்க சென்றவர்களிடம் சிக்கிய புலி இறால் மீன் ரூ.8 ஆயிரத்திற்கு ஏலம் போனது. குமரி மாவட்டம், குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆகஸ்ட் 19 அன்று ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளது.இதனால் இந்த மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
முளகுமூடு ஜோசப் பள்ளியில் நாளை மருத்துவ முகாம்
நாகர்கோவில்,ஆக.21- தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குட்பட்ட முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 23 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. கல்குளம் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர். ்ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார். முகாமில் முளகுமூடு, வாள்வச்சகோஷ்டம், கப்பியறை, திருவிதாங்கோடு உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களும், மருதூர்குறிச்சி, திக்கணங்கோடு, ஆத்திவிளை உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட மக்களும் மற்றும் கல்குளம் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி
தஞ்சாவூர், ஆக. 21- திருச்சி மத்திய மண்டல அஞ்சல் தலைவர் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் புதிதாக வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மொபைல் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் சேவையாக அமைகிறது. இந்த மொபைல் சார்ஜிங் நிலையம், அஞ்சல் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில், வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு வகை மொபைல் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்டுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதற்கு அஞ்சல் துறை கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகம், பல்வேறு அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதுடன், இதுபோன்ற கூடுதல் வசதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற தகவலை தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கு. தங்கமணி தெரிவித்துள்ளார்.